பெற்றோருக்குப் பிடிக்காவிட்டால் மனைவியை தலாக் சொல்லலாமா?

தகுந்த நியாயமான காரணத்துடன் சொன்னால் மட்டும் தலாக் செய்யலாம்.

கணவன் இடத்தில் நல்ல விதமாக நடக்கும் எந்த குறையும் சொல்ல முடியாத ஒரு மனைவியை கணவனின் தாய் தலாக் செய்துவிடு என்று சொன்னால் உடனே தலாக் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். இதற்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதில் தேவை.

நியாயமான காரணம் இல்லாமல் கணவன் மனைவியைப் பிரிப்பது இஸ்லாத்தில் வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. இது ஷைத்தானுடைய செயல் என்றும் இறை மறுப்பாளர்களின் குணம் என்றும் மார்க்கம் கூறுகின்றது.

ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். அவ்விரு வானவர்களுக்கும் (சூனியக் கலை) அருளப்படவில்லை. ஸுலைமான் (ஏக இறைவனை) மறுக்கவில்லை. பாபில் நகரத்தில் சூனியக்கலையை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே மறுத்தனர். “நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே மறுத்து விடாதே!” என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதையே அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது.

அல்குர்ஆன் (2 : 102)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்) நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான். அவர்களில் மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற(ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான்.

அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி) வந்து “நான் இன்னின்னவாறு செய்தேன்” என்று கூறுவான். அப்போது இப்லீஸ், “(சொல்லிக் கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை” என்று கூறுவான்.

பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, “நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டு வைக்கவில்லை” என்று கூறுவான்.

அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச் செய்து, “நீதான் சரி(யான ஆள்)” என்று (பாராட்டிக்) கூறுவான்.

இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

முஸ்லிம் (5419)

எனவே நியாயமின்றி கணவன் மனைவியைப் பிரிப்பது பெரும் குற்றமாகும். பாவமான காரியங்களைச் செய்யுமாறு பெற்றோர்கள் கூறினால் அதற்குப் பிள்ளைகள் கட்டுப்படக் கூடாது என மார்க்கம் கூறுகின்றது.

 

தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தியுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.

(அல் குர்ஆன் 29:8)

பெற்றோர்கள் தகுந்த காரணமின்றி மனைவியை தலாக் செய்யுமாறு கூறினால் மகன் அவர்களுக்குக் கட்டுப்பட்டு தம் மனைவியை தலாக் செய்ய வேண்டும் என்று கூறுவோர் பின்வரும் ஹதீஸை இதற்கு ஆதாரமாகக் குறிப்பிடுகின்றனர்.

 

ஒரு பெண் எனக்கு மனைவியாக இருந்தாள். நான் அவளை நேசித்தேன். ஆனால் என் தந்தை (உமர்) அவளை வெறுத்தார். அவளை நான் தலாக் விட வேண்டும் என எனக்கு உத்தரவிட்டார். இதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை. நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இதைத் தெரிவித்தப் போது அவர்கள் அப்துல்லாஹ் பின் உமரே உனது மனைவியை நீ தலாக் செய்துவிடு என்றார்கள். 

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி).

நூல் : திர்மிதீ (1110)

இந்தச் சம்பவத்தை மட்டும் மேலோட்டமாகப் பார்த்தால் இவர்கள் கூறுவது சரி என்பது போல் தெரிகின்றது. ஆனால் மேல நாம் சுட்க்காட்டியுள்ள ஆதாரங்களுக்கு இச்செய்தி முரண்படும் நிலை ஏற்படும். எனவே மற்ற ஆதாரங்களுக்கு முரணில்லாத வகையில் இச்செய்தியைச் சரியான அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும்.

உமர் (ரலி) அவர்கள் தம் மறுமகளை வெறுத்ததாக மேற்கண்ட செய்தி கூறுகின்றது. உமர் (ரலி) அவர்களின் இந்த வெறுப்புக்கு என்ன காரணம் என்பது இந்தச் செய்தியில் சொல்லப்படவில்லை. ஆனால் கண்டிப்பாக இதற்கு ஏதாவது காரணம் இருந்திருக்க வேண்டும்.

உமர் (ரலி) அவர்கள் இயற்கையாகவே தீமைகளைக் கடுமையாக வெறுக்கும் குணம் கொண்டு, நேர்மைக்கும் நியாயத்துக்கும் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்கள்.

இப்படிப்பட்ட சிறந்த குணமுள்ள இந்த நபித்தோழர் எந்தக் காரணமும் இல்லாமல் மறுமகளை தலாக் செய்யுமாறு கூற மாட்டார். அவர்களுடைய வெறுப்புக்குத் தகுந்த காரணம் இருக்கும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் உமர் (ரலி) கூறியதைப் போன்றே அப்பெண்ணை விவாகரத்துச் செய்துவிடுமாறு கூறியுள்ளார்கள்.

எனவே மார்க்க அடிப்படையில் அப்பெண்ணை விவாகரத்துச் செய்வதற்குத் தகுந்த காரணம் இருந்ததால் தான் அவளை தலாக் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் கூறியிருப்பார்கள் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு விளங்கிக் கொண்டால் இச்செய்தி மேலே நாம் சுட்டிக்காட்டிய வசனத்துடனும் நபிமொழியுடனும் முரண்படும் நிலை ஏற்படாது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed