பெற்றோருக்காக ஹஜ், உம்ரா செய்வது கூடுமா?

தாய் தந்தையர் உயிரோடு இருப்பின் அவர்களுக்காக ஹஜ் உம்ரா செய்யலாமா?

பெற்றோர்கள் ஹஜ் கடமையான நிலையில் ஹஜ்ஜை நிறைவேற்றாமல் மரணித்துவிட்டாலோ, அல்லது ஹஜ் கடமையாகி வயோதிகத்தின் காரணமாக அவர்களால் ஹஜ் செய்ய முடியாமல் போனாலோ அவர்களுடைய ஹஜ் கடமையை நிறைவேற்றுவது பிள்ளைகள் பொறுப்பாகும். பின்வரும் ஹதீஸ்கள் இதற்கு ஆதாரமாக உள்ளன.

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

ஃபள்ல் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்தபோது கஸ்அம்’ எனும் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபள்ல் அப்பெண்ணைப் பார்க்க, அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்) ஃபள்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள். பிறகு அப்பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் எனது வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா?’ எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “ஆம்!’ என்றார்கள். இது கடைசி ஹஜ்ஜின்போது நிகழ்ந்தது.

நூல் : புகாரி 1513

புரைதா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, “நான் என் தாயாருக்கு ஓர் அடிமைப் பெண்ணைத் தானமாக வழங்கியிருந்தேன். என் தாயார் இறந்துவிட்டார். (இப்போது அந்த அடிமைப் பெண் எனக்கே கிடைத்துவிட்டார். இந்நிலையில் தானத்திற்குரிய நற்பலன் எனக்கு உண்டா?)” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(தானம் செய்ததற்குரிய) நற்பலன் உனக்கு உறுதியாகிவிட்டது.

வாரிசுரிமை, அவ்வடிமைப் பெண்ணை உனக்கே மீட்டுத் தந்துவிட்டது” என்று சொன்னார்கள். “என் தாயார் மீது ஒரு மாத நோன்பு (கடமையாகி) இருந்தது. அவர் சார்பாக நான் நோன்பு நோற்கலாமா?” என்று அப்பெண்மணி கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் சார்பாக நீ நோன்பு நோற்றுக் கொள்” என்றார்கள். “என் தாயார் (இதுவரை) அறவே ஹஜ் செய்யவில்லை. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?” என்று அப்பெண்மணி கேட்டதற்கு, “அவருக்காக நீ ஹஜ் செய்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 1939

பெற்றோர்கள் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தால் ஹஜ் செய்வது அவர்களின் மீது கடமையாகிவிடும். இந்நிலையில் அவர்களால் ஹஜ்ஜை நிறைவேற்றாமல் போனால் அவர்களது சார்பில் அவர்களுடைய பொறுப்பாளர்கள் அதாவது உறவினர்கள் அதை நிறைவேற்ற வேண்டும்.

இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள் :

ஜுஹைனா கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ந்து அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?’ என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய். உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய். எனவே அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன்” என்றார்கள்.

நூல் : புகாரி 1852

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “(அல்லாஹ்வின் தூதரே!) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்துகொண்டு (அதை நிறை வேற்றாமல்) இறந்துவிட்டார்” என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “உன் சகோதரிக்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய்?” என்று கேட்டார்கள். அவர், “ஆம் (நான்தான் நிறைவேற்றுவேன்)” என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று! கடன்கள் நிறைவேற்றப்பட அவனே அதிக உரிமை படைத்தவன்” என்றார்கள்.

நூல் : புகாரி 6699

பெற்றோர்களுக்காக பிள்ளைகள் உம்ரா செய்வதற்கும் ஆதாரம் உள்ளது. எனவே பெற்றோர்களின் சார்பில் பிள்ளைகள் உம்ரா செய்யலாம்.

அபூ ரஸீன் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தை வயது முதிர்ந்த பெரியவராக இருக்கின்றார். அவரால் ஹஜ் செய்யவோ, உம்ரா செய்யவோ, பயணிப்பதற்கோ முடியாது என்றேன். உனது தந்தைக்காக நீ ஹஜ் செய்துகொள். உம்ராவும் செய்துகொள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : திர்மிதி 852

ஹஜ், உம்ரா செய்வதற்கு பெற்றோர்களால் முடியாமல் போனால் அவர்கள் சார்பில் பொறுப்பாளர்கள் நிறைவேற்ற முடியும். பெற்றோர்களுக்குச் சக்தி இருந்தால் இவ்வணக்கத்தை அவர்களே நிறைவேற்ற வேண்டும். உறவினர்கள் நிறைவேற்றக் கூடாது.

ஹஜ் என்பது ஒருவர் மீது கடைமையான நிலையில் அவர் ஹஜ்ஜை மேற்கொள்ளும் போது அனுமதிக்கப்பட்ட மூன்று வகையான ஹஜ்ஜில், தமத்தூ மற்றும் கிரான் ஆகிய இருவகையான ஹஜ்ஜுகளில் உம்ராவையும் இணைத்து செய்யும் போது செய்யக்கூடிய உம்ராவை பற்றித்தான் இந்த நபித்தோழர் கேள்வி கேட்கின்றார். அப்போது செய்யும் உம்ராவை பற்றித்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் குறிப்பிடுகின்றார்கள்.

எனவே, ஒருவர் தனது தாய் தந்தையருக்காக, உம்ராவை மட்டும் தனித்துச் செய்வதற்கு இந்த நபிமொழியை ஆதாரமாகக் காட்டக்கூடாது. மேலும், ஒருவர் தனது தாய் தந்தையருக்காக, உம்ராவை மட்டும் தனித்துச் செய்வதற்கு எந்த ஆதாரத்தையும் காண முடியவில்லை. தனித்து உம்ரா செய்தல் கட்டாயக் கடமை அல்ல.

சக்தி பெறாதவர் மீது ஹஜ் கடமையா?

ஹஜ் செய்வதைப் பற்றி, அல்லாஹ் தனது திருமறையில் கூறும் போது,

“அதில் தெளிவான சான்றுகளும், மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை”

திருக்குர்ஆன் 3:97

வயது முதிர்ந்து. உடல் பலவீனமடைந்த நிலையில் இருக்கும் ஒருவர் ஹஜ் செய்ய வேண்டும் என்றால், அதற்குரிய சக்தி அவரிடத்தில் இல்லை. அப்போது இவருக்குத்தான் ஹஜ் செய்ய சக்தியில்லையே, இவர் மீது ஹஜ் கடமையாகுமா? என்றால், இவர் மீது ஹஜ் கடமையில்லை.

அதே நேரத்தில் அவர் உடல் வலிமையும், பொருளாதாரத்தையும் பெற்று திடகாத்திரமாக இருந்த நிலையில் அவர் மீது ஹஜ் கடமையாகி, அவர் அப்போது ஹஜ் செய்யாமலிருந்து இருப்பாரேயானால், அவர் சக்தி பெற்றிருந்த நிலையில் ஹஜ் செய்யாமல் விட்டதை, அவர்களுடைய வாரிசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கண்ட ஹதீஸ்களில் குறிப்பிடுகிறார்கள்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed