பெருந்தன்மையை மேற்கொள்வோம்

அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். தம்முடன் அறிவீனர்கள் உரையாடும் போது ஸலாம் என்று கூறிவிடுவார்கள்.

(அல்குர்ஆன்:25:63.)

பெருமை, கர்வம் கொண்டு பிறரைத் தாழ்வாகக் கருதாமல் எல்லோரிடத்திலும் பழக வேண்டும் என்பதைக் குறிப்பிட்டுவிட்டு, அவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று இறைவன் நமக்கு விளக்குகின்றான்.

வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். எங்கள் செயல்கள் எங்களுக்கு உங்கள் செயல்கள் உங்களுக்கு உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை நாங்கள் விரும்பமாட்டோம் எனவும் கூறுகின்றனர்.

(அல்குர்ஆன்:28:55.)

மேற்கண்ட வசனத்தில் நம்மைப் பற்றிய அவப்பேச்சுக்களைப் பிறர் பேசும் போது அதற்காக வருந்தாமல் அதை அலட்சியப்படுத்துமாறு நமக்கு திருமறைக் குர்ஆன் போதிக்கின்றது. ஆனால் நம்மில் பலரோ அதை நினைத்து நினைத்து வாடுவதைக் காண்கின்றோம். இது போன்ற சமயங்களில் நாம் எவ்வாறெல்லாம் நடக்க வேண்டும் என்பதை நமக்கு  இஸ்லாம் போதிக்கின்றது

பெருந்தன்மையை மேற்கொள்ள வேண்டும்

பெருந்தன்மையை மேற்கொள்வீராக நன்மையை ஏவுவீராக அறிவீனர்களை அலட்சியம் செய்வீராக 

(அல்குர்ஆன்:7:199.)

பொறுமையை மேற்கொள்ள வேண்டும்.

நன்மையும், தீமையும் சமமாகாது நல்லதைக் கொண்டே பகைமையை தடுப்பீராக எவருக்கும் உமக்கும் பகைமை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகிவிடுவார். பொறுமையை மேற்கொண்டோர் தவிர மற்றவர்களுக்கு இது (இந்தப்பண்பு) வழங்கப்படாது. மகத்தான பாக்கியம் உடையவர் தவிர மற்றவர்களுக்கு இது வழங்கப்படாது. 

(அல்குர்ஆன்:41: 34,35.)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ஆதாரமில்லாமல் பிறரைச்) சந்தேகிப்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது பெரும் பொய்யாகும். (பிறரைப் பற்றித்) துருவித்துருவிக் கேட்காதீர்கள்; (அவர்களின் அந்தரங்கம் பற்றி) ஆராயாதீர்கள். (நீங்கள் வாழ்வதற்காகப் பிறர் வீழ வேண்டுமெனப்) போட்டியிட்டுக் கொள்ளாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்; கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.

நூல்:முஸ்லிம்-5006

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு முறை நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அப்போது கிராமவாசியொருவர் வந்து பள்ளிவாசலுக்குள் நின்று சிறுநீர் கழித்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் ‘நிறுத்து! நிறுத்து!’ என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(அவர் சிறுநீர் கழிப்பதை) இடைமறிக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள்’’ என்று கூறினார்கள்.

எனவே, நபித்தோழர்கள் அவரை விட்டுவிட்டனர். அவர் சிறுநீர் கழித்து முடித்தார். பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  அழைத்து “இந்தப் பள்ளிவாசல்கள் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தல் ஆகியவற்றுக்குரிய இடமல்ல. இவை இறைவனை நினைவு கூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற்கும் குர்ஆனை ஓதுவதற்கும் உரியதாகும்‘’ என்றோ, அல்லது இந்தக் கருத்திலமைந்த வேறு வார்த்தைகளையோ அவரிடம்  கூறினார்கள். பிறகு மக்களில் ஒருவரிடம் ஒரு வாளித் தண்ணீர் கொண்டு வரச்சொல்லிலி அதை அந்தச் சிறுநீர் மீது ஊற்றச் செய்தார்கள்.

நூல்: முஸ்லிம் 480

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஓர் அடக்கவிடம் (கப்று) அருகில் அழுதுகொண்டிருந்த ஒரு பெண்ணை நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றபோது, “அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! பொறுமையாக இரு!’’ என்றார்கள். அதற்கு அப்பெண், ‘‘என்னைவிட்டு அகன்று செல்வீராக! எனக்கேற்பட்ட இத்துன்பம் உமக்கேற்படவில்லை’’ என்று -நபி (ஸல்) அவர்கள் யாரென அறியாமல்- கூறினாள். அ(வளிடம் உரையாடிய)வர் நபியெனக் கூறப்பட்டதும் அப்பெண் நபி (ஸல்) அவர்கள் இருக்குமிடத்திற்கு வந்தாள். –அங்கே நபியவர்களுக்கு காவலாளிகள் எவரும் இருக்கவில்லை- நான் உங்களை (யாரென) அறியவில்லை’’ என நபி (ஸல்) அவர்களிடம் கூறினாள். “பொறுமை என்பது, துன்பம் ஏற்பட்டவுடன் (கைக் கொள்வதே)’’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி-1283

 

 

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *