பெயர் வைத்தலும் முடியை களைதலும்

அகீகாக்கொடுக்கும் போதே குழந்தைக்கு பெயர் வைத்து அதன் முடியை களைவது நபிவழியாகும்.

ஒவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது (பிறந்த) ஏழாவது நாளில் (ஆட்டை) அதற்காக அறுக்கப்படும். அதன் முடி களையப்பட்டு அதற்கு பெயர் சூட்டப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : சமுரா பின் ஜன்துப் (ரலி),

நூல் : அபூதாவூத் (2455)

தலைமுடி முழுவதையும் களைய வேண்டும்

குழந்தையின் முடியை களையும் போது பாதியை மளித்து பாதியை விட்டுவிடக்கூடாது. அறைகுறையாக மளிப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

தலையின் ஒரு பகுதி சிரைக்கப்பட்டு மறுபகுதி சிரைக்கப்படாமலிருந்த ஒரு சிறுவனை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அப்போது இவ்வாறு செய்வதை அவர்கள் தடைசெய்தார்கள். (சிரைத்தால்) முழுமையாக சிரைத்துவிடுங்கள். (முடியை வைக்க நினைத்தால்) முழுமையாக விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள்

அறி : இப்னு உமர் (ரலி),

நூல் : நஸயீ (4962)

பிறந்த குழந்தையின் மண்டை ஓடு மிக எளிதாக இருக்கும் நிலையில் அகீகா ஏன்?

அகீகாவுடன் தலைமுடி மழிப்பது தொடர்பான செய்தி தாங்கள் குறிப்பிடுவது போல் புகாரி, முஸ்லிமில் இல்லை. முஸ்னத் அஹ்மதில் 19337வது ஹதீஸாக இது பதிவு செய்யப் பட்டுள்ளது.

ஏழு நாள் குழந்தையின் மண்டை ஓடு மெல்லியதாக இருக்கும் என்பது இந்தக் காலத்தில் மட்டுமல்ல! நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் ஏழு நாள் குழந்தையின் மண்டை ஓடு அவ்வாறு தான் இருந்திருக்கும். எனவே நடைமுறை சாத்தியமில்லாத ஒன்றை நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் செய்யுமாறு கூறியிருக்க மாட்டார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இன்றும் இந்த ஹதீஸை நமது சகோதரர்கள் நடைமுறைப் படுத்தியே வருகின்றார்கள். இதனால் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.

எனினும் தங்களின் குழந்தைக்கு அவ்வாறு ஏற்படும் என்று நீங்கள் கருதினால் அல்லது இந்தக் கட்டத்தில் முடியை மழிக்க வேண்டாம் என்று மருத்துவர் ஆலோசனை வழங்கினால் அதையும் மீறி இந்த ஹதீஸைச் செயல்படுத்தியாக வேண்டும் என்று மார்க்கம் எந்த நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்தவில்லை.

“ஒன்றைச் செய்ய வேண்டாமென நான் உங்களுக்குத் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு நான் உங்களுக்குக் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவுக்குச் செய்யுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் செய்தி புகாரியில் 7288வது ஹதீஸாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. “எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்” (அல்குர்ஆன் 2:286) என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. எனவே குழந்தைக்கு ஏதும் ஆபத்து வந்து விடக்கூடாது என்று பயந்து ஏழாம் நாளில் தலைமுடியை மழிக்காமல் இருந்தால் அது மார்க்க அடிப்படையில் தவறில்லை.

குறிப்பு: 2004 ஏப்ரல் மாத ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *