பெண்கள் வெளியில் செல்லும் போது பேண வேண்டிய ஒழுங்குமுறைகள்
தேவைகளுக்காகப் பெண்கள் வெளியில் சென்றாலும் மார்க்கம் போதிக்கிற ஒழுங்கு முறைகளைப் பேணித்தான் செல்ல முடியும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இதைப் பற்றி நபியவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள். ஆடையணிந்தும் நிர்வாணமாக இருக்கும் பெண்களைப் பற்றி நபியவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். இதைப் பல வகையில் இன்று பார்க்கிறோம். இருப்பினும் இதை மூன்றாகப் பிரித்து விளங்கலாம்.
மெல்லிய ஆடைகள், அதாவது உடல் முழுவதும் மறைத்து இருந்தாலும் காட்சியாக்கப்படும் நிலையில் உள்ள ஆடைகள், அரைகுறையாக மறைப்பது, அதாவது முன் கை, முகம், கால் பாதம் தவிர மறைய வேண்டிய மற்ற பகுதிகளில் சிலதை மறைத்து சிலதை வெளியில் தெரிகிற மாதிரி அணிகின்ற சேலை, குட்டைப் பாவாடை போன்ற ஆடைகள், இறுக்கமான ஆடைகளை அணிவது, அதாவது உடல் முழுவதும் கணத்த துணியால் மூடினாலும் இறுக்கமாக இருக்கும் பட்சத்தில் உடல் உறுப்புக்கள் தெரியும் அளவில் அணியப்படுகிற ஆடைகள். இவைகள் அனைத்தும் அந்நிய ஆண்களை ஈர்க்க்கும் தடைசெய்யப்பட்ட ஆடை முறைகளாகும்.
அதே போன்று வெளியில் செல்லும் போது பெண்களின் நடை பிறரை ஈர்க்கின்ற வகையில் இருக்கவே கூடாது. பிறரை ஈர்க்கும் வகையில் சாய்ந்து நெழிந்து நடப்பது தவறானது. அதனைத் தமிழில் தளுக்கி, மினுக்கி நடப்பது என்பார்கள். இதுபோன்ற நிலையில் பெண்கள் வெளியில் செல்வது கூடாது. இவற்றையெல்லாம் நபியவர்கள் கண்டிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அவ்விரு பிரிவினரை நான் பார்த்ததில்லை. (முதலாம் பிரிவினர்) பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக் கொண்டு மக்களை அடி(த்து இம்சி)க்கும் கூட்டத்தார்.
(இரண்டாம் பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்தபடி (தளுக்கி குலுக்கி கர்வத்துடன்) நடந்து (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தம் பக்கம் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களின் தலை (முடி) சரிந்து நடக்கக்கூடிய கழுத்து நீண்ட ஒட்டகத்தைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) அதன் வாடையைக்கூட நுகரமாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு தொலைவிலிருந்து வீசிக் கொண்டிருக்கும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5487
அதே போன்று வெளியில் செல்லும் போது பெண்களின் பேச்சுக்கள் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்பது போன்று இருக்க வேண்டும். பேச்சில் ஒரு மிரட்டல் தொணி இருக்க வேண்டும். கொஞ்சல், குழைவுத் தன்மை இருக்கவே கூடாது. பேச்சில் இழுவை இருக்கக் கூடாது. ஒரு பெண்ணின் பேச்சை பிற அந்நிய ஆண்கள் வெறுக்கத்தக்க வகையில் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ரசிக்கத்தக்க வகையில் இல்லாதிருக்க வேண்டும்.
நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்
(அல்குர்ஆன் 33:32)