பெண்கள் மொட்டை அடித்தல், முடியைக் குறைத்தல் கூடுமா?

நீங்கள் பெண்கள் தலைமுடியைக் குறைத்துக் கொள்வது பற்றி கேட்டாலும் குறைத்துக் கொள்வதைப் பற்றியும் மொட்டை அடித்துக் கொள்வது பற்றியும் சேர்த்தே விளக்குவது நல்லதெனக் கருதுகிறோம்.

பொதுவாகப் பெண்கள் தலைமுடியைக் குறைத்துக் கொள்வதற்கோ, முழுமையாக மழித்துக் கொள்வதற்கோ மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை.

ஹஜ், உம்ராவை முடித்த பின் இஹ்ராமில் இருந்து விடுபடுவதன் அடையாளமாக தலையை மழித்துக் கொள்ள வேண்டும்; முடியாவிட்டால் சிறிதளவு முடியைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது

அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பலிப்பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள்! உங்களில் நோயாளியாகவோ, தலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பலியிடுதல் உண்டு.

திருக்குர்ஆன் 2:196

அல்லாஹ் தனது தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மையாக்கி விட்டான். (எனவே) அல்லாஹ் நாடினால் நீங்கள் பாதுகாப்பாகவும், உங்கள் தலைகளை மழித்தும், தலை முடியைக் குறைத்தும், அஞ்சாதும் மஸ்ஜிதுல் ஹராமில் நுழைவீர்கள். நீங்கள் அறியாததை அவன் அறிவான். இது அல்லாத சமீபத்திய வெற்றியையும் அவன் ஏற்படுத்தி விட்டான்.

திருக்குர்ஆன் 48:27

தலைமுடியை மழிக்கவோ குறைக்கவோ செய்யலாம் என்று இவ்வசனத்தில் இருந்து விளங்க முடிந்தாலும் இரண்டில் தலையை மழிப்பது தான் சிறந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்

1726,1727 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜின் போது தலையை மழித்தார்கள். அவர்கள், இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக! எனக் கூறியதும் தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும் என்றார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள்,

இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக! எனப் பிரார்த்தித்தார்கள். உடனே தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்….

என்றனர். நபி (ஸல்) அவர்கள் முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும் (கருணை புரிவாயாக!) என்று கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பின்படி தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! என்று ஒரு தடவையோ இரண்டு தடவையோ கூறியதாக உள்ளது.

இன்னுமொரு அறிவிப்பில் நான்காவது தடவையில், முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்…. எனக் கூறியதாக உள்ளது.

புஹாரி 1727

ஹஜ்ஜை அல்லது உமராவை முடிக்கும் போது தலையை மழிப்பது சிறந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினாலும் இதில் பெண்களுக்கு விதி விலக்கு அளித்துள்ளனர்.

தலையை மழித்துக் கொள்வது பெண்கள் மீது இல்லை. (சிறிதளவு மயிரைக்) குறைத்துக் கொள்வதே அவர்கள் மீது உள்ளது” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: அபூதாவூத் 1694

அவர்கள் மீது மழித்தல் இல்லை என்ற சொல் அவர்கள் மீது அவசியம் இல்லை என்ற கருத்தைத் தான் தரும். அவர்களுக்கு அனுமதி இல்லை என்ற கருத்தைத் தராது.

ஹஜ் முடித்த பின் அவர்கள் மொட்டை அடிக்க வேண்டும் என்பதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மார்க்கக் கட்டளையாகப் பிறப்பித்தால் அது பெண்களில் அதிகமானவர்களுக்கு விரும்பத்தக்கதாக இருக்காது. எனவே தான் அவர்கள் மீது மழித்தல் அவசியம் இல்லை என்று கூறப்படுகிறது.

அவர்கள் விரும்பி தலையை மழித்துக் கொள்வது குற்றமாக ஆகாது. இதனால் தான் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் மனைவி மைமூனா (ரலி) அவர்கள் ஹஜ் முடித்து தமது தலையை மழித்துள்ளனர்.

நூல் இப்னு ஹிப்பான் 3454

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்குப் பின் மைமூனா (ரலி) ஹஜ் செய்து விட்டு அவர்கள் மொட்டை அடித்திருந்த நிலையில் மரணித்தார்கள் என்று மேற்கண்ட் ஹதீஸில் கூறப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின் இது நடந்துள்ளதால் இதை ஆதாரமாக நாம் கூறவில்லை. கூடுதல் தகவலுக்காகக் குறிப்பிடுகிறோம்.

மேலும் ஹஜ்ஜுடன் தொடர்பு இல்லாமல் பெண்கள் பொதுவாக தலையை மழிப்பது பற்றி இந்த ஹதீஸ் பேசவில்லை.

பெண்கள் தலையை மழிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் இருந்தாலும் அவை அனைத்துமே பலவீனமானவையாக உள்ளன.

எனவே பெண்கள் பொதுவாகத் தலையை மழிக்க விரும்பினால் அவர்கள் மழித்துக் கொள்ளலாம்.

ஹஜ்ஜை முடித்த பின் அவர்கள் தலையை மழிப்பது வலியுறுத்தப்படவில்லை. சிறிது முடியைக் குறைத்துக் கொள்வதே போதுமானது. ஆனால் ஒரு பெண் ஹஜ்ஜை முடித்து தலையை மழித்தால் அதைத் தடுக்கும் வகையில் இந்த ஹதீஸின் வாசகம் அமையவில்லை.

தலை முடியைக் குறைப்பதற்கும் ஹதீஸ்களில் எந்தத் தடையும் இல்லை. மேற்கண்ட ஹதீஸில் ஹஜ்ஜை முடித்து பெண்கள் தலை முடியைக் குறைப்பதே போதுமானது என்று கூறப்படுவதால் தலை முடியை பெண்கள் குறைக்கலாம் என்பது தெரிகிறது.

533 அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் ஆயிஷா (ரலி) அவர்களுடைய பால்குடிச் சகோதரர் ஒருவரும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்களுடைய சகோதரர், நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காகக் குளித்த முறை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டார். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு “ஸாஉ’ அளவுள்ள பாத்திரம் ஒன்றைக் கொண்டு வரச் சொல்லி குளித்துக் காட்டினார்கள். அப்போது எங்களுக்கும் அவர்களுக்குமிடையே திரை ஒன்றிருந்தது. தமது தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றினார்கள். நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர், காதின் சோனைவரை இருக்கும் அளவிற்குத் தம் தலை முடியிலிருந்து கத்தரித்து எடுத்துவிடுவார்கள்.

நூல் : முஸ்லிம் 533

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியர் தங்களின் முடியை காது சோனைக்கு மேல் வெட்டிவிடும் வழக்கமுடையவர்களாக இருந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே இப்படி நடந்தார்களா? அவர்களின் மரணத்திற்குப் பிறகு இப்படி நடந்தார்களா என்று கூறப்படவில்லை.

அனைத்து மனைவியரும் இப்படி இருந்துள்ளதால் வழக்கமுடையவர்களாக என்று கூறப்படுவதால் நபிகள நாயகம் (ஸல்) காலத்தில் இருந்தே இந்த வழக்கம் இருந்திருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே இப்படி நடந்திருந்தால் பெண்கள் தலைமுடியைக் குறைத்துக் கொள்வதற்கு இது மற்றொரு ஆதாரமாக அமையும்.

இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் அவர்களின் மனைவையர் ஏற்படுத்திக் கொண்ட வழக்கம் என்று கருதுவோர் இதை கூடுதல் தகவலாக எடுத்துக் கொள்ளலாம்.

பெண்கள் தமது விருப்பத்துக்கு ஏற்ப முடியைக் குறைத்துக் கொள்ளவோ மொட்டை அடித்துக் கொள்ளவோ மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *