பெண்கள் பாங்கு சொல்லலாமா?

பாங்கில் இரண்டு வகைகள் உள்ளன.

ஜமாஅத் தொழுகைக்கு மக்களை அழைப்பதற்காகச் சொல்லப்படும் பாங்கு ஒரு வகை. இந்த பாங்கை ஆண்கள் தான் சொல்ல வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவது அனுமதிக்கப்பட்டு இருந்தது. இந்த அனுமதியைப் பெண்கள் பயன்படுத்தியும் வந்தனர். அவர்களில் யாரும் பள்ளிவாசலில் பாங்கு சொல்ல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவு இடவில்லை. அனுமதிக்கவும் இல்லை.

தொழுகைக்கு வரும் பெண்கள் ஆண்களின் பின்னால் கடைசி வரிசையில் தான் நிற்க வேண்டும் என்ற ஏற்பாட்டை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருந்தார்கள். ஆண்களின் வணக்க வழிபாடுகளுக்குப் பெண்கள் தலைமை தாங்கக் கூடாது என்பதை இதில் இருந்து நாம் அறிகிறோம்.

மற்றவர்களை அழைப்பதற்காக பாங்கு சொல்வது ஆண்களை முந்துவதில் அடங்கும். எனவே இது போன்ற பாங்குகளை சொல்லக் கூடாது.

ஒரு பள்ளியில் சொல்லப்பட்ட பாங்கு கேட்காத போதும், மக்கள் வசிக்காத பகுதியில் தொழும் போதும் பாங்கு சொல்ல வேண்டும். இந்த வகையான பாங்கை அதாவது தனக்காக சொல்லிக் கொள்ளும் பாங்கை பெண்கள் சொல்லலாம். சொல்ல வேண்டும்.

 

நான் நபிகள நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து திரும்பினேன். அப்போது தொழுகை நேரம் வந்தால் நீங்கள் இருவரும் பாங்கும், இகாமத்தும் சொல்லுங்கள். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு இமாமாக இருக்கட்டும்” என்று எனக்கும், என் நண்பர் ஒருவருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி)

நூல் : புகாரி 2848

யாரையும் அழைக்கும் நோக்கம் இல்லாமல் பயணத்தில் இருக்கும் போதும் பாங்கு சொல்ல வேண்டும் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மலைப் பாறைகளின் உச்சியில் தொழுகை அழைப்பு (பாங்கு) சொல்லி தொழும் ஆட்டு இடையனைப் பார்த்து உங்கள் இரட்சகன் மகிழ்ச்சியடைகின்றான். ”பாருங்கள் என் அடியானை! பாங்கும், இகாமத்தும் கூறித் தொழுகின்றான். (காரணம்) என்னை அவன் அஞ்சுகிறான். (ஆகவே) என் அடியானை நான் மன்னித்து விட்டேன் என்று இறைவன் கூறுகின்றான்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல் : அபூதாவூத் 1203

தன்னந்தனியாக இருப்பவன் பாங்கு சொன்னால் அதை இறைவன் விரும்புகிறான் என்பதால் நாம் தனியாகத் தொழுதாலும் பாங்கு சொல்ல வேண்டும். இந்த நன்மையை ஆண்களும் அடைந்து கொள்ளலாம். பெண்களும் அடைந்து கொள்ளலாம்.

பெண்கள் தனித்து தொழும் போதும், அல்லது பெண்களுக்கு பெண்கள் ஜமாஅத் நடத்தும் போதும் தமக்காக பாங்கு சொல்லலாம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed