பெண்கள் பள்ளிவாசலில் ஜும்ஆ தொழலாமா‎?

அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகியநால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகைகடமையாகும்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‎

நூல்: அபூதாவூத் 901

இந்த ஹதீஸுக்கு மாற்றமாக தவ்ஹீத் பள்ளிகளில் ஜும்ஆவிற்கு பெண்கள் அழைக்கப்படுகிறார்கள். சில இடங்களில் ‎ஊக்குவிக்கிறார்கள். பெண்கள் ஜும்ஆ தொழுதால் அவர்களுக்கு சுன்னத் ‎தொழுகை போல் ஆகுமா?

பெண்களுக்கு ஜும்ஆத் தொழுகை கடமை இல்லை என்பதால் அவர்கள் ஜும்ஆத் தொழ பள்ளிக்கு வரக்கூடாது என்று பொருள் இல்லை.

பெண்கள், அடிமைகள், நோயாளிகள், சிறுவர்கள் இவர்களைத் தவிர மற்றவர்கள் கட்டாயம் ஜும்ஆத் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப் (ரலி)

நூல் : அபூதாவூத் 1067

இந்த நபிமொழியில் பெண்கள் ஜும்ஆ தொழக் கூடாது என்று சொல்லப்படவில்லை. அவர்களுக்கு ஜும்ஆ கடமையில்லை என்றே கூறப்பட்டுள்ளது.

ளுஹாத் தொழுகை, இரவுத் தொழுகை, சுன்னத்தான தொழுகைகள், நஃபிலான தொழுகைகள், சுன்னத்தான நோன்புகள், உபரியான தானதர்மங்கள் ஆகியவை கடமை இல்லை என மார்க்கம் கூறுகிறது. இதனால் இவற்றை பெண்கள் செய்யலாகாது என்று நாம் புரிந்து கொள்வதில்லை.

இதே செய்தியில் பெண்களுடன் சிறுவர்கள், அடிமைகள், நோயாளிகள் ஆகியோருக்கும் ஜும்ஆ கடமையில்லை என்று கூறப்பட்டுள்ளது. சிறுவர்கள், அடிமைகள், நோயாளிகள் ஆகியோர் ஜும்ஆவை நிறைவேற்ற பள்ளிவாசலுக்குச் செல்வது கூடாது என்று யாரும் புரிந்து கொள்வதில்லை.

மாறாக இது சலுகை என்றும், விரும்பினால் பள்ளிக்கு வரலாம் என்றும் அறிவுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் ஜும்ஆத் தொழுகைக்கு பள்ளிக்கு வந்து ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றியுள்ளார்கள்.

நான் வெள்ளிக்கிழமை அன்று “காஃப் வல்குர்ஆனில் மஜீத்’ எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து செவியுற்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆ (சொற்பொழி)விலும் இந்த அத்தியாயத்தை ஓதுவார்கள்.

அறிவிப்பவர் : அம்ரா பின்த் (ரலி) அவர்களின் சகோதரி

நூல் : முஸ்லிம் 2049

பெண்கள் ஜும்ஆத் தொழுகைக்கு வராவிட்டால் லுஹர் தொழுகை அவர்களின் மீது கடமையாகும். பெண்கள் ஜும்ஆ தொழுதுவிட்டால் அவர்கள் மீது லுஹர் தொழுகை கடமை நீங்கி விடும்

லுஹருக்குப் பகரமாக ஜும்ஆவும் ஜும்ஆவுக்குப் பகரமாக லுஹரும் தொழுவதால் இதை சுன்னத்தான தொழுகை என்று கூற முடியாது.

பெண்களைப் போன்று நோயாளிகளுக்கும் ஜும்ஆ கடமையில்லை என்று மேற்கண்ட ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு நோயாளி இந்த சலுகையைப் பயன்படுத்தாமல் பள்ளிக்கு வந்து ஜும்ஆத் தொழுதால் அது கடமையான தொழுகை இல்லை என்று கூற மாட்டோம். மாறாக அவர் கடமையை நிறைவேற்றிவிட்டார் என்றே கூறுவோம்.

இதே போன்று பயணத்தில் இருப்பவர் பள்ளியில் தொழுகையை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை. ஒரு பயணி பள்ளிக்கு வந்து ஐந்து நேரத் தொழுகைகளை நிறைவேற்றினால் அவர் கடமையான தொழுகையை நிறைவேற்றவில்லை என்று கூறமாட்டோம்.

பெண்கள் ஜும்ஆத் தொழுவதும் இது போன்றதாகும்.

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed