பெண்களுக்கு சொத்துரிமை உண்டா?

இஸ்லாத்தில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டிருக்கிறது. ஆணுக்கு இரண்டு பங்கும் பெண்ணிற்கு ஒரு பங்கும் சொல்லப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு சொத்தில் எதையும் கொடுக்காமல் ஆண்களே அனைத்தையும் எடுத்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் இப்படியொரு அற்புத சட்டத்தை குர்ஆன் வழக்கில் கொண்டுவந்தது

குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப்பங்கீடு கட்டாயக் கடமை.

அல்குர்ஆன் (4 : 7)

இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டுஎன்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான்.

அல்குர்ஆன் (4 : 11)

வாரிசுரிமைச் சட்டத்தில் ஆண்களுக்குக் கிடைப்பதில் பாதி, பெண்களுக்குக் கிடைக்கும் என்று திருக்குர்ஆன் கூறுவதைப் பலரும் தவறாக எண்ணுகின்றனர். தக்க காரணங்களுடன் தான் இஸ்லாம் பாரபட்சம் காட்டுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

1, இஸ்லாமிய சமூக, குடும்ப அமைப்பில் பெண்களை விட ஆண்கள் மீது தான் அதிகச் சுமை சுமத்தப்பட்டுள்ளது. மற்ற சமூகங்களிலும் கூட பெரும்பாலும் இதே நிலை தான்.

2, பெற்றோர்கள் தள்ளாத வயதில் ஆண் மக்களால் தான் பராமரிக்கப்படுகின்றனர். பெண்கள் தமது கணவனின் பெற்றோர்களைத் தான் பராமரிக்க முடியும். பெற்றோர் பொருள் திரட்ட முடியாத நிலையை அடையும் போது அவர்களைக் கவனிப்பதும் மகன்கள் தான். எனவே அவர்களுக்கு இரு மடங்கு அளிப்பது நியாயமே!

3, ஒரு பெண் தனது புகுந்த வீட்டில் வாழ முடியாத நிலை ஏற்பட்டால் தனது சகோதரனின் தயவில் வாழும் நிலை ஏற்படும். “எனக்குக் கிடைத்த அளவு சொத்து உனக்கும் தானே கிடைத்தது; எனவே உன்னை நான் ஏன் பராமரிக்க வேண்டும்என்று சகோதரன் நினைக்காமல் அன்புடன் அவளை அரவணைக்க இந்தப் பாரபட்சம் அவசியமாகிறது.

4, தந்தையின் சொத்துக்களைப் பெருக்குவதில் பெண்களை விட ஆண்களே பெரிதும் பங்காற்றி வருகின்றனர். தந்தை விட்டுச் சென்ற சொத்துக்களில் அவர் சம்பாதித்ததை விட அவரது மகன்களின் உழைப்பால் அதிகம் பெருகியிருக்கும். மகள் பெரும்பாலும் சொத்தை வளர்ப்பதில் பங்கெடுக்க மாட்டாள். இதுவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

5, இவை தவிர பெண்களுக்காக தந்தை நகை மற்றும் ஆபரணங்களைச் செய்து போடுகிறார். இது அலங்காரப் பொருள் மட்டுமின்றி பெரிய சொத்தாகவும் உள்ளது. இது போன்ற பொருட்களை ஆண் மக்களுக்காக தந்தை வழங்குவதில்லை. இதுவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

6, ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமான சொத்துரிமை வழங்கினால், பெற்றோரை முதிய வயதில் நாம் மட்டும் ஏன் கவனிக்க வேண்டும் என்ற சிந்தனை ஆண் மக்களுக்குத் தோன்றும். புகுந்த வீட்டில் வாழும் பெண்களால் பெற்றோரைக் கவனிக்க முடியாமல் போகும்

இதனால் முதியோர் இல்லம் தான் பெருகும். பெற்றோர் நாதியற்று விடப்படுவார்கள். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டே இஸ்லாம் இதில் பாரபட்சம் காட்டியுள்ளது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed