பெண்களின் ஒழுக்கம்

அன்பிற்குரிய சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் ஆவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.

அறிவிப்பவர்  : அபூஹுரைரா (ரலி),

நூல் : முஸ்லிம் (4316)

இந்த நபிமொழியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காணாத, அவர்கள் எச்சரிக்கை செய்த இரண்டாவது சாராரான பெண்களை இன்றைக்கு எங்கு கண்டாலும் பார்க்கலாம் என்ற அவல நிலை உருவாகியுள்ளது. அரைகுறை ஆடை அணியும் உரிமை பெண்களுக்கு வேண்டும் என்கிற கூக்குரல் எங்கும் ஓங்கி ஒலிக்கிறது. இவர்களுடைய அரைகுறை உடையினால் ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும் என்கிற யதார்த்த நிலையை அறிவியல் உலகம் ஆய்வுகள் ரீதியாக உரைத்தாலும் அரைகுறை மதியாளார்களுக்கு விளங்க முடியவில்லை.

இந்த அரைகுறை உரிமையை கேட்டு மேலைநாட்டு பெண்கள் தெருவிற்கு வந்து போராடுகின்றனர். ஏப்ரல் 2011 மாதத்தில் கனடாவின் தலைநகரமான டொரொண்டோவில் (பாலியல் ரீதியாக) பலியாகுவதை தவிர்க்க பெண்கள் வேசிகளை போல ஆடையணிவதை தவிர்க்க வேண்டும் என்ற மிக உன்னதமான உபதேசத்தை செய்து இருந்தார் ஓர் காவல்துறை அதிகாரி.

இதை எதிர்த்து, நாங்கள் எதை வேண்டுமானாலும் அணிவோம். எங்களுக்கு பாலியல் ரீதியாக பாதுகாப்பு தேவை என பேரணிகளை நடத்தி வருகின்றனர் பெண்கள். கனடாவை தாண்டி ஆஸ்திரேலியாவின் தலைநகரமான சிட்னியிலும் இக்கோரி(கேளி)க்கை பேரணி நடந்து இருக்கிறது.

ஒரு காரியத்தின் மீது வெறுப்பிருந்தால் அதன் பக்கம் கூட நெருங்குவதை வெறுப்பது மனித இயல்பு. உதாரணத்திற்கு ஏதாவது ஒரு உணவு பொருளை விரும்பாதவர்கள், அதன் வாடையை கூட நுகருவதை விரும்ப மாட்டார்கள். ஆனால், வேசி போல என காவல்துறை அதிகாரி உபதேசித்தும், நாங்கள் அதை போலத்தான் அணிவோம். எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கோருபவர்களை எந்த வகையில் மக்கள் சேர்ப்பார்கள் என்கிற வெட்கமும் இந்த ஆர்ப்பாட்டாக்காரர்களுக்கு இல்லை.

கனடா போலீஸ் அதிகாரி கூறிய கருத்தை ஒரு முஸ்லிம் கூறி இருந்தால் போதும் ! இதுவரை தீவிரவாதி உள்பட பல்வேறு பட்டங்களுக்கு ஆளாக வேண்டியதோடு மட்டுமின்றி, கீழ்தரமான முறையில் முஸ்லிம்களும், இஸ்லாமும் விமர்சிக்கப்பட்டு இருக்கும்.

ஆண்களைப் போல பெண்கள் 

குறிப்பாக, மேலை நாடுகளில் ஆண்களைப் போல பெண்கள் அதிக அளவில் டீசர்ட்,  இறுக்கமான பேண்ட் போன்ற ஆடை அணிகின்றனர்.  ஆண்களோடு ஒப்பிடக்கூடிய ஆடைகளை பெண்கள் அணிவதும் கூடாது. ”ஆண்களுக்கு ஒப்பாக தன்னை ஆக்கிக்கொள்ளக்கூடிய பெண்களையும், ஆண்களைப் போன்று தன் தலைமுடியை சீவிக்கொள்ளும் பெண்களையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்துள்ளார்கள்.

ஆண்களுக்கு ஒப்பாகுவது என்பது ஒவ்வொரு சமூகத்திற்கு ஏற்ப ஆடையின் வகையிலும் அதை அணியும் விதத்திலும் ஆண்களுக்கென சொந்தமான ஆடையைப் பெண்கள் அணிவதாகும்.

இஸ்லாமிய பெண்களே ! இறுதி நாளை நெருங்கி கொண்டிருக்கும் கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகள் நிறைவேறி, இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என உறுதிபடுத்தப்பட்டு வருகின்றது. எனவே, தொலைக்காட்சிகளிலும் மற்ற மீடியாக்களின் மூலமாகவும் பெண்ணினத்தின் கண்ணியத்தை குலைக்கும் பிரச்சாரங்களுக்கு அடிபணியாமல், அதை முறியடிக்க பாடுபடுவோம். இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே பெண்ணினத்திற்கு தக்க கண்ணியத்தை தந்துள்ள மார்க்கம் என உலகிற்கு பறைசாற்றுவோம் !

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed