புனிதம் காத்தல் சம்பந்தமாக புனித கஅபாவைத் தவிர வேரதற்கும் அனுமதியில்லை..

ஹுதைபிய்யா உடன்படிக்கை நடைபெற்ற இடத்திலிருந்த மரத்தை உமர் (ரலி) அவர்கள் வெட்டி வீழ்த்தினார்கள்.

இச்சம்பவத்திற்கான காரணங்கள் மற்றும் இதன் மூலம் பெறும் படிப்பினைகள் யாவை?

பைஅத்துல் ரிள்வான் மற்றும் ஹுதைபிய்யா உடன்படிக்கை:-

நபி (ஸல்) அவர்கள் புனித கஅபாவை தரிசிப்பதற்காக மதினாவிலிருந்து 1400 தோழர்களுடன் ஹிஜ்ரி 6-ம் ஆண்டு துல்கஅதா மாதம் புறப்பட்டு மக்கா செல்லும் வழியில் ஹுதைபிய்யா என்னுமிடத்தில் தங்கினார்கள்.

போர் செய்யும் எண்ணமில்லாமல் வந்திருந்த முஸ்லிம்களிடம் போர் செய்வதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தார்கள் மக்கத்து இறை நிராகரிப்பாளர்கள்.

இந்த சமயத்தில் மக்காவிற்கு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்ற உஸ்மான் (ரலி) அவர்களை மக்கத்து இறை நிராகரிப்பாளர்கள் கொன்று விட்டதாக முஸ்லிம்களிடையே வதந்தி கிளம்பியது.

இச்செய்தியைக் கேள்விப்பட்ட நபி (ஸல்) அவர்கள் ‘இனி உஸ்மானின் இரத்தத்திற்குப் பழிவாங்க வேண்டியது அவசியம்’ என்று கூறி அருகிலிருந்த கருவேல மரத்தினடியில் அமர்ந்து கொண்டார்கள்.

இங்கு நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் ‘நாங்கள் இறந்தாலும் இறப்போமே தவிர போரிலிருந்து பின்வாங்க மாட்டோம். குறைஷிகளிடம் உஸ்மானின் இரத்தத்திற்கு பழி வாங்குவோம்’ என்று உறுதி பிரமாணம் வாங்கினார்கள்.

இதற்கு பைஅத்துல் ரிள்வான் என்று பெயர். இந்த பைஅத் வரலாற்றில் சிறப்பு மிக்கதாகும். ஏனென்றால் இந்த பைஅத் முஸ்லிம்களுக்கு இறைநிராகரிப்பாளர்களை பழிவாங்கிட வேண்டுமென்ற உத்வேகத்தைக் கொடுத்தது. அல்லாஹ்வும் இந்த பைஅத் செய்த பாக்கியவான்களை பொருந்திக் கொண்டதாக கூறுகிறான்.

முஃமின்கள் அந்த மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்த போது மெய்யாகவே அல்லாஹ் அவர்களைப் பொருந்தி (ஏற்றுக்) கொண்டான்; அவர்களுடைய இதயங்களில் இருப்பதை அவன் அறிந்து, அவர்கள் மீது (சாந்தியையும்) அமைதியை(யும்) இறக்கியருளி, அவர்களுக்கு அண்மையில் வெற்றியையும் அளித்தான். (அல்குர்ஆன்: 48:18)

இதற்குப்பின் மக்கத்து இறை நிராகரிப்பாளர்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையே வரலாற்றில் புகழ்பெற்ற ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்டு போர் தவிர்க்கப்பட்டது.

இந்த உடன்படிக்கையை இறைவன் ‘வெற்றி’ என்று தன் திருமறையில் கூறுகிறான்.

நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்னால் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் மக்கள் ஹஜ், உம்ராவுக்கு செல்லும் வழியில் ஹுதைபிய்யாவில் ‘பைஅத்துல் ரிள்வான்’ நடைபெற்ற இடத்திலிருந்த

அந்த மரத்தை புனிதமாகக் கருதலானார்கள்.

இறைவன் திருமறையில் குறிப்பிட்டிருக்கும் அந்த மரத்தினடியில் தான் நபி (ஸல்) அவர்கள் உறுதி பிரமாணம் வாங்கினார்கள் என்றும், அதனால் அம்மரத்திற்குப் புனிதத்தன்மை இருக்கிறது என்றும் அதற்கு கண்ணியமும், மரியாதையும் செலுத்தி அந்த மரத்தை வலம் வரத் துவங்கினார்கள்.

இச்செய்தி உமர் (ரலி) அவர்களின் காதுக்கெட்டியதும் மிகவும் ஆத்திரமுற்று இறைவனுக்கு இணைவைக்கும் இச்செயலுக்கு முடிவு கட்டிட எண்ணினார்கள். தம் தோழர்களை அனுப்பி அம்மரத்தை வெட்டி வீழ்த்தினார்கள என்ற செய்தி வரலாற்று நூல்களில் காணப்படுகின்றது.

இந்த வரலாற்று நிகழ்ச்சியின் மூலம் நாம் பெறும் படிப்பினைகள் என்ன என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்

புனித கஅபாவைத் தவிர வேறெந்தப் பொருளுக்கும் அதாவது மரம், கட்டிடம், சமாதி, தர்ஹா இவைகளுக்கு புனித தன்மைகள் இருப்பதாகக் கருதி அவற்றை வலம் வரக்கூடாது.

புனித கஅபாவைத் தவிர மற்றவைகளை வலம் வருவதாலோ அல்லது அவைகளுக்குப் புனிதத்தன்மை இருப்பதாகவோ அல்லது பிணியை, கஷ்டங்களை நீக்கும் சக்திகள் இருப்பதாகவோ நம்புவது இறைவனுக்கு மட்டுமே இருக்கக்கூடிய அந்த சக்திகள் அவற்றுக்கும் உண்டு என்று நம்பி இணைவைத்தல் என்னும் இறைவனால் மன்னிக்கப்படாத பாவத்தை செய்ததாகி விடும்.

அல்லாஹ் இத்தகைய பாவங்களிலிருந்து நம்மை காப்பாற்றுவானாக!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed