புகை  தொழுகைக்குப் பகை

புகைப்பவர் பொதுவாக புகை தன்னைப் பாதிக்கும் என்று தெளிவாகவே விளங்கி வைத்திருக்கின்றார். ஆனால் அது அடுத்தவரை எந்த அளவுக்குப் பாதிக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. ஒருவர் புகைக்கும் போது அவருக்கு அருகில் உள்ளவரும் புகைப் பொருளை பாவிக்காமலேயே புகைத்தவராகின்றார்.

இது புகைப்பவரால் அடுத்தவருக்கு ஏற்படும் பாதிப்பாகும். புகைத்து விட்டு வருகின்ற இவர், ஓர் அவையில் அமரும் போது அருகில் உள்ளவர் இவருடைய வாயிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தால் அவதிக்குள்ளாகின்றார். இது அடுத்தவருக்கு ஏற்படும் இன்னொரு பாதிப்பாகும்.

இது மாதிரியான பாதிப்பை நாம் பள்ளியில் சந்திக்கின்றோம். பீடி, சிகரெட், சுருட்டு போன்றவற்றை புகைத்து விட்டு, பள்ளியில் தொழுகையில் நமது பக்கத்தில் இந்த ஆசாமிகள் வந்து நின்று விடுகின்றனர். அந்த சமயத்தில் நாம் படும் அவதி கொஞ்சம் நஞ்சமல்ல! புகைபிடிக்கும் தொழுகையாளி தன் சக தொழுகையாளிக்கு ஏற்படுத்தும் தொல்லையாகும்.

தூய இஸ்லாத்தை மக்களிடம் போதிக்கிறோம் எனக்கூறி பிரச்சாரம் செய்யும் தவ்ஹீத்வாதிகள் சிலரிடமும் இந்தப் பழக்கம் இருக்கின்றது. அழைப்புப்பணியில் ஈடுபடுகிறோம், அதனால் நாம் அல்லாஹ்வின் பாதையில் இருக்கின்றோம் என்று கூறும் தப்லீக்வாதிகள், ஷைகு, பீர் – முரீதுகள், இமாம்கள், தரீக்காக்கள் என அனைவரிடமும் இந்தத் தீய பழக்கம் ஆக்கிரமித்து நிற்கின்றது,

அடுக்கடுக்காக அடுத்தடுத்து வரும் தொடர் இருமல் போராட்டத்திற்கு இடையில் மாட்டிக் கொண்டு தவிக்கையிலும் தன் மரண வேளை வரையிலும் புகைப்பழக்கத்தை விடாத புண்ணியவான்கள் பலருண்டு. புகைபிடித்தல் ஒரு பாவமல்ல என்ற எண்ணமோ அல்லது அது ஒரு சாதாரண பாவம்தான் என்ற எண்ணமோ தான் இதற்குக் காரணம்.

புகைப்பிடித்தல் ஒரு பாவமாகும்! அது ஒரு சாதாரண பாவமல்ல என்பதை விளக்குவதற்கு குர்ஆனில் ஏராளமான வசனங்களும் ஹதீஸ்களும் ஆதாரமாக அமைந்துள்ளன. அவையனைத்தையும் உளூவின் சிறப்புகள் என்ற இந்தத் தலைப்பின் கீழ் கொண்டு வருவது பொருத்தமாக அமையாது. எனினும் புகைப்பிடித்தல் தொழுகைக்கும், தொழுகையாளிக்கும் எந்த அளவுக்கு இடையூறாக அமைந்துள்ளது என்பதை மட்டுமே இந்த இடத்தில் பார்க்கவிருக்கின்றோம்.

அனஸ் (ரலி) அவர்களிடம் வெள்ளைப் பூண்டு குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘இந்தச் செடியிலிருந்து (விளையும் பூண்டைச்) சாப்பிட்டவர் நம்மை நெருங்கவோ நம்முடன் தொழவோ வேண்டாம்’ எனச் சொன்னார்கள்” என்று பதிலளித்தார்கள்.

நூல்: முஸ்லிம் 972

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: இந்தச் செடியிலிருந்து விளைவதை (அதாவது வெள்ளைப் பூண்டை) சாப்பிட்டவர் அதன் வாடை விலகாதவரை நம்முடைய பள்ளிவாசல்களை நெருங்க வேண்டாம்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் 977

பூண்டைச் சாப்பிடுபவர் நம்முடைய பள்ளிகளை நெருங்கவேண்டாம் என்று கைபர் போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 853, முஸ்லிம் 970

இந்த ஹதீஸ்களில் பூண்டைச் சாப்பிட்டவர் நம்முடன் சேர்ந்து தொழ வேண்டாம். பள்ளிகளை நெருங்க வேண்டாம் என்றெல்லாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிடுவதை தெளிவாகக் காண்கிறோம்.

இவை எல்லாவற்றையும் விட நம்மைத் தொல்லைக்குள்ளாக்குபவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவதை நாம் கவனிக்கத் தவறிவிடக்கூடாது. இதைப் பின்வரும் ஹதீஸில் நாம் காணமுடிகின்றது.

மனிதர்களுக்கு மட்டுமல்ல! மலக்குகளுக்கும் தொல்லை!

நபி (ஸல்) அவர்கள், “இந்தச் செடியிலிருந்து விளைகின்ற வெள்ளைப் பூண்டைச் சாப்பிட்டவர் -மற்றொரு தடவை “வெங்காயம், வெள்ளைப் பூண்டு, சீமைப்பூண்டு ஆகியவற்றைச் சாப்பிட்டவர்”- நமது பள்ளிவாசலை நெருங்க வேண்டாம். ஏனெனில், மனிதர்கள் எதனால் தொல்லை அடைகிறார்களோ அதனால் வானவர்களும் தொல்லை அடைகின்றனர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: முஸ்லிம் 976

மனிதர்கள் எந்தெந்தப் பொருட்களின் வாடையினால் தொல்லைக்குள்ளாகிறார்களோ அந்தப் பொருட்களின் வாடையினால் மலக்குகளும் தொல்லைக்குள்ளாகின்றனர் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவு படுத்துகின்றார்கள். அத்துடன், நாற்றமெடுக்கும் செடி என்று பூண்டைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுவது மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.

பீடி, சிகரெட், சுருட்டு ஆகிய இந்த இலைகள் ஒருவிதமான நாற்றமெடிக்கும் இலைகள் என்பதை நாம் யாரும் மறுக்கமுடியாது. இந்த இலைகளில் நெருப்பைப் பற்ற வைக்கும்போது இதிலிருந்து கிளம்பும் நாற்றத்திற்கு மேல் நாற்றத்தை நாம் குறிப்பிடவே தேவையில்லை.

பூண்டு, வெங்காயம் ஆகியவை உண்பதற்குத் தடுக்கப்பட்ட உணவல்ல! அதிலிருந்து கிளம்புகின்ற வாடையை வைத்தே சாப்பிடக்கூடாது என்று தடை செய்கின்றார்கள். அந்தத் தடையும் பள்ளிக்கு வரும்போது தான் என்பதையும் நாம் அறிய முடிகின்றது.

வீண் விரயம், புகைப்பவரின் உடலுக்கும் அருகில் இருப்பவரின் உடலுக்கும் கெடுதி என்ற அடிப்படையில் பீடி, சிகரெட், சுருட்டு போன்றவை தடுக்கப்பட்ட பொருட்களாகின்றன. இந்தப் புகையின் நாற்றத்துடன் பள்ளிக்கு வருபவரின் நிலையை என்னவென்பது? மனிதர்களும், மலக்குகளும் இந்த நாற்றத்தால் எந்த அளவுக்கு அவதிக்குள்ளாவார்கள் என்பதைக் கொஞ்சம் நிதானமாக எண்ணிப்பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் வெங்காயம், பூண்டு சாப்பிட்டு விட்டு வருவதை வெறும் வார்த்தை அளவில் கண்டித்து மட்டும் விடவில்லை. தகுந்த நடவடிக்கையையும் எடுத்துள்ளார்கள்.

வாடையுடன் வந்தவருக்கு வழங்கிய தண்டனை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் வெங்காயம் பயிரிடப்பட்டிருந்த ஒரு வயலைக் கடந்து சென்றார்கள். அப்போது மக்களில் சிலர் அதில் இறங்கி வெங்காயத்தைச் சாப்பிட்டனர். வேறு சிலர் சாப்பிடவில்லை. பிறகு நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றபோது வெங்காயம் சாப்பிடாதவர்களை (தம்மருகே) அழைத்தார்கள். மற்றவர்களை, அதன் வாடை விலகும்வரை (நெருங்கவிடாமல்) தள்ளி இருக்கச்செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 979

“மக்களே! நீங்கள் இரு செடிகளிலிருந்து விளைகின்றவற்றைச் சாப்பிடுகிறீர்கள். அவ்விரண்டையும் நான் அருவருப்பானவையாகக் கருதுகிறேன். இந்த வெங்காயமும் வெள்ளைப் பூண்டுமாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருக்கும்போது ஒருவரிடமிருந்து அவற்றின் துர்வாடை வருவதைக் கண்டால், அவரை அல்பகீஉ பொது மையவாடிக்குக் கொண்டு போய் விட்டுவிட்டு வருமாறு கூறுவார்கள். எனவே, யார் அதைச் சாப்பிட விரும்புகிறாரோ அவர் அதைச் சமைத்து அதன் வாடையை நீக்கிக் கொள்ளட்டும்’’ என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மஃதான் பின் அபீ தல்ஹா

நூல்: முஸ்லிம் 980

முதல் ஹதீஸில் வெங்காயம் சாப்பிடாதவர் களுக்கு முன்னுரிமை அளிக்கின்றார்கள். சாப்பிட்டவர்களைப் பின்னுக்குத் தள்ளுகின்றார்கள். இரண்டாவது ஹதீஸில் வெங்காயம், பூண்டு சாப்பிடுவோரை பகீஃ வரை அனுப்பிவிடுகின்றார்கள்.

அத்துடன், வெங்காயம், பூண்டு ஆகியவற்றை பச்சையாகச் சாப்பிடும் போது வரும் வாடையைத் தான் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்! வேக வைத்ததை அல்ல என்று உமர் (ரலி) அவர்கள் கூறும் விளக்கத்திலிருந்து அந்தப் பொருட்களின் வாடை தான் வெறுக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

ஹலாலான பொருட்களுக்கே இந்த நிலை என்றால் பீடி, சிகரெட்டுகளின் நிலையைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்த இந்த நடவடிக்கையைப் போல் ஒரு நடவடிக்கை எடுக்காத வரை இவர்கள் இதை நிறுத்த முன்வரமாட்டார்கள்.

பள்ளிவாசல் கழிவறைகளை கட்டை பீடிகள், சிகரெட்டுகள், சுருட்டுக்களால் அசிங்கப்படுத்தும் அவலமெல்லாம் நீங்குவதற்கு இது போன்ற நடவடிக்கை அவசியமாகும்.

தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை, மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும்.

(அல்குர்ஆன் 29:45)

இந்த இறைவசனம் இத்தகையவர்களிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. தொழுகையின் போது பக்கத்தில் நிற்பவர்களைக் கருத்தில் கொண்டும், மலக்குகளைக் கருத்தில் கொண்டும் தான் வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நபி (ஸல்) அவர்கள் தடை செய்திருக்கின்றார்கள். இதை ஒரு முஃமின் ஏற்றுச் செயல்பட வேண்டும்.

மற்ற தொழுகையாளிக்குச் சங்கடம் அளிக்கக்கூடாது. இந்த அடிப்படையில் ஒருவர் செயல்படுவாரானால் இந்தத் தொழுகை அவரிடத்தில் அல்லாஹ் கூறுவதைப் போன்று ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டதாக அர்த்தமாகும்.

நபி (ஸல்) அவர்களின் வெறுப்பைக் கவனத்தில் கொண்டு, தொழுகை நேரங்களில் புகைப்பதை நிறுத்த ஆரம்பிப்பார்களானால் காலப்போக்கில் நிரந்தரமாக புகைப் பழக்கத்தை விடுவதற்கு இது காரணமாக அமையலாம். தொழுகை தீமையை விட்டு விலக்கும் என்ற அல்லாஹ்வின் வாக்கு இங்கு உண்மையாகி விடுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் பூண்டு, வெங்காயத்தைத் தடை செய்வதற்கு இன்னொரு காரணமுண்டு!

கிப்லா திசையில் (உள்ள சுவற்றில்) நபி (ஸல்) அவர்கள் சளியைக் கண்டார்கள். இது அவர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. அதன் பிரதிபலிப்பு அவர்களின் முகத்திலும் காணப்பட்டது. அவர்கள் எழுந்து தம் கையால் அதைச் சுரண்டினார்கள். “நிச்சயமாக உங்களில் ஒருவர் தொழுகையில் நிற்கும் போது அவர் தம் இறைவனிடம் அந்தரங்கமாக உரையாடுகிறார்.

அவருக்கும் கிப்லாவுக்கும் இடையே அவரது இறைவன் இருக்கிறான். எனவே எவரும் கிப்லாத் திசை நோக்கி உமிழக் கூடாது! தமது இடப்புறமோ, தம் பாதங்களுக்கு அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும்!’’ என்று நபி (ஸல்) கூறிவிட்டுத் தம் மேலங்கியின் ஒரு பகுதியைப் பிடித்து அதில் உமிழ்ந்து அதன் ஒரு பகுதியை மறுபகுதியுடன் கசக்கி விட்டு “அல்லது இவ்வாறு அவர் செய்து கொள்ளட்டும்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),

நூல்: புகாரி 405

இந்த ஹதீஸின்படி, ஒருவர் தொழும்போது அல்லாஹ்விடம் உரையாடுகின்றார். அவர் உலகிலுள்ள ஒரு தலைவரிடம் உரையாடும் போது இதுபோன்ற நாற்ற வாயுடன் உரையாட விரும்பமாட்டார். உலகில் உள்ள மனிதரிடம் இப்படியொரு மரியாதையைக் காட்டும் போது அல்லாஹ்விடம் இதை விடப் பன்மடங்கு மரியாதை காட்ட, வாய் சுத்தத்துடன் அல்லாஹ்வின் முன் நிற்க வேண்டும்.

இங்கு இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்று நம்மில் பலர் பிரியாணி அல்லது நெய்ச்சோறு சாப்பிடும் போது தயிர் பச்சடி சாப்பிடுகின்றனர். தயிர் பச்சடியில் கலந்திருப்பது வேகாத வெங்காயம் தான்! இந்த வெங்காயத்தை பச்சையாகச் சாப்பிட்டுவிட்டு அப்படியே தொழுகைக்கு வந்து விடுகின்றார்கள்.

நிச்சயமாக இத்தகையவர்கள் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையைக் கவனத்தில் கொண்டு ஒன்று தொழுத பிறகு சாப்பிட வேண்டும்! அல்லது சாப்பிட்டு விட்டு நீண்ட நேரம் கழித்துத் தொழ வேண்டும். காரணம் வெங்காய வாடை உடனே நீங்குவது கிடையாது. இந்த வாடை நீங்கும் அளவுக்கு மவுத் வாஷ் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி வாயை சுத்தப்படுத்தி விட்டுத் தொழலாம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *