புகழுக்கு ஆசைப்படாத உயிரினும் மேலானவர்

சமூகத்தில் மனிதர்கள் அனைவருக்கும் பல்வேறு விதமான எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. சில வகையான ஆசைகள் பரவலாகப் பலரிடமும் இருப்பதைப் பார்க்கிறோம். இந்தப் பட்டியலில் புகழ் ஆசை என்பது முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய ஒன்று.

இந்த உலகில் சின்னச்சின்ன விஷயத்திலும் கூட, பொதுவெளியில் தனது பெயர் பெருமையாகச் சொல்லப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது பலரின் இயல்பாக இருக்கிறது. இதனால் தம்மைப் பற்றி உயர்ந்த பிம்பத்தை ஏற்படுத்தும் செய்திகளை மட்டுமே மக்களிடம் பகிர்ந்து கொளவார்கள். தங்களது அந்தஸ்த்தை குறைத்துக் காட்டும் வகையிலான வாழ்வியல் நிகழ்வுகளைத் தப்பித் தவறியும் சொல்ல மாட்டார்கள்.

ஆனால் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இதற்கு முற்றிலும் மாறுபட்டுத் திகழ்ந்தார்கள். தேவையற்ற புகழ்ச்சிகளைத் தடுத்தது மட்டுமின்றி, தமது கவுரவத்தைக் குறைத்து விடும் என்று கருதி எந்தச் செய்தியையும் மறைக்காமல் வாழ்ந்து காட்டினார்கள்.

அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடு மேய்க்காமல் இருந்ததில்லை!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்; அப்போது நபித்தோழர்கள், ‘நீங்களுமா?’ என்று கேட்டார்கள். ‘ஆம்! மக்காவாசிகளின் சில கீராத் கூலிக்காக ஆடு மேய்ப்பவனாக நான் இருந்தேன்!’ என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (2262)

இந்தச் செய்தி மூலம் நபிகளாரின் பண்பைப் புரிந்து கொள்ள முடிகிறது. மக்கள் தம்மைப் பெருமையாக நினைக்க வேண்டும்; புகழ்ந்து மெச்ச வேண்டும் என்று எண்ணிக் கொண்டு உண்மைக்கு மாற்றமாகச் சொல்லும் குணம் தூதருக்குத் துளியளவும் கிடையாது.

ஆதலால் தான், அவர்களை அல்லாஹ் கண்டித்து அருளிய வசனங்களைக் கூட, கடுகளவும் மறைக்காமல் பகிரங்கமாக மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்தினார்கள். இப்படியான ஒரு வசனத்தைப் பாருங்கள்.

தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் (முஹம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்?

(திருக்குர்ஆன் 80: 1-3)

இந்த வசனத்தின் பின்னணி என்ன தெரியுமா? தங்களை உயர்ந்த குலமென பீற்றிக் கொண்ட ஆட்கள் ஒருநாள் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து பேரம் பேசினார்கள். உங்களுடன் இருக்கும் ஏழைகள், அடிமைகள், அனாதைகள் போன்ற தாழ்ந்த குல மக்களைத் திருப்பி அனுப்பிவிட்டால், இஸ்ஸாத்தை ஏற்றுக் கொள்வதாக கூறினார்கள்.

அந்த சமயத்தில் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் என்ற கண் தெரியாத ஏழை நபித்தோழர் அங்கு வரவே, அவரது வருகையை நபிகளார் வெறுத்தார்கள். இதனால் மேற்கண்ட வசனத்தை இறக்கி நபியவர்களை அல்லாஹ் கண்டித்தான.

அந்த வசனத்தை மறைக்காமல் அப்படியே மக்களுக்கு ஓதிக் காட்டினார்கள் என்றால் அதன் மூலம் நபிகளார் உண்மையை மறைக்காமல் சொன்னார்கள் என்பதை மட்டுமல்ல, மக்களிடம் எவ்வித பாராட்டையும் எதிர்பார்க்கவில்லை என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

யதார்த்த நிலைக்கு மாற்றமாக மக்கள் தம்மைப் புகழ்ந்து பேசுவதை நபியவர்கள் விரும்பியது கிடையாது என்பதற்கு ஏராளமான செய்திகள் சான்றுகளாக உள்ளன. இந்த வகையில் ஒரு செய்தியைப் பார்ப்போம்.

எங்கள் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எங்களில் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனே!” என்று ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்.

அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “மனிதர்களே! இறையச்சத்தைக் கவனமாகப் பேணிக் கொள்ளுங்கள்! ஷைத்தான் உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம்.

நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ஆவேன். அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமாவேன். எனக்கு அல்லாஹ் தந்த தகுதிக்கு மேல் என்னை உயர்த்துவதை அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் விரும்ப மாட்டேன் என்றார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: அஹ்மத் 12093

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் நிகரில்லா ஆன்மீகத் தலைவர். அன்றைய இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் முதல் தலைவர். இவ்வாறு உயரிய அதிகாரத்தில் இடம் வகித்தாலும் நபியிடம் கொஞ்சம் கூடப் பெருமை உணர்வோ, புகழ் ஆசையோ இருக்கவில்லை.

ஆனால், தம்மிடம் இல்லாத அம்சங்களை எல்லாம் சொல்லி மற்றவர்கள் தம்மைப் புகழ வேண்டும் என்று சிலர் விரும்புவதையும் அதற்காக ஏங்குவதையும் காண்கிறோம். அப்படியான ஆட்கள் நபியவர்களைப் பார்த்து தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியார் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்)

அல்லாஹ்வின் அடியார்’ என்றும் ‘இறைத்தூதர்’ என்றும் சொல்லுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர் (ரலி) சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி (3445)

மனித சமுதாயத்தை வழிநடத்த இறைவன் அனுப்பிய தூதர்களுள் ஒருவரே, இயேசு என்று அழைக்கப்படும் ஈஸா நபி. ஆனால் அவரை ஏற்றுக் கொண்ட மக்கள் பிந்தைய காலத்தில் அவரை அளவு கடந்து புகழ்ந்து புகழ்ந்து கடைசியில், கடவுளின் மகன் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஒரு சாரார் அவரைக் கடவுளாகவே இன்றளவும் வழிபடுவதைப் பார்க்க முடிகிறது.

இப்படியான ஒரு நிலை, இறுதித் தூதராகவுள்ள தமது விஷயத்தில் நிகழ்ந்து விடக் கூடாது என்பதில் முஹம்மது நபி உறுதியாக இருந்தார்கள். தம்மை வரம்புமீறிப் புகழ்ந்து விடாதீர் என்று எச்சரித்தார்கள்.

அதுவும் பெயரளவுக்கு அல்ல! மக்களில் எவரேனும் தம்மை வரம்பு மீறிப் புகழும் போது உடனடியாகத் தடுத்தார்கள்; மறுத்துப் பேசினார்கள். அண்ணலார் துளியளவும் புகழை விரும்பவில்லை என்பதற்கு இன்னும் பல நிகழ்வுகள் சான்றாக இருக்கின்றன.

எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று நபி (ஸல்) அவர்கள் என்னுடைய விரிப்பின் மீது அமர்ந்திருந்தார்கள். அங்கு சில சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு, பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தனர்.

அவர்களில் ஒரு சிறுமி, ‘எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்’ என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘இப்படிச் சொல்லதே! (இதைவிடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி)

நூல்: புகாரி 4001, 5147

எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை எந்த மனிதனாலும் அறிந்து கொள்ள முடியாது. மறைவான ஞானங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும். அவன் அறிவித்துக் கொடுத்ததைத் தவிர அவற்றிலுள்ள செய்திகளை நபிமார்களும் கூட அறியமாட்டார்கள்.

இவ்வாறிருக்க, நாளை நடப்பதெல்லாம் நபிகளாருக்குத் தெரியும் என்று சிறுமி புகழ்ந்து பாடும் போது அதை ஆமோதித்து அமைதி காக்கவில்லை. உடனே அவ்வாறு பாட வேண்டாமென்று கூறுகிறார்கள். இப்படியான தலைவரை இன்று பார்க்க முடியுமா?

பெரும்பாலான தலைவர்களின் நிலை எப்படி இருக்கிறது? புகழ வேண்டாம் என்று அவர்கள் தொண்டர்களிடம் கூறினால் அதன் அர்த்தம், புகழுங்கள் என்பது தான். வேண்டாம் என்று சொல்லும் போது எப்படியெல்லாம் புகழ வேண்டும் என்றெல்லாம் சொல்லியும் வைத்திருப்பார்கள்.

ஆனால் அல்லாஹ்வின் தூதரோ இந்த விஷயத்திலும் தனித்து விளங்குவதைப் பார்க்கிறோம். தம்மீது உயிருக்கும் மேலான பாசத்தை வைத்திருந்த தோழர்கள் அவர்களாகவே மரியாதை செலுத்த முன்வந்த போதும் நபிகளார் மறுத்துவிட்டார்கள்.

நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். இவ்வாறு சிரம் பணிவதற்கு நபி (ஸல்) அவர்களே அதிகத் தகுதியுடையவர்கள் என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன்.

நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ (எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?” எனக் கேட்டார்கள். மாட்டேன் என்று நான் கூறினேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்லியிருப்பேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் (ரலி)
நூல்: அபூதாவூத் 1828

மக்கள் மண்டியிட்டு மரியாதை செலுத்தும் மற்ற சாதாரண மன்னர்களை விடவும், ஈருலக வெற்றிக்கு வழிகாட்டுகிற தூதர் பல மடங்கு சிறந்தவர். ஆகவே அவரது காலில் விழுந்து மரியாதை செலுத்துவது தவறில்லை என்று நினைத்து, தோழர் ஒருவர் அதற்கு அனுமதி கேட்கிறார்.

அவரது ஆசையை ஆட்சேபித்து அறிவுரை கூறியதோடு, அல்லாஹ்வுக்கு மட்டுமே சிரம் தாழ்த்தி அடிபணிய வேண்டும் என்று எடுத்துக் கூறினார்கள் நபியவர்கள். தமக்கு கடவுளுக்குரிய பண்புகள் இருப்பதாகவும், தம்மை வணங்கினால் கடவுளின் அன்பையும் அருளையும் பெறலாம் என்றும் உளறித் திரியும் ஆன்மீகவாதிகளை இன்றைய காலத்திலும் பார்க்கிறோம்.

அவர்களில் சிலர் தம்மைக் கடவுளின் அவதாரமாகவும் சொல்லிக் கொள்கிறார்கள். புகழ் போதை தலைக்கேறி நிற்பதும் இதற்கு முக்கிய காரணம். நபிகளாரின் நிலையோ இதற்கு நேர்மாற்றமாக இருந்தது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தம் அறையின் வாசலுக்கருகே (சிலர்) சச்சரவிட்டுக் கொண்டிருந்ததைச் செவியுற்றார்கள். அவர்களிடம் சென்று, “நான் ஒரு மனிதனே. என்னிடம் வழக்காடுபவர்கள் வருகிறார்கள். உங்களில் ஒருவர் மற்றவரை விட வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கலாம்.

அவர்தான் உண்மையைப் பேசியுள்ளார் என்று கருதி, நான் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்து விடுவேனாயின், எவருக்கு ஒரு முஸ்லிமின் உரிமையை எடுத்துக் கொள்ளும்படி (யதார்த்த நிலை அறியாமல்) நான் தீர்ப்பளிக்கிறேனோ (அவருக்கு) அது நரக நெருப்பின் ஒரு துண்டேயாகும். அவன் (விரும்பினால்) அதை எடுத்துக் கொள்ளட்டும்; அல்லது அதை (எடுத்துக் கொள்ளாமல்)விட்டு விடட்டும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

நூல்: புகாரி (2458)

உங்கள் நெருங்கிய உறவினர்களை அச்சுறுத்தி எச்சரியுங்கள்’ என்னும்

(திருக்குர்ஆன் 26:214)

இறைவசனத்தை அல்லாஹ் அருளிய பொழுது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து நின்று, ‘குறைஷிக் குலத்தாரே!’ என்றோ அது போன்ற ஒரு சொல்லையோ கூறி (அழைத்து), ‘ஓரிறை வணக்கத்தையும், நற்செயல்களையும் விலையாகத் தந்து உங்களுக்கு (நரக நெருப்பிலிருந்து) விடுதலை வாங்கிக் கொள்ளுங்கள்.

அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து சிறிதளவும் உங்களைக் காப்பாற்ற என்னால் முடியாது. அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது.

அல்லாஹ்வின் தூதருடைய அத்தை ஸஃபிய்யாவே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள். (ஆனால்) அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் உன்னைக் காப்பாற்ற முடியாது’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2753

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் ‘இது அல்லாஹ் நினைத்ததும், நீங்கள் நினைத்ததுமாகும்’ என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் “என்னையும், அல்லாஹ்வையும் நீ சமமாக ஆக்குகிறாயா? அவ்வாறில்லை. அல்லாஹ் மட்டும் நினைத்தது தான் இது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: அஹ்மத் 1742, 1863, 2430, 3077

தமக்கு எல்லாம் தெரியும் என்றோ, எல்லாம் முடியும் என்றோ எந்த நேரத்திலும் முஹம்மது நபி கூறியது கிடையாது. தம்மை அல்லாஹ்வுக்கு நிகராக்கும் வகையில் மக்கள் அறியாமல் பேசும் போது உடனே தவறைச் சுட்டிக் காட்டித் திருத்தி உள்ளார்கள். அந்த வகையில், மக்கள் செலுத்தும் தனிப்பட்ட மரியாதையை வெறுக்கும் தலைவராக நபிகளார் திகழ்ந்தார்கள்.

உலகத்தில் நபி (ஸல்) அவர்களை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம். நபி (ஸல்) அவர்களுக்குப் பத்தாண்டுகள் பணிவிடை செய்த அனஸ் (ரலி) இதை அறிவிக்கிறார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்கள்: அஹ்மத் 12068, 11895, திர்மிதீ 2678

அதிகார மட்டத்திலும் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்த பிறகு தங்களது காலில் விழுந்து பொதுமக்கள் மரியாதை செலுத்த வேண்டும் என்ற எண்ணம் பல நபர்களுக்கு வந்து விடுகிறது. அவ்வாறான ஆசை கடுகளவும் நபியவர்களுக்கு இருக்கவில்லை. தமக்கு மரியாதை செலுத்துவதற்காக எழுந்து கூட நிற்கக் கூடாதென கட்டளையிட்டார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி).

முஆவியா (ரலி) வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களும், இப்னு சப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி) “அமருங்கள் என்றார். ‘தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்’ என்று நபி (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்” என்று முஆவியா (ரலி) கூறினார்.

அறிவிப்பவர்: அபூ மிஜ்லஸ்

நூல்கள்: அபூதாவூத் 4552, திர்மிதி 2769

மனிதன் மனிதனை வணங்கக் கூடாது; அத்தகைய தோற்றம் வந்துவிடக் கூடாது என்பதால் தான் மரியாதை செலுத்துவதற்காக எழுந்து நிற்பதைத் தடுத்தார்களே தவிர, வரவேற்பதற்காகவோ வழியனுப்பி வைப்பதற்கோ எழுந்து செல்வதை நபிகளார் தடுக்கவில்லை என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கு ஆதாரப்பூர்வமான செய்திகள் சான்றுகளாக உள்ளன.

மக்களோடு வாழும் போது மட்டுமல்ல, இறந்த பிறகும் தம்மை மக்கள் அளவுகடந்து புகழ்ந்து விடக் கூடாது; தம்மைத் தகுதிக்கு மீறி உயர்த்தி மார்க்க வரம்புகளை மீறிவிடக் கூடாது என்பதில் நபிகளார் கவனமாக இருந்தார்கள். ஆகவே, மரணத்தைத் தழுவும் வரையிலும் அடிக்கடி மக்களுக்குப் பின்வருமாறு எச்சரிக்கை செய்தார்கள்.

உங்கள் வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிவிடாதீர்கள்; எனது அடக்கத்தலத்தில் எந்த நினைவு விழாவும் நடத்தாதீர்கள்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 1746, அஹ்மத் 8449

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது தம் முகத்தின் மீது ஒரு கம்பளித் துணியைத் தூக்கிப் போட்டுக் கொள்வார்கள். மூச்சுத் திணறுவது போல் உணர்ந்தால் தம் முகத்தைவிட்டு அதை விலக்கிக் கொண்டார்கள். அவர்கள் இந்நிலையில் இருக்கும்போது, ‘அல்லாஹ் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தட்டும்.

அவர்கள் தம் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டனர்’ என்று அவர்கள் செய்ததைக் குறித்து (அதே போல் நீங்களும் செய்து விடாதீர்கள் என்று) எச்சரித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி (4443)

ஒருவர் ஏதேனும் ஒரு விஷயத்தில் மக்களுக்குப் பிடிக்கும் வகையில் வாழ்ந்து விட்டாலேயே அவரைக் கடவுள் அளவுக்கு உயர்த்தி விடும் மக்களைப் பார்க்கிறோம். இவ்வாறு நிறைய நல்ல மனிதர்கள் இன்று கடவுளாக மதிக்கப்படுகிறார்கள்; வணங்கப்படுகிறார்கள்.

இவ்வாறிருக்க, பரிசுத்தமாக வாழ்ந்த நபியை சும்மா விடுவார்களா? எனவே, இந்த நிலை தமது விஷயத்தில் ஏற்பட்டு விடக் கூடாதென்று முஹம்மது நபி அவர்கள் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடினார்கள்.

எனது அடக்கத்தலத்தை வணக்கத்தலமாக ஆக்கி விடாதே” என்று இறைவனிடம் நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல் : அஹ்மத்: 7054

புகழப்படுவதற்குரிய தகுதி இல்லாவிட்டாலும் கூட அதை எதிர்பார்க்கும் மக்கள் அநேகம் உள்ளனர். இதில் அதிபர்கள், ஆட்சியாளர்கள் என்று அதிகார மட்டத்தில் இருப்பவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

ஆனால், அப்பழுக்கற்ற வாழ்க்கை வாழ்ந்த அல்லாஹ்வின் தூதரோ புகழை விரும்பாத தலைவராகத் திகழ்ந்தார்கள். அண்ணலாருடைய சொல்லும் செயலும் இதற்குரிய ஆதாரங்களாக இன்றளவும் உள்ளன.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *