பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அத்தியாயத்தின் ஒரு பகுதியா?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பது ஃபாதிஹா அத்தியாயத்திலும், ஏனைய அத்தியாயங்களிலும் உள்ளடங்கியதா? அல்லது குர்ஆனுக்கு அப்பாற்பட்டதா? என்பதை முதலில் நாம் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்ற வசனம் திருக்குர்ஆனின் 114 அத்தியாயங்களில் அத்தவ்பா என்ற 9-வது அத்தியாயம் தவிர எல்லா அத்தியாயங்களின் துவக்கத்திலும் இடம் பெற்றுள்ளது. இதைத் தவிர அன்னம்லு என்ற 27-வது அத்தியாயத்தின் 30-வது வசனத்திலும் இடம் பெறுகின்றது. இதில் அன்னம்லு அத்தியாயத்தின் இடையில் வருகின்ற பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பது அந்த அத்தியாயத்தின் ஒரு பகுதி என்பதில் எந்த அறிஞரும் கருத்து வேறுபாடு கொள்ளவில்லை.

113 அத்தியாயங்களின் துவக்கத்தில் இடம் பெற்றுள்ள பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பது அந்தந்த அத்தியாயங்களில் கட்டுப்பட்டதா? இல்லையா? என்பதில் தான் கருத்து வேறுபாடு கொள்கின்றனர். இரு கருத்துடையவர்களும் தங்களின் கருத்துக்குச் சில ஆதாரங்களையும் சமர்ப்பிக்கின்றனர்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அந்தந்த அத்தியாயங்களில் கட்டுப்பட்டதில்லை என்ற கருத்துடையோரின் ஆதாரங்களையும், அவர்களின் வாதங்களையும் முதலில் பார்ப்போம்.

முதல் ஆதாரம்

நாம் ஏற்கனவே ஃபாதிஹா அத்தியாயத்தின் சிறப்புக்கள் பற்றி சில ஹதீஸ்களைக் குறிப்பிட்டிருந்தோம். அந்த ஹதீஸ்கள் அனைத்துமே இந்தக் கருத்துடையவர்களின் ஆதாரமாக உள்ளன.

குர்ஆனில் உள்ள மகத்தான அத்தியாயத்தைக் கற்றுத் தரட்டுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு அது அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் என்பது தான் என்று கூறினார்கள். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பது இந்த அத்தியாயத்தில் கட்டுப்பட்டதாக இருந்திருந்தால், அதிலிருந்து ஓதத் துவங்கி இருப்பார்கள் என்பது இந்த சாராரின் வாதம்.

இரண்டாவது ஆதாரம்

நீ தொழுகையைத் துவங்கியதும் என்ன ஓதுவாய்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்க, அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்… என்று ஓதுவேன் என பதில் கூறினேன். அது தான் தலை சிறந்த அத்தியாயம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நபித்தோழர் ஃபாதிஹா அத்தியாயத்தை அல்ஹம்து விலிருந்தே தொடங்கி ஓதுகிறார். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் அங்கீகரிக்கிறார்கள். பிஸ்மில்லாஹ்வும் அதன் ஒரு பகுதி என்றிருந்தால் திருத்திக் கொடுத்திருக்க மாட்டார்களா? இது இந்த சாராரின் கேள்வி.

மூன்றாவது ஆதாரம்

அபூஸயீதுல் குத்ரீ அவர்கள் ஒருவருக்கு ஓதிப்பார்க்கும் நிகழ்ச்சியில் அல்ஹம்துலில்லாஹி என்றே ஓதிப்பார்த்ததாக வந்துள்ளது. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அந்த அத்தியாயத்தின் ஒரு பகுதி என்றால் அதை அவர் விட்டிருக்க மாட்டார் அல்லவா? என்று இந்தக் கருத்துடையவர்கள் கேட்கிறார்கள்.

நான்காவது ஆதாரம்

தொழுகையில் ஓதுவதை எனக்கும், என் அடியானுக்கும் இடையில் நான் பங்கிட்டுள்ளேன் என்று வருகின்ற ஹதீஸில் அல்ஹம்து என்றே துவங்கப்படுகின்றது. இங்கேயும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் கூறப்படாததால் அது அத்தியாயங்களில் சேர்ந்தது அல்ல என்கிறார்கள் இவர்கள்.

ஐந்தாவது ஆதாரம்

திருக்குர்ஆனின் 30 வசனங்கள் கொண்ட ஒரு அத்தியாயம் உள்ளது. அதை ஓதுபவர் மன்னிக்கபடும் வரை அந்த அத்தியாயம் பரிந்துரை செய்து கொண்டே இருக்கும். என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, தபாரகல்லதீ பியதிஹில் முல்கு என்ற அத்தியாயமே அது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்கள்: அஹ்மத் 7634, அபூதாவூத் 1192, திர்மிதீ 2716

தபாரகல்லதீ அத்தியாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டும் போது தபாரகல்லதீ என்று தான் குறிப்பிட்டுள்ளார்கள். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதைக் குறிப்பிடவில்லை. மேலும் இந்த அத்தியாயத்தில் 30 வசனங்கள் உள்ளதாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீமைச் சேர்க்காமல் தான் 30 வசனங்கள் உள்ளன. அதைச் சேர்த்தால் 31 ஆகிவிடும். எனவே எந்த அத்தியாயத்திலும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் கட்டுப்பட்டதல்ல என்று இவர்கள் கூறுகிறார்கள்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed