பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அத்தியாயத்தின் ஒரு பகுதியா?-01

ஆறாவது ஆதாரம்

நான் அல்லாஹ்வின் தூதருடனும், அபூபக்ருடனும், உமருடனும் உஸ்மானுடனும் தொழுதிருக்கிறேன். அவர்கள் அல்ஹம்து லில்லாஹி … என்றே துவங்குவார்கள். யாரும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதை ஆரம்பத்திலோ கடைசியிலோ ஓதி நான் கேட்டதில்லை.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி); நூல்: முஸ்லிம் 605

இதே கருத்தை அப்துல்லாஹ் பின் முகப்பல் (ரலி) அவர்களும் அறிவிக்க அஹ்மத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அல்ஹம்து என்றே ஓதத் துவங்கியதாக இந்த ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் எனக் கூற மாட்டார்கள் என்றும் தெளிவுபடுத்தப்படுகிறது. எனவே அத்தியாயங்களின் துவக்கத்தில் எழுதப்பட்டுள்ள பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அந்த அத்தியாயங்களின் ஒரு பகுதி அல்ல. ஒரு அத்தியாயம் முடிவுற்று, அடுத்த அத்தியாயம் துவங்குகிறது என்று அடையாளம் காட்டுவதற்காகவே அத்தியாயங்களின் துவக்கத்தில் அது எழுதப்படுகின்றது என்று இந்த சாரார் வாதிக்கிறார்கள்.

இந்த சாராரின் வாதங்கள் சரியானவை அல்ல. மாற்றுக் கருத்துக் கொண்டோரின் வாதங்களே பலமானவை. மாற்றுக் கருத்துடையோரின் வாதங்களையும் இந்த ஆதாரங்களுக்கு அவர்கள் தருகின்ற பதிலையும் பார்ப்போம்.

ஹதீஸ்களைப் பொறுத்தவரை ஒரு நபித்தோழரோ, அல்லது பலரோ அதை நபிமொழி என்று அறிவித்திருப்பார்கள். ஆனால் ஒரு வசனத்தைக் குர்ஆனின் ஒரு பகுதி என்று கூற வேண்டுமானால் நபித்தோழர்கள் அனைவரும் அதைக் குர்ஆன் என அறிமுகம் செய்திருக்க வேண்டும்.

குர்ஆன் வசனம் என்று நிரூபணம் செய்ய ஒன்றிரண்டு நபித்தோழர்கள் அறிவிப்பது மட்டும் போதுமான ஆதாரமாகாது.

அல்ஃபாத்திஹா அத்தியாயம் குர்ஆனின் முதல் அத்தியாயம் என்று நாம் நம்புகிறோம். எவ்வாறு நம்புகிறோம்? ஒட்டுமொத்த சமுதாயமும் – ஒருவர் கூட மாற்றுக் கருத்துக் கொள்ளாமல் இதைக் குர்ஆனின் முதல் அத்தியாயம் என்று முடிவு செய்து அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தினர். எனவே இது போல் வலிமையான சான்றின் மூலம் மட்டுமே குர்ஆன் வசனம் என்று முடிவு எடுக்க வேண்டும்.

ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அவ்வப்போது திருக்குர்ஆன் வசனங்கள் அருளப்பட்டவுடன் அதை எழுதக் கூடியவர்களை உடனுக்குடன் அழைத்து எழுதி வைக்கச் செய்தார்கள். திருக்குர்ஆனுடன் திருக்குர்ஆன் அல்லாத எந்த வார்த்தையும் கலந்து விடாமல் இருக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தார்

உஸ்மான் (ரலி) அவர்கள் குர்ஆனைத் தொகுத்த போது எழுத்தர்களான நபித்தோழர்கள் எந்த வரிசையில் எழுதி வைத்திருந்தார்களோ, எந்த வரிசையில் மனனம் செய்திருந்தார்களோ அந்த அடிப்படையில் தான் தொகுத்தார்கள். எனவே எந்த வசனம் எந்த அத்தியாயத்தில் எந்த இடத்தில் உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரிசைப்படுத்தி ஓதியும், எழுதச் செய்தும் வழிகாட்டியுள்ளனர் என்பதை இதிலிருந்து அறியலாம்.

ஒரு வசனத்தை எந்த இடத்தில் எழுத வேண்டும் என்பது உட்பட எல்லாக் குறிப்புகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி குர்ஆனில் அதிக அக்கரை செலுத்தியுள்ளார்கள் என்பது மேற்கூறிய ஹதீஸிலிருந்து தெளிவாகும்.

அப்துல்லாஹ் பின் மஸ்வூது, ஸாலிம், முஆத், உபை பின் கஃபு ஆகிய நால்வரிடமிருந்து குர்ஆனை எடுத்துக் கொள்ளுங்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி); நூல்: புகாரி 3758, 3760, 3806, 3808

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருவாயிலிருந்து எழுபதுக்கும் அதிகமான அத்தியாயங்களைப் பெற்றிருக்கிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக, அல்லாஹ்வின் வேதத்தை நான் நன்கு அறிந்தவன் என்பதை நபித்தோழர்கள் விளங்கி இருக்கிறார்கள். (இதனால்) நான் அவர்களை விட (எல்லா விதத்திலும்) சிறந்தவனில்லை என்று ஒரு சொற்பொழிவில் இப்னு மஸ்ஊது (ரலி) குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஷகீக் பின் ஸலமா (ரலி); நூல்: புகாரி 5000

அவனைத் தவிர வணக்கத்துக்குரியவன் எவருமில்லை. அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக அல்லாஹ்வின் வேதத்தில் எந்த அத்தியாயம் அருளப்பட்டாலும் அது எங்கே இறங்கியது என்பதை நான் அறிவேன். எந்த வசனம் அருளப்பட்டாலும் அது யாரைப் பற்றி அருளப்பட்டது என்பதையும் நான் அறிவேன். அல்லாஹ்வின் வேதத்தை என்னை விட நன்கு அறிந்தவர்கள் ஒட்டகத்தில் சென்றடையும் தூரத்தில் இருந்தாலும் நான் அவர்களை நோக்கிப் பயணமாகி இருப்பேன் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி) குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: மஸ்ரூக் (ரலி); நூல்: புகாரி 5002

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் குர்ஆனைத் திரட்டியவர்கள் யார்? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். உபை பின் கஃபு, முஆது பின் ஜபல், ஸைத் பின் ஸாபித், அபூஸைத் ஆகிய அன்ஸார்களைச் சேர்ந்த நால்வர் தான் என்று அனஸ் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர்: கதாதா (ரலி); நூல்: புகாரி 5003

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே திருக்குர்அன் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டது என்பதையும், எந்த இடத்தில் யாரைப் பற்றி அந்த வசனங்கள் அருளப்பட்டன என்ற விபரங்கள் உட்பட எல்லா விபரங்களும் நபித்தோழர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தன என்பதையும் இந்த ஹதீஸ்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.

இவ்வாறு அருளப்பட்டு உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டவைகளை ஆண்டு தோறும் சரிபார்க்கும் பணியும் இறைவனால் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை எனக்குக் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். இந்த ஆண்டு இரண்டு முறை எனக்கு ஓதிக் காட்டினார்கள். இதன் மூலம் என் வாழ் நாள் (தவணை) நெருங்கி விட்டதாகவே நான் கருதுகின்றேன் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஃபாத்திமா (ரலி); நூல்: புகாரி 3624

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்ந்தார்கள். அதிலும் (குறிப்பாக) ரமளான் மாதத்தில் மிக அதிகமாக வாரி வழங்குவார்கள். ஏனெனில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமலானில் ஒவ்வொரு இரவிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திப்பார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை எடுத்தோதுவார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி); நூல்: புகாரி 6, 1902, 3220, 3554, 4997

ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறை திருக்குர்ஆனை எடுத்தோதிக் காட்டுவார்கள் என்ற ஹதீஸ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு ஓதிக்காட்டியதன் மூலமும் ஒத்துப்பார்க்கப்பட்டுள்ளது என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.

என் மூலம் குர்ஆன் அல்லாத எதனையும் எழுதி வைக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையும் பிறப்பித்திருந்தனர்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி); நூல்: முஸ்லிம் 5326

பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விஷயங்களை எழுதி வைத்துக் கொள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளனர். ஆகவே மேற்கூறிய ஹதீஸுக்கு குர்ஆனுடன் கலந்து விடுமாறு எதனையும் எழுதி வைக்காதீர்கள் என்றே நாம் பொருள் கொள்ள முடியும்.

திருக்குர்ஆனில் இல்லாத எந்த ஒரு சொல்லையும் குர்ஆனுடன் இணைத்து எழுதாதீர்கள்! என்ற கட்டளையின் மூலம் குர்ஆன் விஷயத்தில் மிகமிக அதிக கவனத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் உணரலாம். நபித்தோழர்களும் குர்ஆனில் சேராத எந்த ஒன்றையும் சேர்த்து எழுதியதில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் அருளப்பட்ட எந்த வசனமும் எழுதப்படாமல் விடுபட்டதில்லை. எனினும் ஒட்டுமொத்தமாக நூல் வடிவில் அது தொகுக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக பல்வேறு நபித்தோழர்கள் தங்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை எழுதிக் கொண்டார்கள். சிலர் எழுதிக் கொண்டது வேறு சிலரிடம் இல்லாமல் இருந்தது.

சில வசனங்கள், அத்தியாயங்கள் அருளப்பட்ட போது சில நபித்தோழர்கள் எங்கேனும் சென்றிருந்தால் அவர்கள் அதை எழுதிக் கொள்ள முடியாமல் போனது. இந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின் எல்லா நபித்தோழர்களும் எழுதி வைத்துள்ளதைத் திரட்டிஉ கோர்வை செய்யும் கட்டாயம் ஏற்பட்டது. அந்தக் கட்டாயத்தை மேலும் உறுதிப் படுத்துவதற்கான நிகழ்ச்சிகளும் நடந்தேறின.

யாமாமா போர் நடந்த பின் அபூபக்ரு (ரலி) எனக்குத் தூது அனுப்பினார்கள். (நான் அவர்களிடம் சென்ற போது) உமர் (ரலி) அவர்களும் அவர்களுடனிருந்தனர். திருக்குர்ஆனை மனனம் செய்தவர்களை யமாமா போர்க்களம் அதிக அளவில் அழித்து விட்டது. இது போல் பல்வேறு போர்க்களங்களில் குர்ஆனை மனனம் செய்தவர்கள் அதிகம் கொல்லப்பட்டு விட்டால் குர்ஆனில் பெரும்பகுதி அழிந்துவிடுமோ? என அஞ்சுகிறேன்.

எனவே குர்ஆனை ஒன்று திரட்டும் பணியை நீங்கள் மேற்கொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன் என்று உமர் என்னை வற்புறுத்துகிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யாத ஒரு பணியை நான் எப்படிச் செய்வது என்று உமருக்கு நான் பதில் கூறினேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது மிகவும் சிறந்த பணி தான்! உமர் கூறினார். இறைவன் என் உள்ளத்திலும் அதன் நியாயத்தை உணர வைக்கும் வரை உமர் என்னை வற்புறுத்திக் கொண்டே இருந்தார்.

(இறுதியில்) உமருடைய கருத்துக்கே நானும் வந்தேன் என்று என்னிடம் அபூபக்ரு (ரலி) விபரமாகக் கூறினார்கள். மேலும் என்னை நோக்கி, அறிஞனாகவும், இளைஞனாகவும் நீர் இருக்கிறீர்! நாம் உம்மைச் சந்தேகிக்க மாட்டோம். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வஹீயை நீர் எழுதிக் கொண்டுமிருந்தீர்! எனவே குர்ஆன் வசனங்களைத் தேடி எடுத்து ஒன்று திரட்டுவீராக என்று அபூபக்ரு (ரலி) கட்டளையிட்டார்கள்.

குர்ஆனைத் திரட்டும் இந்தப் பணியை விட மலைகளில் ஏதேனும் ஒரு மலையை இடம் பெயர்க்கும் படி எனக்கு அவர் கட்டளையிட்டிருந்தால் அது எனக்கு அவ்வளவு சிரமமாக இருந்திருக்காது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்ய முடியும்? என்று நான் அவர்களிடம் கேட்டேன். இது மிகவும் சிறந்த பணி தான் என்று அவர்கள் கூறினார்கள். அபூபக்ரும், உமரும் கொண்ட கருத்தை நான் கொள்ளும் வரை அபூபக்ரு என்னை வற்புறுத்திக் கொண்டே இருந்தார்.

பேரீச்சை மட்டைகள், ஓடுகள், மனித உள்ளங்கள் ஆகியவற்றிலிருந்து குர்ஆனை நான் திரட்டலானேன். தவ்பா அத்தியாயத்தின் இறுதிக்கு நான் வந்த போது லகத் ஜாஅகும் ரஸுலுன்… என்ற கடைசி வரிகளை அபூகுஸைமா அல் அன்ஸாரி என்பவரிடம் தவிர வேறு எவரிடமும் நான் காணவில்லை. அதை தவ்பா வின் இறுதியில் சேர்த்தேன். பிறகு அந்த ஏடு அபூபக்ரு அவர்களிடம் இருந்தது. அதன் பின் உமரிடம் இருந்தது. அதன் பின் உமருடைய மகள் ஹஃப்ஸாவிடம் இருந்தது.

அறிவிப்பவர்: ஸைது பின் ஸாபித் (ரலி); நூல்: புகாரி 4679, 4986, 7191

இந்த வசனம் குஸைமா (ரலி) அவர்களிடம் மட்டும் எழுத்து வடிவில் இருந்தாலும் இது குர்ஆனில் உள்ளது தான் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

இந்த வசனம் தான் குர்ஆனில் இறுதியாக அருளப்பட்டது என்று உபை பின் கஅப் (ரலி) அறிவித்துள்ளார்கள்.

நூல் : ஹாகிம் 3296

திருக்குர்ஆனைத் திரட்டும் பணியை மேற்கொண்ட ஸைது பின் ஸாபித் (ரலி) அவர்கள் ஒரு வசனத்தை குர்ஆனில் இணைக்கும் போது ஒரே ஒருவர் மட்டும் எழுதி வைத்திருந்தால் பதிய மாட்டார்கள் என்பதை மேற்கூறிய ஹதீஸ் உணர்த்துகின்றது.

லகத்ஜா அகும் ரஸுலுன்… என்ற வசனம் அபூகுஸைமா அல் அன்ஸாரி என்பவரிடம் மட்டுமே இருந்தது என்று கூறுவதன் மூலம் மற்ற வசனங்களை பலரும் எழுதி வைத்திருந்தார்கள் என்பதை நாம் உணரலாம். அந்த வசனம் மட்டும் தான் ஒரே ஒருவரிடம் இருந்திருக்கிறது என்பதையும் நாம் அறிகிறோம். அந்த ஒரு வசனத்தைக் கூட உடனே ஸைது பின் ஸாபித் (ரலி) தவ்பா அத்தியாயத்தில் சேர்த்து விடவில்லை. அதையும் நன்கு பரிசீலனை செய்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வஹீ அறிவிக்கப்படாத எந்த ஒரு வார்த்தையையும் மேம்போக்காக அந்த அறிஞர் குழுவினர் குர்ஆனுடன் சேர்த்து விடவில்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள மேற்கூறிய ஆதாரங்கள் போதுமானவையாகும்.

இந்த அறிஞர் குழுவின் மாபெரும் பரிசீலனையுடன் திரட்டப்பட்ட குர்ஆனில் தவ்பா தவிர எல்லா அத்தியாயங்களின் துவக்கத்திலும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்ற வசனம் எழுதப்பட்டிருந்தது.

அபூபக்ரு (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் திரட்டப்பட்டு நூலுருவம் பெற்ற குர்ஆன் ஒரே ஒரு பிரதி மட்டுமே அவர்களிடம் இருந்தது. அபூபக்ரு (ரலி) அவர்களின் வாழ்நாளில் அந்தப் பிரதி அவர்களிடம் இருந்து வந்தது. அவர்களின் மரணத்திற்குப் பின் உமர் (ரலி) அவர்களிடம் அந்தப் பிரதி இருந்து வந்தது. அதன் பின் உமர் (ரலி) அவர்களின் மகளார் அன்னை ஹப்ஸா (ரலி) அவர்களிடம் அந்தப் பிரதி இருந்து வந்தது.

உஸ்மான் (ரலி)யின் ஆட்சிக் காலத்தில் இஸ்லாம் உலகின் பல பாகங்களுக்கும் பரவிய போது ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாகத் திருக்குர்ஆனை ஓதலானார்கள். ஒப்பிட்டுச் சரிபார்த்துக் கொள்ளும் ஒரே மூலப் பிரதி மதீனாவில் ஹஃப்ஸா (ரலி)யிடம் மட்டுமே இருந்தது. எல்லாப் பகுதி மக்களும் குர்ஆனை அதன் உண்மையான அமைப்பில் ஓதிட வேண்டும் என்பதற்காக மூலப் பிரதிக்கு பல நகல்கள் தயாரித்து பல்வேறு பகுதிகளுக்கும் உஸ்மான் (ரலி) அனுப்பினார்கள்.

ஹுதைஃபதுல் யமான் (ரலி) அவர்கள் அர்மீனியா அஜர்பைஜான் வெற்றியின் போது அங்குள்ளவர்கள் குர்ஆனை ஓதுவதில் பல்வேறு முறைகளைக் கையாண்டு வந்ததைக் கண்டனர். இது அவர்களைத் திடுக்கமுறச் செய்தது (அப்போதை ஜனாதிபதி) உஸ்மான் (ரலி) அவர்களிடம் வந்து மூமின்களின் தலைவரே! யூத கிறித்தவர்கள் தங்கள் வேதங்களில் முரண்பட்டது போல் இந்தச் சமுதாயத்தினரும் முரண்படுவதற்கு முன்பாக இவர்களைச் செம்மைப்படுத்துங்கள் என்று கூறினார்கள்.

உடனே உஸ்மான் (ரலி) அவர்கள் குர்ஆன் (மூலப்) பிரதியை எங்களுக்குத் தந்துதவுங்கள். அதைப் போல் பல பிரதிகள் தயார் செய்து கொண்டு திருப்பித் தருகிறோம் என்று ஹஃப்ஸாவிடம் கேட்டு அனுப்பினார்கள். ஹஃப்ஸா (ரலி) அவர்களும் தம்மிடமிருந்த பிரதியை உஸ்மான் (ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள். ஸைத் பின் ஸாபித் (ரலி), அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி), ஸயீத் பின் ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) ஆகியோரைப் பல பிரதிகள் தயாரிக்கும்படி கட்டளையிட்டார்கள்.

அதன்படி பல பிரதிகளை அவர்கள் தயார் செய்தார்கள். மேற்கூறிய நால்வரில் ஸைத் பின் ஸாபித் (ரலி) (அவர்களைத் தவிர உள்ள) குறைஷிகளான மூவரையும் நோக்கி, நீங்களும் ஸைத் பின் ஸாபித்தும் குர்ஆனில் (எப்படி ஓதுவது என்பதில்) கருத்து வேறுபாடு கொண்டால் குறைஷிகளின் மொழி வழக்கிலேயே அதனை எழுதுங்கள்! ஏனெனில் குறைஷிகளின் மொழி வழக்கிலேயே குர்ஆன் இறங்கியது என்று கூறினார்கள்.

அப்படியே அவர்கள் செய்தார்கள். பல பிரதிகள் தயாரான பின் மூலப் பிரதியை ஹஃப்ஸா (ரலி)யிடம் உஸ்மான் (ரலி) ஒப்படைத்தார்கள். (நகல் எடுக்கப்பட்ட) பிரதிகளை நாலா பாகங்களுக்கும் அனுப்பி வைத்தார்கள். அதைத் தவிர உள்ள மற்ற ஏடுகளைத் தீயிட்டு எரித்து விடும்படிக் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி); நூல்: புகாரி 4988

மேற்கூறிய வரலாற்றுக் குறிப்புகளிலிருந்து விளங்கும் உண்மைகளை நாம் கவனமாகப் பார்க்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் குர்ஆன் எவ்வாறு இறங்கியதோ அவ்வாறே எதையும் கூட்டாமல் குறைக்காமல் ஒரு பிரதியை அபூபக்ரு (ரலி) அவர்கள் தொகுத்தார்கள். பல அறிஞர்களின் தகுந்த பரிசீலனைக்குப் பின் அந்த ஒரு பிரதி தயாரிக்கப்பட்டது.

அந்த ஒரு பிரதியை பல நகல்களாக எடுக்கும் திருப்பணியை உஸ்மான் (ரலி) அவர்கள் மேற்கொண்டார்கள். அபூபக்ரு (ரலி) அவர்களால் தொகுக்கப்பட்ட அந்த மூலப் பிரதியில் உள்ளதற்கு மேல் எந்த ஒன்றையும் அவர்கள் சேர்க்கவோ, நீக்கவோ இல்லை.

அவர்களால் தொகுக்கப்பட்டவற்றில் எவை எழுதப்பட்டிருந்ததோ அவை அனைத்துமே திருக்குர்ஆன் தான். ஸஹாபாக்கள் அத்தனை பேரின் ஒட்டுமொத்தமான கருத்தும் அது தான். அந்தப் பிரதிகளில் ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்ற வசனமும் எழுதப்பட்டிருந்தது.

தவ்பா என்ற அத்தியாயத்தின் துவக்கத்தில் மட்டுமே பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் எழுதப்பட்டிருக்கவில்லை. ஸஹாபாக்கள் அனைவரும் எதைக் குர்ஆன் என்று நமக்கு அறிமுகம் செய்தார்களோ அதில் எந்த ஒன்றையும் குர்ஆன் அல்ல என்று கூற யாருக்கும் அதிகாரம் இல்லை.

அபூபக்ரு (ரலி) அவர்கள் தொகுத்த குர்ஆனும், உஸ்மான் (ரலி) அவர்கள் அதிலிருந்து எடுத்த நகல்களும் ஸஹாபாக்களின் ஒருமித்த கருத்தைப் பெற்றிருந்தது. குர்ஆனில் இல்லாததைத் தவறுதலாகச் சேர்த்திருந்தால் நபித்தோழர்களில் எவராவது அதனை ஆட்சேபனை செய்திருப்பார். அது பற்றி சர்ச்சைகள் நடந்திருக்கும். அப்படி எதுவும் நடந்ததாக எந்தக் குறிப்பும் இல்லை.

எனவே நபித்தோழர்கள் பெரும் சிரத்தையுடன் தொகுத்த குர்ஆனில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் எழுதப்பட்டது. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு பகுதி தான் என்பதற்கு இது வலுவான சான்றாகும்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் இறங்கிய பின்பு தான் ஒரு அத்தியாயம் முடிந்து விட்டது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); நூல்: அபூதாவூத் 669

அத்தியாயம் முடிந்ததன் அடையாளமாக பின்னால் வந்தவர்கள் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீமைச் சேர்க்கவில்லை என்பதையும், அது அல்லாஹ்விடமிருந்து இறக்கி அருளப்பட்டது என்பதையும், ஒவ்வொரு அத்தியாயத்திலும் அது எழுதப்பட வேண்டும் என்பது இறைவன் புறத்திலிருந்து வந்த கட்டளையே என்பதையும், எனவே அது குர்ஆனின் ஒரு பகுதி என்பதையும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் இறங்கிய பின்பு தான் என்ற சொற்றொடர் மூலம் அறிந்து கொள்ளலாம்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பது தவ்பா அத்தியாயம் தவிர எல்லா அத்தியாயங்களிலும் ஒரு வசனம் தான் என்பதைக் கண்டோம். முதல் சாரார் எடுத்து வைத்த ஆதாரங்களுக்கான விளக்கத்தை இனி காண்போம்.

ஒரு சில சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு சில அத்தியாயங்களைக் குறிப்பிடும் போது, பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் கூறாமல் அந்த அத்தியாயங்களை ஓதி இருக்கிறார்கள். இந்தக் கருத்தில் ஐந்து ஹதீஸ்களை நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பது அத்தியாயத்தின் ஒரு பகுதியில்லை என்பதற்குப் போதிய சான்றாக அவை ஆகமாட்டா.

ஏனெனில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேறு சில சந்தர்ப்பங்களில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் உடன் சில அத்தியாயங்களை ஓதிக் காட்டியுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளியில் எங்களுடன் இருந்த போது சிறிது நேரம் தலை கவிழ்ந்துவிட்டு பின்னர் சிரித்தவர்களாகத் தம் தலையை உயர்த்தினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எதற்காகச் சிரிக்கின்றீர்கள்? என்று நாங்கள் கேட்டோம். சற்று முன் எனக்கு ஒரு அத்தியாயம் அருளப்பட்டது. அதில் எனக்கு பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருப்பதால் அதற்காக மகிழ்ச்சியுற்று சிரித்தேன் என்று கூறிவிட்டு பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் இன்னா அஃதைனாகல் கவ்ஸர்… என்று ஓதிக் காட்டலானார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி); நூல்: முஸ்லிம் 607

ஒரு அத்தியாயம் இறங்கியதாகக் கூறி அந்த அத்தியாயத்தைக் குறிப்பிட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் உடன் சேர்த்தே அதை ஓதிக் காட்டுகின்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருக்குர்ஆன் ஓதுதல் எவ்வாறு இருக்கும்? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் விசாரிக்கப்பட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீட்டி, நிறுத்தி ஓதுவார்கள் என்று கூறிவிட்டு, பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதில் ரஹ்மான், ரஹீம் என்ற வார்த்தைகளைக் நீட்டி ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: கதாதா; நூல்: புகாரி 5046

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஓதுதல் பற்றி உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று ஒவ்வொரு வசனமாக ஓதுவார்கள் என்று அவர்கள் பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி); நூல்: அபூதாவூத் 3487

இந்த மூன்று நபிவழிகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் உடன் சேர்த்தே அத்தியாயங்களை ஓதி இருப்பது தெளிவாகக் கூறப்படுகிறது.

சில சமயங்களில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் உடனும், வேறு சில சந்தர்ப்பங்களில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் இல்லாமலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தியாயங்களை ஓதியுள்ளது முரண்பாடு போல் தோன்றலாம். ஆனால் உண்மையில் இதில் முரண்பாடு எதுவுமில்லை. ஏனெனில் ஆரம்ப காலங்களில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் வை இணைத்துக் கொள்ளும்படி இறைவனது உத்தரவு வராமல் இருந்து, பின்னரே அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் இறங்கிய பின்பே ஒரு அத்தியாயம் முடிந்து விட்டது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் ஹதீஸை முன்னர் நாம் குறிப்பிட்டோம். இந்த ஹதீஸின் அடிப்படையில் மேற்கூறிய இரு கருத்துடைய ஹதீஸ்களை இணைக்கும் போது நமக்குத் தெளிவான விளக்கம் கிடைத்துவிடும்.

அதாவது, பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் இறங்குவதற்கு முன்னர் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் கூறாமலும், அதன் பின்னர் அதனைக் கூறியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதி இருக்கிறார்கள். இரண்டு வகையான ஹதீஸ்களுக்கும் அப்போது தான் அர்த்தமிருக்கும்.

ஸப்வுல் மஸானி (திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள்) எவை? என்று அலீ (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்றார்கள். அதில் ஆறு வசனங்கள் தானே உள்ளன என்று மறுபடியும் அவர்களிடம் கேட்கப்பட்டது. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் (என்பதையும் சேர்த்து ஏழு வசனங்கள்) என்று பதில் கூறினார்கள்.

நூல் தாரகுத்னியில் 1207

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் வையும் அந்தந்த அத்தியாயங்களில் ஒரு பகுதியாகவே நபித்தோழர்கள் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதற்கும் திருக்குர்ஆனில் ஸப்வுல் மஸானி என்று கூறப்படுவது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் உடன் சேர்ந்த ஃபாத்திஹா அத்தியாயம் தான் என்பதற்கும் இது தெளிவான சான்றாக அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ஓத மாட்டார்கள் என்று வருகின்ற ஹதீஸ்களின் அடிப்படையில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பது அத்தியாயங்களின் ஒரு பகுதி இல்லை என்று கூறுவது ஏற்புடையதன்று. ஏனெனில் வேறு சில அறிவிப்புகளில் சப்தமிட்டு அதை ஓத மாட்டார்கள் என்று தெளிவாகக் கூறப்படுகின்றது. சப்தமிட்டோ, சப்தமிடாமலோ ஓதினார்கள் என்பதை வைத்து ஒன்றைக் குர்ஆனில் உள்ளதா? இல்லையா? என்று முடிவு செய்ய முடியாது.

ஒவ்வொரு அத்தியாயத்தையும் வேறு படுத்தி அறிந்து கொள்வதற்காக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது என்று சிலர் கூறுவது பொருத்தமானது அல்ல.

பின்னர் வந்தவர்களால் பிரித்து அறிவதற்காக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் எழுதப்பட்டது என்றால் இரண்டு சூராக்களுக்கிடையில் மட்டுமே எழுதப்பட்டிருக்க வேண்டும். முதல் சூராவாகிய ஃபாதிஹாவில் அது எழுதப்பட வேண்டியதில்லை.

பின்னர் வந்தவர்களால் பிரித்து அறிவதற்காக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சேர்க்கப்பட்டது என்றால் தவ்பா அத்தியாயத்திலும் அது சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டு அத்தியாயங்களைப் பிரித்துக் காட்டத் தான் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சேர்க்கப்பட்டது என்ற காரணம் சரியானது என்றால் தவ்பா, அன்பால் இரண்டையும் பிரித்துக் காட்ட பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் தேவையல்லவா?

ஒரு அத்தியாயம் முடிந்து மறு அத்தியாயம் துவங்குகின்றது என்பதைக் காட்டுவதற்காக இப்படி ஒரு வாசகத்தைச் சேர்த்திருக்க வேண்டியதில்லை. ஒரு அத்தியாயம் முடிந்ததும், நீண்ட கோடு போன்ற அடையாளங்களைப் போட்டு வேறுபடுத்த முடியும். அர்த்தமும் கருத்துமுள்ள அழகான வசனத்தை உருவாக்கி குர்ஆனில் கட்டுப்பட்டதா? இல்லையா? என்ற சர்ச்சையை ஏற்படுத்தும் வாசகத்தைச் சேர்த்திருக்க மாட்டார்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

சுருங்கச் சொல்வதென்றால் அல்லாஹ்வின் உத்தரவுப்படியே அந்த வசனம் அத்தியாயங்களின் ஆரம்பத்தில் எழுதப்பட்டது. எந்த மனிதனுடைய அபிப்பிராயப்படியும் எதுவும் நபித்தோழர்களால் குர்ஆனில் சேர்க்கப்படவில்லை. அவ்வளவு வடிகட்டித் தான் குர்ஆன் தொகுக்கப்பட்டிருக்கின்றது என்பதைப் புரிந்து கொண்டால் இது பற்றிய ஐயங்கள் அகன்று விடும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed