கஅபா ஆலயத்துக்கு முஸ்லிமல்லாதவர்கள் வரலாகாது என்று இவ்வசனத்தில் (9:28) கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமிய வணக்கத் தலங்களான பள்ளிவாசல்களுக்கு மற்றவர்கள் தூய்மையாக வருவதை இஸ்லாம் தடுக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளிவாசலே அவர்களின் தலைமைச் செயலகமாக இருந்தது. போர்க்களங்களில் கைதிகளாகப் பிடிக்கப்படுவோர் பள்ளிவாசலில் தான் கட்டி வைக்கப்படுவார்கள். மக்கள் மத்தியில் ஏற்படும் வழக்கு விவகாரங்களையும் பள்ளிவாசலில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விசாரணை செய்வார்கள்.

முஸ்லிமுக்கும், யூதருக்கும் இடையே ஏற்படும் வழக்குகளும் இதில் அடக்கம். பல நாட்டு முஸ்லிமல்லாத தலைவர்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பள்ளிவாசலில் சந்தித்துள்ளனர். எனவே உலகில் உள்ள எந்தப் பள்ளிவாசலுக்கும் முஸ்லிமல்லாதவர்கள் வருவது அனுமதிக்கப்பட வேண்டும்.

இஸ்லாமிய வணக்கத் தலங்களான பள்ளிவாசல்களுக்கு மற்றவர்கள் தூய்மையாக வருவதை இஸ்லாம் தடுக்கவில்லை. ஆயினும் உலகில் ஒரே இறைவனை வணங்குவதற்காக எழுப்பப்பட்ட முதல் ஆலயமான கஅபா மற்றும் அதன் வளாகத்திற்கு மட்டும் பல கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் அனுமதிக்கப்படக் கூடாது என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.

இதை மனித நேயத்திற்கு எதிரானது என்று கருதக் கூடாது. ஏனெனில் கஅபாவை அபய பூமியாக இறைவன் அமைத்துள்ளான். அந்த ஆலயத்துக்கும், அதன் வளாகத்துக்கும் சிறப்பான தனிச்சட்டங்கள் உள்ளன. அங்கே பகை தீர்க்கக் கூடாது. புல் பூண்டுகளைக் கூட கிள்ளக் கூடாது என்பன போன்ற விதிகள் உள்ளன.

இந்தச் சிறப்பான விதிகளை இஸ்லாத்தை ஏற்றவர்களால் தான் கடைப்பிடிக்க இயலும். உலகம் அழியும் நாள் வரை அபயபூமியாக அறிவிக்கப்பட்டுள்ள புனித பூமியாகவும் அது அமைந்துள்ளது இந்தத் தடைக்கான மற்றொரு காரணம்.

மேலும் கஅபா ஆலயம் சுற்றுலாத்தலம் அல்ல. அது ஏக இறைவனை நம்பி ஏற்றுக் கொண்டவர்கள் வழிபாடு செய்வதற்காக மட்டுமே வர வேண்டிய தலமாகும்.

முஸ்லிமல்லாதவர்கள் ஏக இறைவனாகிய அல்லாஹ்வை நம்பாத காரணத்தாலும், கஅபா ஆலயம் இறைவனை வணங்குவதற்காக கட்டப்பட்ட முதல் ஆலயம் என்பதையும் அதன் புனிதத் தன்மையையும் அவர்கள் ஏற்காததாலும் அவர்கள் சுற்றுலா நோக்கத்தில் தான் கஅபாவுக்கு வருவார்கள். இதனால் தான் கஅபாவின் புனிதத்தன்மையை நம்பாத முஸ்லிமல்லாதவர்கள் வரலாகாது என்று தடுக்கப்படுகின்றனர்.

அந்த ஆலயத்தில் மற்றவர்களுக்கு அனுமதியில்லை என்ற சொல் மற்ற பள்ளிவாசல்களில் தடையில்லை என்ற கருத்தையும் உள்ளடக்கியுள்ளது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed