பிறர் குறையை பகிரங்கப்படுத்தலாமா?

புறம் பேசக் கூடாது; ஒருவரின் குறையை அம்பலப்படுத்தக் கூடாது என்றெல்லாம் மனிதனின் மானம் மரியாதை தொடர்பாகக் கூறப்படும் ஆதாரங்களை உரிய முறையில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். மற்ற ஆதாரங்களுக்கு முரணில்லாத வகையில் அவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மனிதர்களின் குறைகளை அம்பலப்படுத்தக் கூடாது என்பதன் பொருள் என்ன? மார்க்கத்துக்கோ மனித குலத்துக்கோ நன்மை தராத போது அப்படி பேசக் கூடாது என்பதே அதன் பொருள்.

மார்க்கம் என்றாலே பிறர் நலம் நாடுதல் தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். யாருடைய நலன் நாட வேண்டும் என்று நாங்கள் கேட்டோம். அல்லாஹ்வுக்கும், அவனது வேதத்துக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம் சமுதாயத் தலைவர்களூக்கும், முஸ்லிம் பொதுமக்களுக்கும் நலம் நாட வேண்டும் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் விடையளித்தார்கள்.

நூல் முஸ்லிம் 1523

ஒரு மனிதருக்கு இன்னொருவர் தனது மகளை மணமுடித்துக் கொடுக்க விரும்புகிறார். அந்த மனிதர் மதுபானம் அருந்தும் பழக்கம் உள்ளவர் என்று உங்களுக்குத் தெரிகிறது. மகளை மணமுடித்துக் கொடுப்பவர் அந்த மனிதர் பற்றி உங்களிடம் கேட்டால் யாரையும் குறை சொல்லக் கூடாது என்பதற்காக அவர் நல்லவர் என்று சொல்ல வேண்டுமா? அல்லது அவரது குறையைச் சொல்லி அந்தப் பெண்ணின் வாழ்க்கையைக் காப்பாற்ற வேண்டுமா?

ஒருவர் பண மோசடி செய்பவர் என்று உங்களுக்குத் தெரிகிறது. அவரைத் தனது நிறுவனத்தில் காசாளராக நியமிக்க எண்ணும் ஒருவர் உங்களிடம் கருத்து கேட்கிறார். அப்போது அவரது நேர்மையின்மை பற்றி தெரிவிப்பது குறை கூறுவதில் சேருமா?

ஒருவர் பொது வாழ்வில் பண மோசடி செய்பவர் என்று உங்களுக்குத் தெரிகிறது. அவர் ஏதோ ஒரு பணியைச் சொல்லி நிதி திரட்டுகிறார். மக்கள் அவரை நம்பி பணம் கொடுத்தால் அது அந்தப் பணிக்கு பயன்படாது என்று தெரிந்தால் அவர் ஒரு பிராடு பேர்வழி என்று சமுதாயத்தை எச்சரிப்பது அவரது மானத்துடன் விளையாடியதாக ஆகாது.

அது போல் ஹதீஸ்கள் எழுத்து வடிவில் பாதுகாக்கப்படாத காலத்தில் வாய் மொழியாக அறிவிப்பதை வைத்தே ஹதீஸ்கள் கிடைத்து வந்த காலத்தில் அதை அறிவிப்பவரின் நாணயம் நேர்மை நல்லொழுக்கம் போன்றவைகளை வைத்தே அவர் சொல்வது உண்மையா என்று அறியும் நிலை இருந்தது. அந்தக் கால கட்டத்தில் அறிவிப்பாளரிடம் குறை இருந்தால் அதை வெளிப்படுத்தி அவர் அறிவிக்கும் ஹதீஸ்களை நிராகரிக்காவிட்டால் பொய்களெல்லாம் ஹதீஸ்களாகிப் போய் மார்க்கம் சிரழிந்திருக்குமே? இது பரவாயில்லையா?

உங்கள் மீது ஒருவர் பொய்யாக வழக்குப் போட்டு பொய் சாட்சிகளையும் தயார்படுத்துகிறார். வழக்கு நடக்கும் போது அந்தப் பொய்யர் சொன்ன பொய்களைப் பட்டியல் போடாவிட்டால் நீங்கள் பொய்யராகவும் குற்றவாளியாகவும் ஆகி விடுவீர்கள். இப்படித்தான் நடப்பீர்களா?

மேற்கண்டது போன்ற சந்தர்ப்பங்களில் நாம் ஒருவரது குறைகளை அம்பலப்படுத்தினாலும் அதில் உங்களுக்கு நன்மை இருக்கும். அல்லது மற்றவருக்கு நன்மை இருக்கும். அல்லது மார்க்கத்துக்கு நன்மை இருக்கும் என்பதால் அது அனுமதிக்கப்பட்டது என்று புரிந்து கொள்ளவேண்டும்.

அது போல் கடந்த காலங்களில் கெட்டவர்களாக வாழ்ந்தவர்களுக்கு ஏற்பட்ட விளைவுகளைச் சொல்லி மக்களூக்கு எச்சரிப்பதும் இதில் சேராது. இதனால் தான் ஃபிர் அவ்னைப் பற்றியும் அபூஜஹ்ல் பற்றியும் பேசுகிறோம்.

நாம் வாழும் காலத்தில் நமக்கு அநீதி இழைப்பவர்கள் குறித்து சமுதாயத்தை எச்சரிப்பதற்காக அரசியல் வாதிகளின் தவறுகளை அம்பலப்படுத்துகிறோம்.

ஒருவரது பொருளை இன்னொருவர் திருடுவதை நாம் கண்டால் அவனைப் பிடித்துக் கொடுக்க வேண்டுமா? குறைகளை மறைக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு கண்டும் காணாமல் இருக்க வேண்டுமா? நான் யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என்று ஒரு பெண்மணி நபிகள் நாயகம் ஸல் அவர்களிடம் கேட்ட போது அந்த நபர்களின் குறைகளை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் வெளிப்படுத்தியதை பின்வரும் ஹதீஸில் இருந்து அறியலாம்.

நூல் முஸ்லிம் 1289

உங்களில் நேர்மையான இருவரை சாட்சியாக்குங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.(65:2) ஒருவர் நேர்மையாளரா என்று ஆய்வு செய்யும் போது அவருடைய குறை நிறைகள் வெளியே வந்து தீரும்.

இது போல் தான் கீழக்கரையைச் சேர்ந்த ஒருவர் நம்மைப் பொய்யர் என்று பலருக்கும் பரப்பிக் கொண்டிருக்கும் போது அவரை அடையாளம் காட்டா விட்டால் நாம் பொய்யர் என்ற கருத்து பதிந்துவிடும். அதைத் தடுக்கும் உரிமை எமக்கு உண்டு.

அநீதி இழைக்கப்பட்டவர் தவிர (வேறெவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் செவியுறுபவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:148

நம்முடைய இது போன்ற எந்த விமர்சனமும் எதிரிகளின் விமர்சனத்துக்கு பதில் என்ற முறையில் தான் இருக்கும். இதற்கு நமக்கு அனுமதி உண்டு.ஒருவரது குறைகளை அம்பலப்படுத்துவதால் மேற்கண்ட நன்மைகள் ஏதும் இல்லாமலோ பதிலடி என்ற முறையில் இல்லாமலோ ஒருவரை இழிவு ப்டுத்தும் வகையில் இருந்தால் அல்லது பொய்யான வாதங்கள் இருந்தால் அது தான் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

கீழைப் பொய்யர் என்பது பட்டப்பெயர் அல்ல. கீழக்கரையைச் சேர்ந்த பொய் சொல்பவர் என்பது ஒரு விமர்சனம் தான்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed