பிறருக்காக ஹஜ் செய்வது கூடுமா? யார் யாருக்கு செய்யலாம்?

கூடும். நெருங்கிய உறவினருக்கு மட்டும்

ஒவ்வொருவரும் தத்தமது செயலுக்குப் பொறுப்பாளியாவார்; ஒருவரது சுமையை இன்னொருவர் சுமக்க முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை. என்றாலும் ஒரு சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஒருவர் இன்னொருவருக்காக ஹஜ் செய்ய ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

ஹஸ்அம்கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை ஒட்டகையின் முதுகில் அமர இயலாத முதிய வயதுடையவராக இருக்கும் போது ஹஜ் எனும் அல்லாஹ்வின் கடமை ஏற்பட்டு விட்டதுஎன்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவருக்காக நீ ஹஜ் செய்என்று அவரிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்கள்: புகாரி 1513, 1854, 1855, 4399, 6228

உயிருடன் இருப்பவர் ஹஜ் செய்ய இயலாத நிலையில் இருந்தால் அவர் சார்பாக அவரது வாரிசுகள் ஹஜ் செய்யலாம். அது அவர் சார்பாக ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை இந்த ஹதீஸ் அறிவிக்கின்றது.

ஜுஹைனா எனும் கோத்திரத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, என் தாயார் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார்; மரணிக்கும் வரை அவர் ஹஜ் செய்யவில்லை. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய்! உன் தாயார் மீது கடனிருந்தால் அதனை நீ தானே நிறைவேற்றுவாய்! அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுங்கள்! அல்லாஹ்வின் கடனே நிறைவேற்ற அதிக தகுதியுடையது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); நூல்: புகாரி 6699

ஹஜ் கடமையானவர் மரணித்து விட்டால் அவர் சார்பாக அவரது வாரிசுகள் ஹஜ் செய்யலாம் என்பதை இந்த ஹதீஸ் அறிவிக்கின்றது. மேலும் அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட ஹஜ் போலவே, தனக்குத் தானே கடமையாக்கிக் கொண்ட ஹஜ்ஜையும் அவரது வாரிசுகள் நிறைவேற்றலாம் என்பதையும் இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

இந்த ஹதீஸ்களிலிருந்து ஒருவரது பிள்ளைகள் அவருக்காக ஹஜ் செய்யலாம் என்பதை நாம் அறிகிறோம். உன் தந்தையின் கடனை யார் நிறைவேற்றக் கடமைப்பட்டவர்? என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கேள்வியும் சிந்திக்கத்தக்கது. பிள்ளைகள் தான் பெற்றோர் சார்பாக ஹஜ் செய்யலாம் என்பதை இந்தக் கேள்வியிலிருந்து விளங்க முடியும்.

முதலில் தனக்காக

ஒருவரது பிள்ளைகள் தவிர மற்ற உறவினர்களும் அவருக்காக ஹஜ் செய்யலாம். ஆயினும் தனக்காக அவர் ஹஜ் செய்திருக்க வேண்டியது அவசியமாகும்.

ஒரு மனிதர் லப்பைக்க அன் ஷுப்ருமா(ஷுப்ருமாவுக்காக இஹ்ராம் கட்டுகிறேன்) என்று கூறியதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஷுப்ருமா என்பவர் யார்? என்று கேட்டார்கள். அதற்கவர், என் சகோதரர் என்றோ, என் நெருங்கிய உறவினர் என்றோ கூறினார். உனக்காக நீ ஹஜ் செய்து விட்டாயா? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டனர். அதற்கவர் இல்லை என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில் உனக்காக ஹஜ் செய்! பிறகு ஷுப்ருமாவுக்காக ஹஜ் செய்என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); நூல்கள்: அபூதாவூத் 1546, இப்னுமாஜா 2894

பெற்றோர் அல்லாத மற்ற உறவினருக்காக ஹஜ் செய்பவர்கள் முதலில் தமக்காக ஹஜ் செய்ய வேண்டும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்கலாம்.

பத்லீ ஹஜ்

ஒருவருடன் எந்த விதமான உறவும் இல்லாத அன்னியர்கள் அவருக்காக ஹஜ் செய்ய எந்த ஆதாரத்தையும் நாம் காண முடியவில்லை.

அல்லாஹ்வுக்காக இக்லாஸுடன் செய்ய வேண்டிய கடமை இன்று பத்லீ ஹஜ் என்ற பெயரால் வியாபாரமாக்கப்பட்டுள்ளது. பணம் படைத்தவர்களிடம் சில மவ்லவிமார்கள் அவர்களுக்காக ஹஜ் செய்வதாக வசூலில் இறங்கியுள்ளனர். இவர்கள் உறவினராக இல்லாததுடன், இதில் இக்லாஸும் அடிபட்டுப் போகின்றது.

கொடுக்கப்படுகின்ற கூலிக்காகவே இது நிறைவேற்றப் படுகின்றது. இவை யாவும் ஏமாற்று வேலையாகும்.

ஒருவருக்கு வசதி இருந்து பயணம் செய்ய வாரிசுகள் இல்லாவிட்டால் அவரிடம் அல்லாஹ் கேள்வி கேட்க மாட்டான்.

இது போன்ற ஏமாற்று வேலைகளில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed