பாவிகளுக்கும் அருளுபவன்
எவரிடமிருந்தாவது அளவுக்கதிகமான உதவிகளை ஒருவன் பெற்று விட்டால் அவருக்கு விசுவாசமாக நடக்க வேண்டுமென்று விரும்புகிறான். ஒரு சில சந்தர்ப்பங்களில் அவருக்கு விசுவாசமாக நடந்து கொள்ளஓ தவறி விடும் போது உதவி செய்த மனிதனைச் சந்திப்பதைத் தவிர்க்கிறான். தயக்கம் காட்டுகிறான். எந்த முகத்துடன் அவனைச் சந்திப்பது என்று வெட்கமடைகிறான். இதே கண்ணோட்டத்துடனேயே அல்லாஹ்விடத்திலும் மனிதன் நடந்து கொள்கிறான்.
நான் இறைவனுடைய பல கட்டளைகளைப் புறக்கணித்து வாழ்ந்து விட்டேன். எந்தத் தகுதியைக் கொண்டு நான் இறைவனிடம் என் தேவைகளைக் கேட்பேன்? இதன் காரணமாகவே இறைவனுக்கு நெருக்கமான அடியார்களைத் தேடிப் போய் என் கோரிக்கைகளை முன் வைக்கிறேன் என்று கூறக் கூடியவர்களை வாழ்க்கையில் நாம் சந்திக்கின்றோம்.
இவ்வாறு அவர்களைக் கூறச் செய்வது மேலே நாம் குறிப்பிட்ட அந்த மனநிலையேயாகும். அல்லாஹ்வைப் பற்றி அவனது அடியார்கள் அவ்வாறு கருதிவிடக் கூடாது என்பதற்காகவே ரப்புல் ஆலமீன் என்ற ஆதிக்கப் பண்பைத் தொடர்ந்து அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் என்று அல்லாஹ் குறிப்பிட்டு மனிதனின் அந்த மனநிலையை மாற்றுகிறான்.
மனிதன் என்ற முறையில் நீங்கள் தவறுகள் செய்பவர்கள்! அதற்காக என்னை விட்டு நீங்கள் வெருண்டோட வேண்டியதில்லை. நான் அளவற்ற அருளாளனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறேன் என அழைப்பு விடுக்கிறான். தன்னுடைய அருளும் அன்பும் எந்த அளவுக்கு விசாலமானது என்று மற்றொரு இடத்தில் அவன் கூறுவதைக் கவனிப்போம்.
தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (அல்குர்ஆன் 39:53)
இது எவ்வளவு அருள் நிறைந்த அழைப்பு! பாவிகளையே அழைத்து, என் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள் என்று கூறுவதென்றால் இந்தத் தாராளத்தை என்னவென்பது? மன்னிப்புக் கேட்கும் போது மன்னிப்பவர்களைப் பார்த்திருக்கிறான் மனிதன். மன்னிப்புக் கேளுங்கள் என்று அழைப்பு விடக் கூடியவன் அந்த ரஹ்மானைத் தவிர வேறெவரும் இருக்க முடியாது.
திருக்குர்ஆனின் எத்தனை இடங்களில் மன்னிப்புக் கேளுங்கள் என்று அல்லாஹ் அழைப்பு விடுக்கிறானோ, அத்தனையும் அவன் அளவற்ற அருளாளனாக (ரஹ்மானாக) நிகரற்ற அன்புடையோனாக (ரஹீமாக) இருப்பதனாலேயே. மன்னிப்புக்கு அழைப்பு விடுக்கும் அத்தனை வசனங்களும் இந்த இரண்டு பண்புகளின் விளக்கவுரைகளேயாகும்.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஏதேனும் துரோகம் செய்து விட்டு, மன்னிப்புக் கேட்டால் அவன் மன்னிக்கக் கூடும்! மன்னிக்க மறுக்கவும் கூடும்! மன்னிக்கும் போது கூட வேண்டா வெறுப்பாகவே மன்னிப்பது மனித இயல்பு. ஆனால் அந்த ரஹ்மான் இந்த மன்னிப்பை எப்படி எடுத்துக் கொள்கிறான் என்பதை அறிந்தால் அவனது அருளையும், அன்பையும் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
ஒரு மனிதன் வனாந்திரத்தில் காணாமல் போன தன் வாகனத்துக்காக தவித்துக் கொண்டிருக்கும் போது திடீரென அவனது வாகனம் கிடைத்து விட்டால் அவனது மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. தன் வாகனத்தைக் கண்ட போது ஒருவன் அடையும் மகிழ்ச்சியை விட தன் அடியான் தன்னிடம் பாவ மன்னிப்புக் கோரும் போது பன்மடங்கு அல்லாஹ் மகிழ்ச்சி அடைகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி); நூல்: புகாரி – 6309
ஒரு மனிதன் தன் ஒட்டகத்தின் மீதேறி பிரயாணம் செய்து கொண்டிருக்கிறான், யாருமற்ற வெட்ட வெளியில் அவனது ஒட்டகம் அவனை விட்டு ஓடவிடுகின்றது. அவனது உணவுப் பொருட்களும் குடிப்பதற்கான தண்ணீரும் அந்த ஒட்டகத்தின் மீது தான் இருந்தன. இனிமேல் தன் ஒட்டகம் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்து நம்பிக்கையிழந்து ஒரு மரத்தடியில் வந்து படுத்து விடுகிறான்.
இந்த நிலையில் திடீரென அவனது ஒட்டகம் அவன் கண் முன்னே நிற்கக் காண்கிறான். அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு இறைவா! நீ எனது அடிமை, நான் உனது எஜமான் என்று மகிழ்ச்சிப் பெருக்கில் என்ன சொல்கிறோம் என்பது கூடப் புரியாமல் கூறி விடுகிறான். இந்த மனிதன் அடையும் மகிழ்ச்சியை விட ஒரு அடியான் பாவ மன்னிப்புக் கேட்கும் போது அல்லாஹ் பெரு மகிழ்ச்சி அடைகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி); நூல்: முஸ்லிம் – 4932
இறைவனின் பேரருளைப் பெருங்கருணையைப் புரிந்து கொள்ள இதை விடவும் அழகான உவமையைக் கூறவே முடியாது. பாலைவனப் பெருவெளியில் பயணம் செய்பவன் யாருமற்ற வெட்ட வெளியில் தன் வாகனத்தை இழந்து விடும் போதே தன் கதையும் முடிந்து விட்டது என்ற முடிவுக்கு வந்து விடுவான்.
அவனது உணவும், தண்ணீரும் கூட அந்த வாகனத்துடன் காணாமல் போய் விட்டதென்றால் உயிர் பிழைப்போம் என்று எள்ளளவு கூட எதிர்பார்க்க மாட்டான். இத்துடன் எல்லாம் முடிந்தது என கையறு நிலைக்கு வந்த பின் அவனது வாகனம் திடீரென கிடைத்து விடுவது என்பது சாதாரண மகிழ்ச்சி தரும் விஷயமா என்ன?
தன் உயிரே திரும்பி வந்து விட்டதாக அதைக் கருதுவான். அந்த மகிழ்ச்சியைக் கூட நபிகள் நாயகம் (ஸல்) எவ்வளவு அழகுற எடுத்துரைக்கிறார்கள்! நான் உனது அடிமை! நீ எனது எஜமான் என்று கூறுவதற்குப் பதில் நான் உனது எஜமான்! நீ எனது அடிமை என்று அவன் கூறுகிறான் என்றால் அவன் தலைகால் புரியாத அளவுக்கு மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறான்.
இதை விடவும் அதிகமாக அந்த ரஹ்மான் மகிழ்ச்சியடைகிறான் என்றால் அந்தக் கருணையை வர்ணிக்க எந்த மொழியில் தான் வார்த்தைகள் இருக்கும்? அல்லாஹ் மகிழ்ச்சி அடையும் அளவுக்கு இந்த மனிதன் என்ன செய்து விட்டான்? பாவம் செய்தவன் மன்னிப்புக் கேட்பது பெரிய சாதனை ஒன்றும் இல்லை. இது பாராட்டப்பட வேண்டிய பெரிய சமாச்சாரமும் இல்லை. மன்னிப்புக் கேட்பதன் மூலம் மனிதன் தனக்கு வருகின்ற தண்டனையைத் தவிர்த்துக் கொள்கிறான்.
இதற்காக அல்லாஹ் மகிழ்ச்சி அடைய என்ன இருக்கிறது? மன்னிக்க முடியாது என்று கூறினாலும் அவனை எதிர்க் கேள்வி கேட்க முடியாது. ஒரு படி மேலே போய் மன்னித்தேன். தொலைந்து போ என்று கூறலாம். அப்படிக் கூறினாலேயே அவனது அளவற்ற அருளுக்கும், நிகரற்ற அன்புக்கும் குறைவு ஏற்பட்டு விடப்போவதில்லை. ஆனால் பெருமகிழ்ச்சி அடைகிறான் என்றால், அந்த ரஹ்மானின் அன்புக்கும் அருளுக்கும் அளவேது?
அர்ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) என்ற பெயரில் ஒரு அத்தியாயத்தையே அல்லாஹ் அருளியுள்ளான் அந்த அத்தியாயம் முழுவதும் அவன் மனித சமுதாயத்திற்கு அளித்துள்ள அருட்கொடைகளைப் பட்டியலிட்டுக் கூறுகிறான். அந்த அத்தியாயம் முழுமையுமே ரஹ்மான் என்ற பண்பின் விளக்கவுரையாக அமைந்துள்ளதை உணரலாம்.
இன்னும் கணக்கிலடங்கா அருட்கொடைகளை வாரி வழங்கி தனது அளவற்ற அருளை உலகறியச் செய்கிறான். அவனது அருட்கொடைகளைப் பட்டியலிட்டுக் காட்டும் வசனங்கள் யாவுமே இந்தத் திருப்பெயர்களின் விளக்கவுரைகளேயாகும்.
ஒரு அடியான் ஒரு ஜான் என்னை நோக்கி வந்தால் நான் அவனை நோக்கி ஒரு முழம் வருகிறேன். அவன் ஒரு முழம் நெருங்கி வந்தால் நான் இரு கைகளையும் விரிக்கும் தூரம் நெருங்கி வருகிறேன். என்னை நோக்கி அவன் நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடி வருகிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: புகாரி – 7405
இறைவனுடைய அளவற்ற அருளையும், அன்பையும் எண்ணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே வியப்போடு சொல்லிக்காட்டுவதையும் கவனியுங்கள்!
அல்லாஹ்வை நம்பிய மூமினுடைய எல்லாக் காரியங்களும் அவனுக்கு நன்மை பயப்பதாகவே உள்ளன. அவனுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டு அதனை அவன் பொறுத்துக் கொண்டால் அதுவும் அவனுக்கு நன்மை தான். அவனுக்கு நன்மை ஏற்பட்டு அதற்காக நன்றி செலுத்தினால் அதுவும் அவனுக்கு நன்மை தான். மூமினுக்குக் கிடைத்த இந்த நிலை மிகவும் ஆச்சரியமானதே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸுஹைப் (ரலி); நூல்: முஸ்லிம் – 5318