பள்ளிவாசல் மிம்பர் படிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் இருக்க வேண்டும் என்பதில்லை என்று ஆகஸ்ட் 07 இதழில் எழுதியுள்ளீர்கள். ஒரு சமயம் நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் ஏறும் போது ஆமீன், ஆமீன், ஆமீன் என்று மூன்று படிகளில் கூறி அதற்கு விளக்கமும் அளித்தார்கள். எனவே மிம்பர் படிகள் அமைக்கும் போது மூன்று தான் அமைக்க வேண்டும் என்று தெரிகிறதே?

மிம்பர் என்பது இமாம் உரையாற்றுவதற்காக அமைக்கப்படும் மேடை தான். இது குறிப்பிட்ட வடிவத்தில், இத்தனை படிகளுடன் அமைந்திருக்க வேண்டும் என்றால் அதை நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பார்கள்.

நபித்தோழர் ஒருவர் மிம்பர் செய்து கொடுப்பதற்கு முன்பு வரை நபி (ஸல்) அவர்கள் ஒரு மரப் பலகையின் மீது சாய்ந்தவாறு அல்லது ஊன்றியவாறு நின்று தான் உரையாற்றியுள்ளார்கள். நபித்தோழர் கேட்ட பின்னர், விரும்பினால் செய்து தாருங்கள் என்று கேட்டு, அதன் மீது நின்று உரையாற்றியுள்ளார்கள்.

அதிலும் இன்ன வடிவத்தில் தான் மிம்பர் அமைந்திருக்க வேண்டும் என்று எந்த நிபந்தனையையும் நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. இதிலிருந்து ஒரு உயரமான மேடை என்பது தான் முக்கியமே தவிர, மிம்பர் என்பதன் வடிவத்திலோ, படிகளின் எண்ணிக்கையிலோ எந்த முக்கியத்துவமும் இல்லை என்பதை விளங்கலாம்.

நீங்கள் குறிப்பிடும் ஹதீஸிலும் மிம்பர் படிகளின் எண்ணிக்கை குறித்து உத்தரவோ அல்லது மூன்று படிகள் அமைப்பது நபிவழி என்றோ குறிப்பிடப்படவில்லை. மூன்று படிகளின் மீது ஏறும் போதும் நபி (ஸல்) அவர்கள் ஆமீன் கூறினார்கள் என்ற வாசகத்தை வைத்து மூன்று தான் அமைக்க வேண்டும் என்று சட்டம் எடுக்க முடியாது.

நபி (ஸல்) அவர்கள் கட்டிய மஸ்ஜிதுந்நபவீ பள்ளிவாசல் கூரைகளால் அமைக்கப்பட்டது என்பதால் கூரைகளில் தான் பள்ளிவாசல் அமைக்க வேண்டும் என்று கூற முடியுமா? இது போன்று தான் மிம்பர் விஷயத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *