பள்ளிவாசலுக்காக முஸ்லிமல்லாதவரிடம் நன்கொடை பெறலாமா?

பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்கு மாற்று மதத்தவர்களிடமிருந்து நிதியுதவி பெற்றுக் கொள்ளலாமா?

பள்ளிவாசல் கட்டுவதற்கு முஸ்லிமல்லாதவர்களிடம் நிதி பெற்றுக் கொள்வதற்கு எந்தத் தடையும் இல்லை.

கஅபாவின் அருகிலுள்ள ஒரு சுவரைப் பற்றி, ‘இது கஅபாவில் சேர்ந்ததா?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்’ என்றார்கள். ‘எதற்காக அவர்கள் இதைக் கஅபாவோடு இணைக்கவில்லை?’ என்று நான் கேட்டேன். அதற்கவர்கள், ‘உன் சமூகத்தாருக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் தான்’ என்று பதிலளித்தார்கள். ‘கஅபாவின் வாசலை உயரத்தில் வைத்திருப்பதன் காரணம் என்ன?’ என்று நான் கேட்டேன்.

அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘தங்களுக்கு வேண்டியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும், தங்களுக்கு வேண்டாதவர்களைத் தடுத்து விடுவதற்காகவும் தான் உனது கூட்டத்தினர் அவ்வாறு செய்தார்கள். உன் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாக இருப்பதால் அவர்களின் உள்ளத்தில் வெறுப்பு தோன்றும் என்ற அச்சம் எனக்கு இல்லாவிட்டால் நான் இச்சுவரை கஅபாவில் இணைத்து அதன் கதவைக் கீழிறக்கி பூமியோடு சேர்ந்தாற்போல் ஆக்கியிருப்பேன்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1584

பள்ளிவாசல்களிலேயே மிகச் சிறப்பு வாய்ந்த, முதல் ஆலயமான கஅபத்துல்லாஹ்வை மக்காவிலிருந்த முஸ்லிமல்லாதவர்கள் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைப்பதற்கு முன் புனர்நிர்மாணம் செய்துள்ளார்கள்.

கட்டுமானத்தில் அந்த மக்கள் செய்த தவறுகளைச் சரி செய்திருப்பேன் என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்களே தவிர அவர்கள் கஅபாவைக் கட்டியதே தவறு என்று கூறவில்லை.

எனவே பள்ளிவாசல் கட்டுவதற்கு முஸ்லிமல்லாதவர்களிடமிருந்து நிதி பெறுவது தவறில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

மேலும் பள்ளிவாசல் கட்டுவதற்கோ, மற்ற நற்பணிகளுக்கோ முஸ்லிமல்லாதவரிடம் எந்த உதவியும் பெறாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதில்லை.

அதே சமயம் முஸ்லிமல்லாதவர் பள்ளிவாசலுக்கு நன்கொடை அளிப்பதால் அதற்குரிய நன்மை மறுமையில் அவருக்குக் கிடைக்காது. அல்லாஹ்வையும், இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையையும் மனதார ஏற்றுக் கொண்டவர்களுக்கே மறுமையில் அதற்கான பயன் கிடைக்கும்.

அல்லாஹ் நாடினால் பள்ளிவாசலுக்கு உதவிய முஸ்லிமல்லாதவர்களுக்கு இதற்கான பலனை இவ்வுலகில் கொடுக்கலாம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *