பள்ளிவாசலின் முக்கியத்துவம்

மனிதர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக அதுவும் சொற்பத்திலும் சொற்பமாக இருக்கும் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே பள்ளிவாசல் கட்டப்பட்டு வந்துள்ளது. இதற்குப் பின்னணியில் மிக முக்கியக் காரணம் இல்லாமல் இல்லை. அன்றைய காலங்களில் தொழுகை எனும் வணக்கம் கண்டிப்பாகப் பள்ளிவாசலில் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் எனும் சட்டம் இருந்தது. இந்தச் சட்டம் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குத் தளர்த்தப்பட்டது.

கடமையான தொழுகை விசயத்தில் முந்தைய சமுதாய மக்களுக்கு இருந்ததை விடவும் நமக்குக் குறைவு செய்யப்பட்டதைப் போன்று இதிலும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. கடமையைத் தவறவிட்டுவிடாமல் உரிய நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் எனும் அடிப்படையில் நேரம் வரும் போது இருக்கும் இடத்தில் தொழுது கொள்ளும் அனுமதி தரப்பட்டுள்ளது. இதனைப் பின்வரும் நபிமொழி மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

எனக்கு முன்னர் வாழ்ந்த (இறைத்தூதர்கள்) எவருக்கும் வழங்கப்பெறாத ஐந்து விஷயங்கள் எனக்கு வழங்கப்பெற்றுள்ளன: (அவை)

1.ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமுதாயத்தாருக்கு மட்டுமே (தூதராக நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டார்கள். நான் சிவப்பர் கறுப்பர் (என்ற பாகுபாடின்றி) அனைவருக்கும் தூதராக அனுப்பப் பெற்றுள்ளேன்.

2.போரில் கிடைக்கப் பெறும் செல்வங்கள் எனக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளன. எனக்கு முன்னிருந்த (இறைத்தூதர்) எவருக்கும் அவை அனுதிக்கப்படவில்லை.

3.எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கு ஏற்றதாகவும் தூய்மையானதாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. (என் சமுதாயத்தாரில்) யாரேனும் ஒருவருக்குத் தொழுகை(யின் நேரம்) வந்து விட்டால் அவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்திலேயே தொழுதுகொள்வார்.

  1. (எதிரிகளுக்கும் எனக்குமிடையே) ஒரு மாத காலப் பயணத் தொலைவிருந்தாலும் (அவர்களுடைய உள்ளங்களில் என்னைப் பற்றிய) அச்சம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் வெற்றியளிக்கப் பெற்றுள்ளேன்.
  2. (மறுமையில் என் சமுதாயத்தாருக்காக) பரிந்துரை செய்யும் வாய்ப்பு அளிக்கப் பெற்றுள்ளேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் (905)

இந்த அனுமதி இருந்தாலும், பள்ளிவாசல் கட்டுவது, அதில் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவது குறித்து மார்க்கத்தில் நிறைய செய்திகள் போதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பள்ளிவாசலில் ஜமாஅத்தோடு தொழுவது பற்றி அதிகம் வலியுறுத்தி இருப்பதோடு, அதில் அலட்சியமாக இருப்பவர்களைக் குறித்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது.

ஏனெனில், பள்ளிவாசல் மூலமாக, அதனுடன் தொடர்புள்ள காரியங்கள் மூலமாக நமக்குப் பல்வேறு பாக்கியங்களை அல்லாஹ் கொடுக்கிறான். அளவற்ற அருள் வளங்களை அள்ளித் தருகிறான். அளப்பறிய நன்மைகளைக் கொள்ளையடிக்கும் வாய்ப்பினைக் கொட்டிக் கொடுக்கிறான். இந்தச் சிறப்புகளை பெறுவதற்குப் பள்ளிவாசல் அமைப்பது அவசியம்.

படைத்தவனுக்குப் பிடித்த இடம்

பூமியிலே விதவிதமான இடங்கள் இருக்கின்றன. ஆறுகள், மலைகள், காடுகள் என்று கண்கவரும் வகையிலான இயற்கைப் பகுதிகள் இருக்கின்றன. கோபுரங்கள், அடுக்குமாடிக் கட்டடங்கள், தொழிற்சாலைகள் என்று பிரமிக்க வைக்கும் செயற்கையான இடங்களும் உள்ளன. இன்னும் சொல்வதெனில், நவீன மனிதனின் தேடல் பார்வையில் அகப்படாத. அவனது கால்தடம் பதியாத பல்வேறு பகுதிகள் இருக்கவே செய்கின்றன. இப்படி இவ்வுலகில் எத்தனையோ இடங்கள், பகுதிகள் இருப்பினும், இவை எல்லாவற்றையும் விட பள்ளிவாசல்கள் தான் அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமான இடம் என்று மார்க்கம் சொல்கிறது.

ஓர் ஊரிலுள்ள இடங்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான இடம் பள்ளிவாசலாகும். ஓர் ஊரிலுள்ள இடங்களிலேயே அல்லாஹ்வின் வெறுப்பிற்குரிய இடம் கடைத்தெருவாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (1190)

பள்ளிவாசல் கட்டுவதன் நோக்கம்

பள்ளிவாசலைக் கட்டுவதன் அடிப்படை நோக்கமே ஏக இறைவனான அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும், அவன் தனது தூதர் வாயிலாக வழிகாட்டிய வணக்க வழிபாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதாகும். இதனைப் பின்வரும் ஆதாரங்கள் மூலம் அறியலாம்.

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!

(திருக்குர்ஆன்:72:18.)

ஒரு முறை நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அப்போது கிராமவாசியொருவர் வந்து பள்ளி வாசலுக்குள் நின்று சிறுநீர் கழித்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் “நிறுத்து! நிறுத்து!’ என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(அவர் சிறுநீர் கழிப்பதை) இடைமறிக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள்’’ என்று கூறினார்கள். எனவே, நபித்தோழர்கள் அவரை விட்டுவிட்டனர். அவர் சிறுநீர் கழித்து முடித்தார்.

பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து “இந்தப் பள்ளிவாசல்கள் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தல் ஆகியவற்றுக்குரிய இடமல்ல. இவை இறைவனை நினைவு கூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற்கும் குர்ஆனை ஓதுவதற்கும் உரியதாகும்‘’ என்றோ, அல்லது இந்தக் கருத்திலமைந்த வேறு வார்த்தைகளையோ அவரிடம் கூறினார்கள். பிறகு மக்களில் ஒருவரிடம் ஒரு வாளித் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அதை அந்தச் சிறுநீர்மீது ஊற்றச் செய்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் (480)

அல்லாஹ் அருளிய வணக்கங்களை அவனுக்காக அவனிடம் நன்மை பெறுவதற்காகச் செய்வதற்குரிய இடமே பள்ளிவாசல்கள். இத்துடன், சமுதாயம் சார்ந்த நற்பணிகளைச் செய்வதற்கு அனுமதி இருக்கிறது. இதுகுறித்து வேறொரு இடத்தில் காண்போம்.

இதைவிடுத்து, இதற்கு நேர்மாற்றமான திசையில் இன்று பல பள்ளிவாசல்கள் இயங்கிக் கொண்டிருப்பது கவலை அளிக்கிறது. இறந்துபோன மனிதர்களிடம் உதவி தேடுவது உள்ளிட்ட எங்கும் எப்போதும் செய்யக் கூடாத, கேடுகெட்ட இணைவைப்பான காரியங்களை, அதுவும் படைத்தவனின் ஆலயத்திற்குள் அமர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். மவ்லூது, இருட்டு திக்ர் என்று மார்க்கத்தின் அங்கீகாரமற்ற பித்அத்தான செயல்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

பள்ளிவாசலைக் கட்டுவதின் சிறப்பு

இம்மை வாழ்க்கை நிரந்தரமற்றது, அற்பமானது என்பதை நாமெல்லாம் அறிந்திருந்தாலும் இங்கு வாழும் போது சொந்தமாக ஒரு வீடாவது இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறோம். அதிகமான மக்கள் தங்களது இந்த ஆசையை, கனவை நிறைவேற்றிக் கொள்ள அயராது பாடுபடுகிறார்கள்; தினந்தோறும் மெனக்கெட்டு சிரமப்படுகிறார்கள். இருப்பினும், பலருடைய வாழ்நாளில் இது வெறும் பகல் கனவாகவே இருகிறது. எட்டாக் கனியாகவே இருந்து விடுகிறது.

இப்படியிருக்க, நிரந்தரமான மறுமை வாழ்வின் போது சொர்க்கத்திலே வீட்டைப் பெறும் பாக்கியம் என்பது சாதாரணமானதா? இந்தப் பொன்னான பாக்கியத்தை, அரிய வாய்ப்பினை இங்கு பள்ளிவாசல் கட்டுவது மூலமாக அல்லாஹ் நமக்குத் தருகிறான்.

உபைதுல்லாஹ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டிய (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை (விரிவுபடுத்தி)க் கட்ட எண்ணியபோது அது குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் (மக்களிடம்), “நீங்கள் மிக அதிகமாகவே பேசிவிட்டீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “யார் அல்லாஹ்வுக்காகப் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான்’ என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன்’’ என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் (926)

நிரந்தரமான மறுமை வாழ்விலே சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவிற்கு இடம் கிடைப்பதென்பது வானங்கள், பூமி மற்றும் அவற்றிலுள்ள அனைத்தையும் விட சிறந்தது. இத்தைகைய உயரிய சொர்க்கத்திலே வீட்டைச் சொந்தமாக்கும் அற்புதமான வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது. அல்லாஹ்வின் ஆலயத்தை அமைப்பதற்காகப் பொருளாதாரம் கொடுப்பவர்கள், திரட்டுபவர்கள் மற்றும் அதற்காக உழைப்பவர்களுக்கு படைத்தவனின் தரமான பரிசு தயாராக இருக்கிறது.

நமக்காக வீடு கட்டும் போது இடமோ, பொருளோ, பணமோ வீண்விரையம் ஆகிவிடக் கூடாது என்று கண்ணும் கருத்துமாக இருந்து கவனத்தோடு கட்டுவோம். இதே அக்கறையும் ஆர்வமும் பள்ளிவாசல் அமைக்கும் போதும் நமக்கு இருக்க வேண்டும். எவ்வகையிலும் அதன் பணிகளில் கவனக்குறைவாக இல்லாமல் நல்ல முறையில் கட்டி எழுப்ப வேண்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed