பத்ருப் போரில் வெற்றி பற்றிய முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவிற்குச் சென்ற பின் ஒரு ஆட்சியை நிறுவினார்கள். அவ்வாறு நிறுவிய பின் முஸ்ம்களின் எதிரி நாட்டவரான மக்காவாசிகள் தமது வியாபாரப் பயணத்தை மதீனா வழியாக மேற்கொண்டு வந்தனர்.

எனவே தமது நாட்டுக்குள் சட்ட விரோதமாகப் புகுந்து பயணம் செய்யும் எதிரிகளைத் தடுத்து நிறுத்திட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திட்டமிட்டார்கள். இந்த நிலையில் மக்காவின் முக்கியப் பிரமுகர் அபூஸுஃப்யான் தலைமையில் ஒரு வணிகக் கூட்டம் இஸ்லாமிய நாட்டு எல்லையில் புகுந்து செல்லும் தகவல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது.

அவர்களை வழிமறித்து அவர்களின் பொருட்களைப் பறிமுதல் செய்ய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படையுடன் புறப்பட்டனர். இச்செய்தி மக்காவில் உள்ள தலைவர்களுக்குக் கிடைத்து, அவர்கள் தமது வணிகக் கூட்டத்தைக் காப்பாற்றும் நோக்கில் படை திரட்டி வந்தனர்.

வணிகக் கூட்டத்தை வழி மறிப்பதா? அல்லது போருக்குப் புறப்பட்டு வரும் கூட்டத்துடன் மோதுவதா? என்ற சிக்கல் முஸ்ம்களுக்கு ஏற்பட்டது. இரண்டில் முஸ்ம்கள் எதைத் தேர்வு செய்தாலும் அதில் வெற்றி என்று இறைவன் புறத்திருந்து வாக்களிக்கப்பட்டது.

எதிரிகளின் இரண்டு கூட்டத்தினரில் ஒன்று உங்களுக்கு (சாதகமாக இருக்கும்)’ என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்ததை எண்ணிப் பாருங்கள்! ஆயுதம் தரிக்காத (வியாபாரக்) கூட்டம் உங்களுக்கு வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்கள். அல்லாஹ் தனது கட்டளைகள் மூலம் உண்மையை நிலை நாட்டவும், (தன்னை) மறுப்போரை வேரறுக்கவும் விரும்புகிறான்.

திருக்குர்ஆன் 8:7

முஸ்ம்களின் படை பலம் சுமார் 300 ஆக இருக்கையில் எதிரிப்படையினர் சுமார் 1000 நபர்கள் இருந்தனர். இந்த விபரம் முஸ்லிம் 1763 வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

பலவீனமான நிலையில் இருந்த முஸ்லிம்கள் வெற்றி பெறுவார்கள் என்று மேற்கண்ட வசனத்தில் இறைவன் முன்னறிவிப்புச் செய்தது போலவே போர் நடப்பதற்குச் சற்று முன்னர் மீண்டும் வெற்றியை உறுதி செய்து பின் வரும் வசனத்தை இறைவன் அருளினான்.

இக்கூட்டம் தோற்கடிக்கப்படும். புறங்காட்டி ஓடுவார்கள்.

திருக்குர்ஆன் 54:45

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூடாரத்தில் இருந்து கொண்டு ‘இறைவா! நீ அளித்த வாக்குறுதியை நீ நிறைவேற்றக் கோருகிறேன். இறைவா நீ நாடினால் இன்றைய தினத்துக்குப் பின் உன்னை வணங்க யாரும் இருக்க மாட்டார்கள்’ என்று பிரார்த்தனை செய்தார்கள்.

உடனே அபூபக்கர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு ‘அல்லாஹ்வின் துதரே போதும்; உங்கள் இறைவனிடம் கெஞ்ச வேண்டிய அளவு கெஞ்சிவிட்டீர்கள்’ எனக் கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவசத்தை அணிந்து கொண்டு இக்கூட்டம் தோற்கடிக்கப்படும். புறங்காட்டி ஓடுவார்கள் என்ற வசனத்தை ஓதிக் கொண்டே வெளியே வந்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பஸ் (ரலி)

நூல் : புகாரி 2915, 3953, 4875, 4877

இயந்திரங்களும், வெடி மருந்துகளும் போர்க் கருவிகளாக பயன்படுத்தாத காலத்தில் எண்ணிக்கை பலத்தைக் கொண்டு மட்டுமே வெற்றி பெற முடியும். எதிரியின் பலத்துடன் ஒப்பிடும் போது முஸ்லிம்களை விட எதிரிகள் மூன்று மடங்கு அதிகமாக இருந்தும் இறைவன் வாக்களித்த படி முஸ்லிம்கள் மகத்தான வெற்றி பெற்றார்கள்.

குர்ஆன் இறைவனின் வேதம் என்பதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் துதர் என்பதும் இதன் மூலம் நிரூபனமானது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *