பத்து வருடங்களுக்கு முன் என் வாகனத்தின் மூலம் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். அவரது நிலை என்னவானது என்று இன்று வரை எனக்குத் தெரியவில்லை. இதை நினைத்து நான் வருத்தம் அடைகிறேன். இதற்கு அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்குமா?

வேண்டும் என்றே செய்யும் காரியங்களுக்குத் தான் இறைவனிடம் தண்டனை உண்டு. அறியாமல் செய்யும் எந்தக் காரியத்துக்கும் அல்லாஹ்விடம் தண்டனை இல்லை என்பது இஸ்லாத்தின் முக்கியமான கோட்பாடாகும்.

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே. எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வலிமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக! (எனவும் கூறுகின்றனர்).

திருக்குர்ஆன் 2:286

மறதியாகவோ, தவறுதலாகவோ செய்த காரியங்களுக்கு எங்களைத் தண்டித்து விடாதே என்று பிரார்த்திக்குமாறு அல்லாஹ் நமக்குக் கற்றுத் தருவதால் நம்மை மீறி நடந்த காரியங்களுக்கு அல்லாஹ் நம்மைத் தண்டிக்க மாட்டான் என்று அறியலாம்.

ஆனால் நாம் செய்யும் தவறுதலான காரியங்களால் மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் அதற்குப் பரிகாரம் செய்யும் கடமை நமக்கு உள்ளது. அதைச் செய்யத் தவறினால் அந்தக் குற்றம் நம்மைச் சேரும்.

உதாரணமாக நம் வாகனத்தின் மூலம் விபத்து ஏற்பட்டு ஒருவர் இறந்து விட்டால் அவரைக் கொலை செய்த குற்றம் நமக்கு வராது. ஆனால் இறந்தவரின் குடும்பத்துக்கு நட்டஈடு கொடுக்கும் கடமை நமக்கு உள்ளது. அந்தக் கடமையில் இருந்து தவறினால் அந்தக் குற்றம் மட்டும் நம்மைச் சேரும். கொலைக் குற்றம் சேராது.

நம்பிக்கை கொண்டவர் இன்னொரு நம்பிக்கை கொண்டவரைத் தவறுதலாகவே தவிர கொலை செய்தல் தகாது. நம்பிக்கை கொண்டவரை யாரேனும் தவறுதலாகக் கொன்று விட்டால் நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அவனது (கொல்லப்பட்டவனது) குடும்பத்தார் தர்மமாக விட்டுக் கொடுத்தால் தவிர அவர்களுக்கு இழப்பீடு ஒப்படைக்கப்பட வேண்டும்.

அவர் உங்களுக்கு எதிராகவுள்ள சமுதாயத்தைச் சேர்ந்தவராகவும், நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தால் நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அவர், உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தால் அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கி, நம்பிக்கை கொண்ட அடிமையையும் விடுதலை செய்ய வேண்டும். (இதில் எதுவும்) கிடைக்காதோர் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். (இது) அல்லாஹ்வின் மன்னிப்பாகும். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:92

தவறுதலாகக் கொலை செய்தால் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அத்துடன் கொல்லப்பட்டவரின் குடும்பத்தாருக்கு நட்ட ஈடு அளிக்க வேண்டும். இன்றைய காலத்தில் அடிமைகள் இல்லாததால் அடிமைகளை விடுதலை செய்ய முடியாது. ஆனால் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு நட்ட ஈடு வழங்கும் கடமை இருக்கிறது.

ஆனால் இதுவும் கூட இன்றைய காலத்தில் சமுதாயப் பொறுப்பாக உலகம் முழுவதும் ஆக்கப்பட்டு விட்டது. வாகனங்களை நாம் வாங்கும் போதே இது போன்ற விபத்துக்களால் ஏற்படும் பாதிப்புக்காகவும் இன்ஷ்யூரன்ஸ் கட்டணம் நம்மிடமிருந்து பெறப்படுகிறது. இப்படி வாகனம் வாங்கும் அனைவரிடம் இருந்தும் பெறப்படும் தொகையில் இருந்து விபத்து நடக்கும் போது பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் வழங்கப்படுகின்றது.

இதை இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகளிடம் இருந்து வாங்கிக் கொடுக்கும் பொறுப்பை அரசாங்கமும், நீதிமன்றங்களும் ஏற்றுக் கொள்கின்றன. நாம் விபத்து ஏற்படுத்தி விட்டு ஓடி விட்டாலும் அதற்கான நட்டஈடு பாதிக்கப்பட்டவருக்கோ, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கோ கிடைத்து விடக்கூடிய ஏற்பாடு உலக நாடுகள் அனைத்திலும் செய்யப்பட்டு விட்டது. நாம் செலுத்த வேண்டிய நட்டஈட்டை நம் சார்பில் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கி விடுவதால் நம் மீது எந்தக் குற்றமும் சேராது.

மேலும் விபத்து ஏற்படுத்தியவர் தப்பிச் செல்லாமல் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தால் வெறிகொண்ட பொது மக்களால் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை இருந்தால் அந்த நேரத்தில் மட்டும் அந்த இடத்தை விட்டு ஓடுவது கூட குற்றமாகாது. அப்படி இல்லாத பட்சத்தில் அந்த இடத்தில் செய்ய வேண்டிய மனிதாபிமான கடமைகளை நாம் தவிர்க்கக் கூடாது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed