பட்டாசு கொளுத்தி மகிழலாமா?

மகிழ்ச்சிக்காக சுற்றுலா செல்வது போல் மகிழ்ச்சிக்காக பட்டாசு கொளுத்தலாமா?

மகிழ்ச்சிக்காக சுற்றுலா செல்வதும் பட்டாசு கொளுத்துவதும் சமமானவை அல்ல. மகிழ்ச்சிக்காக கல்யாணம் செய்யலாம் என்பதால் மகிழ்ச்சிக்காக விபச்சாரம் செய்யலாமா என்று கேட்பது போல் உங்கள் கேள்வி அமைந்துள்ளது.

நாம் சுற்றுலா செல்வதால் இதில் நம் மகிழ்ச்சி மட்டுமே உள்ளது. யாருக்கும் எந்தத் தீங்கும், நட்டமும் இல்லை. பட்டாசுகள் வெடிப்பதால் ஏராளமான கேடுகள் மனித குலத்துக்கு ஏற்படுகின்றன.

பட்டாசிலிருந்து வெளிவரும் நச்சுப்புகை சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றது. மனிதர்களின் வாழ்க்கைக்கு அடிப்படையாக உள்ள பிராண வாயுவில் கலந்து பல்வேறு நோய்களை உருவாக்குகின்றது. சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகள் இதனால் கடும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.

பட்டாசு எழுப்பும் சப்தம் நோயாளிகளுக்கும் முதியவர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

குடிசைகளில் பட்டாசு விழுந்து குடிசைகளைக் கொளுத்தி மனிதர்களையும் கொல்கிறது. இதய நோயாளிகளுக்கும் குழந்தைகளுக்கும் படிக்கும் மாணவர்களுக்கும் பலவிதமான கேடுகளை ஏற்படுத்துகின்றது.

ஒரு முஸ்லிம் யாருக்கும் தீங்கு செய்யக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.

அபூமூஸா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாத்தில் சிறந்தது எது,? என்று மக்கள், கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், எவரது நாவிலிருந்தும், கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கின்றார்களோ அவரே  என்று பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி 11

அபூதர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

எந்த நற்செயல் சிறந்தது?  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் மீது ஈமான் (நம்பிக்கை) கொள்வதும், அவனது பாதையில் அறப்போர் செய்வதும் என்று பதிலளித்தார்கள். எந்த அடிமை(யை விடுதலை செய்வது) சிறந்தது என்று நான் கேட்டேன்.

அதற்கு அவர்கள், அவர்களில் அதிக விலை கொண்ட அடிமையும் தன் எஜமானர்களிடம் பெறுமதி மிக்க அடிமையும் என்று பதிலளித்தார்கள். என்னால் அது இயலவில்லையென்றால்? என்று நான் கேட்டேன். பலவீனருக்கு உதவி செய்; அல்லது உழைத்துச் சம்பாதிக்க இயலாதவனுக்கு நன்மை செய் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  இதுவும் என்னால் இயலவில்லையென்றால்? என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இரு. ஏனெனில், அதுவும் நீ உனக்காகச் செய்து கொள்ளும் ஒரு தர்மம் ஆகும் என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 2518

மேலும் பட்டாசுக்காக நாம் செலவிடும் தொகை வீணானது. இதைப் பயன்படுத்துவதால் பிறருக்குத் தீங்கு செய்த குற்றத்துடன் பொருளாதாரத்தை விரையமாக்கிய குற்றமும் ஏற்படும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed