படைத்தவன் நேசிக்கும் பாவமன்னிப்பு

மனிதர்களைப் பலவீனமானவர்களாகவே இறைவன் படைத்திருக்கின்றான். மனிதன் இந்த உலகத்தில் வாழும் போது நன்மையான காரியங்களில் ஈடுபடுவதை விட பாவமான காரியங்களிலேயே அதிகம் ஈடுபடுவதைப் பார்க்கின்றோம். இதில் யாரும் விதிவிலக்கு இல்லை என்று சொல்கின்ற அளவுக்கு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் பாவச் செயல்களில் ஈடுபடுகின்றான்.

இதற்கு மிக முக்கியக் காரணம், இறைவன் மனிதர்களைப் பாவம் செய்பவர்களாகவே படைத்திருக்கின்றான். ஆனால் பாவம் செய்கின்ற மனிதன் தன்னுடைய பாவச் செயல்களிலேயே மூழ்கி விடாமல் அந்தப் பாவத்திலிருந்து திருந்துவதற்கான வழிவகையையும் அல்லாஹ் அமைத்துக் கொடுத்திருக்கின்றான்.

எந்த அளவிற்கென்றால் மனிதர்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்றும், தவறு செய்பவர்கள் தான் மனிதர்கள் என்றும், செய்த தவறுக்காகத் திருந்தி, வருந்தி, கண்ணீர் விட்டுக் கதறி அழுது இறைவனிடம் சரணடைபவர்களே சிறந்தவர்கள் என்றும் அல்லாஹ் அற்புதமான முறையில் மனித சமுதாயத்திற்குப் பாடம் நடத்துகின்றான். அவ்வாறு இறைவன் நேசிக்கும் பாவமன்னிப்பை பற்றி சில செய்திகளை இந்த உரையில் காண்போம்.

அல்லாஹ்வுக்குப் பிடித்தமானது

பாவம் செய்த பிறகு, தான் செய்த பாவத்திற்குத் தாமதிக்காமல் மன்னிப்புத் தேடுபவர்களை அல்லாஹ் விரும்புகின்றான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்து விட்டால், நிச்சயமாகப் பாவம் செய்கின்ற ஒரு படைப்பை அல்லாஹ் உருவாக்கி அவர்களுடைய பாவங்களை அவன் மன்னிக்கவே செய்வான்’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம்-5302

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்தால், அல்லாஹ் உங்களை அகற்றி விட்டு, பாவம் செய்கின்ற மற்றொரு சமுதாயத்தைக் கொண்டுவருவான். அவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவார்கள். அல்லாஹ்வும் அவர்களை மன்னிப்பான். 

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 5304

அடியார்களின் பாவங்களை மன்னிக்கும் பண்பு அல்லாஹ்வுக்கு உண்டு. அந்தக் குணத்தை வெளிப்படுத்துவதற்கான சூழலை உருவாக்கவே அல்லாஹ், பாவம் செய்யும் மக்களைப் படைப்பான். நன்மை செய்வோருக்கு நற்பலன் வழங்குவதை அல்லாஹ் விரும்புவதைப் போன்று, தீமை செய்வோருக்கு மன்னிப்பு வழங்குவதையும் அவன் விரும்புகிறான். அல்லாஹ்வின் இந்த தாராள குணத்தை விளங்கி, பாவத்திலிருந்து மீண்டு பாவமன்னிப்புக் கேட்பவர்களை அல்லாஹ் அதிகமதிகம் நேசிக்கின்றான்.

திரும்பத்திரும்ப பாவம் செய்தாலும் மன்னிப்பு

திரும்பத் திரும்ப பாவம் செய்து விட்டு, திரும்பத் திரும்ப பாவமன்னிப்புக் கோரினாலும் அதை அல்லாஹ் ஏற்பான். நூறு முறை என்ன, ஆயிரம் முறை இவ்வாறு செய்தாலும் சரியே! ஒவ்வொரு முறை பாவம் செய்யும் போதும் பாவமன்னிப்புக் கோரி மீட்சி பெற்றாலும், அல்லது மொத்தமாகப் பாவங்களைச் செய்து விட்டு எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு முறை பாவமன்னிப்புக் கோரினாலும் அது இறைவன் நாடினால் ஏற்கப்படும். இது அல்லாஹ்வின் ஒப்பற்ற கருணையையும், அடியார்கள் மீது அவனுக்குள்ள பரிவையையும் காட்டுகிறது.

நபி (ஸல்) அவர்கள் வல்லமையும் மாண்பும் மிக்க தம் இறைவன் குறித்து அறிவித்தார்கள்:

ஓர் அடியார் ஒரு பாவம் செய்துவிட்டார். பிறகு “இறைவா!  என் பாவத்தை மன்னிப்பாயாக!’’ என்று கூறினார். உடனே இறைவன், “என் அடியான் ஒரு பாவம் செய்துவிட்டுப் பிறகு தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்றும் அறிந்து கொண்டான்’’ என்று சொல்கிறான். பிறகு அந்த அடியார் மீண்டும் ஒரு பாவத்தைச் செய்துவிட்டு, “என் இறைவா! என் பாவத்தை மன்னிப்பாயாக!’’ என்று பிரார்த்தித்தார்.

அப்போதும் இறைவன், “என் அடியான் ஒரு பாவத்தைச் செய்துவிட்டுப் பிறகு, தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்று அறிந்துகொண்டான்’’ என்று சொல்கிறான்.

பிறகு அந்த அடியான் மீண்டும் ஒரு பாவத்தைச் செய்துவிட்டு, “என் இறைவா! எனது பாவத்தை மன்னிப்பாயாக!’’ என்று பிரார்த்தித்தார். அப்போதும் இறைவன், “என் அடியான் ஒரு பாவத்தைச் செய்துவிட்டுப் பிறகு தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்றும் அறிந்து கொண்டான். நீ நாடியதைச் செய்; நான் உனது பாவத்தை மன்னித்து விட்டேன்’’ என்று சொல்கிறான்.

நூல்: முஸ்லிம்-5322

திரும்பத் திரும்ப எத்தனை முறை பாவம் செய்தாலும் இறைவனிடத்திலே கண்ணீர் விட்டுக் கதறி அழுது பாவமன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் அந்த அடியானைப் பார்த்து சந்தோஷம் அடைந்து, அவனுடைய பாவத்தை மன்னிக்கின்றான்.

மனிதர்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்களா?

இந்த உலகத்தில் இறைவனால் படைக்கப்பட்ட எல்லா மனிதர்களும் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு அடியாரிடத்திலும் இறைவன் ஒரு ஷைத்தானை உடன் வைத்திருக்கின்றான். அந்த ஷைத்தான் கெட்டதையே எண்ணுமாறும், கெட்டதையே செய்யுமாறும் மனிதனைத் தூண்டிக் கொண்டிருக்கின்றான். அதுதான் அவனது மனோஇச்சை. ஒரு குற்றத்தைச் செய்ய முனையும் போது உள் மனம் மனிதனைத் தடுக்கும். ஆனால், மன விருப்பமும், பேராசையும் மேலோங்கி விட்டால் மனிதன் அதற்கு அடிமையாகி தவறிழைத்து விடுகின்றான்.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் மீது எனக்கு ரோஷம் ஏற்பட்டது. பிறகு அவர்கள் (திரும்பி) வந்து என் நடவடிக்கையைக் கண்டபோது, “ஆயிஷா! உனக்கு என்ன நேர்ந்தது? ரோஷம் கொண்டுவிட்டாயா?’’ என்று கேட்டார்கள். அதற்கு நான், “என்னைப் போன்ற ஒருத்தி (வேறு துணைவியர் உள்ள) தங்களைப் போன்ற ஒருவர் மீது ரோஷம் கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்?’’என்று சொன்னேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன் ஷைத்தான் உன்னிடம் வந்து விட்டானா?’’ என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! என்னுடனும் ஷைத்தான் உள்ளானா?’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்’ என்றார்கள். “ஒவ்வொரு மனிதனுடனும் (ஷைத்தான்) உள்ளானா?’’ என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் ‘ஆம்’ என்றார்கள். நான், “தங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம். ஆயினும், என் இறைவன் அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். அவன் (எனக்குப்) பணிந்துவிட்டான்’’ என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி-7288

இறைவனின் அளப்பரிய கிருபையினால் நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் செய்த மாபெரும் அருட்கொடை ஷைத்தானை நபி (ஸல்) அவர்களுக்குப் பணியச் செய்து விட்டான். அவனுக்கு எதிராக நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் உதவி செய்து விட்டான். மற்ற எல்லா மனிதர்களிடத்திலும் ஷைத்தான் உடன் இருந்து வழிகெடுத்துக் கொண்டே இருப்பான் என்று கூறி மனிதர்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கின்றார்கள்.

தவறுகளின் பிறப்பிடம்

பொதுவாகவே மனிதன் செய்கின்ற தவறுக்கு மிக முக்கியக் காரணம் அவனது உடலிலே உள்ள ஒரு உறுப்பு தான். அந்த உறுப்பு விஷயத்தில் மனிதர்கள் கன கச்சிதமாகப் பாதுகாப்போடு நடந்து கொண்டால் மனிதனை வழி தவறச் செய்வதற்கு யாராலும் முடியவே முடியாது. அந்த உறுப்பு தான் உள்ளம். இந்த உள்ளத்தை எல்லா மனிதர்களுக்கும் இறைவன் பலவீனமாகவே படைத்திருக்கின்றான்.

இந்த உள்ளம் நன்மையான காரியங்களை அதிகம் செய்யத் தூண்டுவதை விட தீமையான காரியங்களைத் தான் அதிகமதிகம் செய்யத் தூண்டுகிறது. இந்த உள்ளம் எல்லா மனிதர்களுக்கும் மிக மிகப் பலவீனமானதாகவே படைக்கப்பட்டிருக்கின்றது.

பலவீனமான இந்த உள்ளத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறுகிறார்கள்:

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆதமின் மக்களின் (மனிதர்களின்) உள்ளங்கள் அனைத்தும் அளவற்ற அருளாளனின் இரு விரல்களுக்கிடையே ஒரேயோர் உள்ளத்தைப் போன்று உள்ளன. அதைத் தான் நாடிய முறையில் அவன் மாற்றுகிறான்’’ என்று கூறி விட்டு, “இறைவா! உள்ளங்களைத் திருப்புகின்றவனே! எங்கள் உள்ளங்களை உனக்குக் கீழ்ப்படிவதற்குத் திருப்புவாயாக!’’ என்று பிரார்த்தித்தார்கள்.

நூல்: முஸ்லிம் -5161

மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

உள்ளம் என்பது அல்லாஹ்வின் கரத்திலே இருக்கின்றது. அல்லாஹ் அந்த உள்ளத்தைப் புரட்டுகின்றான்.

நூல்:அஹ்மத் -13721

இன்னும் கூறுகிறார்கள்:

உள்ளம் என்பது பூமியிலே கிடக்கின்ற ஒரு இறகைப் போன்றது. எந்தத் திசையில் காற்று வீசுகிறதோ அந்தத் திசையை நோக்கி அது செல்கிறது.

நூல்: அஹ்மத் 13654

மனிதர்களின் உள்ளங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பூமியிலே கிடக்கின்ற ஒரு இறகோடு ஒப்பிடுகிறார்கள். காற்று வீசும் திசையில் பறக்கும் இறகு போல் பலவீனமாக மனித உள்ளங்கள் இருக்கின்றன என்பதை இதிலிருந்து அறியலாம்.

வருந்தி, திருந்துவோருக்கு இஸ்லாம் கொடுக்கும் கண்ணியம்

மனிதர்கள் தவறு செய்யக்கூடியவர்கள். தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்பதை அறிந்து வைத்திருக்கின்றோம். ஆனால் நாம் செய்கின்ற தவறுகளை எண்ணி வருந்தி, திருந்தி அந்தத் தவறுகளுக்காக இறைவனிடத்திலே சரணடைந்து மன்னிப்புக் கேட்டு விட்டால் நம்முடைய பாவங்களை அல்லாஹ் மன்னிக்கின்றான். நாம் திருந்தியதற்காக நம்மைக் கண்ணியப்படுத்துகின்றான்.

இன்னும் கூடுதலாகச் சொல்வதென்றால், இறைவனுக்கு அஞ்சி நாம் செய்த பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்டு, இனிவரும் காலங்களில் இது போன்ற காரியங்களில் நான் ஈடுபட மாட்டேன் என்று உளப்பூர்வமாக உறுதி கூறினால் நமக்கு வழங்குகின்ற கண்ணியம், மகத்துவம், சிறப்பைப் போன்று வேறு யாருக்கும் இறைவன் வழங்கவில்லை என்று சொல்கின்ற அளவுக்கு இறைவன் நம்மைக் கண்ணியப்படுத்துகின்றான்.

 

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

(அல்குர்ஆன்:39:53.)

பாவம் செய்து விட்டு அந்தப் பாவத்திற்காக வருந்தி, திருந்தி மன்னிப்புக் கேட்டவர்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய நாவால் கண்ணியப்படுத்தி மொழிந்த வார்த்தைகளைப் பின்வரும் செய்திகள் விளக்குகின்றன.

கண்ணீர் வரவழைக்கின்ற சம்பவங்கள்:

புரைதா பின் அல்ஹசீப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மாஇஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (விபசாரக் குற்றத்திற்குரிய தண்டனையை நிறைவேற்றி) என்னைத் தூய்மைப்படுத்துங்கள்’’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “உமக்குக் கேடுதான்! நீர் திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவனிடம் மீளுவாயாக’’ என்று கூறினார்கள்.

அவ்வாறே மாஇஸ் (ரலி) அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டு, அதிக நாள் தாமதிக்காமல் திரும்பிவந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்’’ என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உமக்குக் கேடுதான். நீர் திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீளுவீராக’’ என்று கூறினார்கள். மாஇஸ் (ரலி) அவர்கள் மறுபடியும் திரும்பிச் சென்றுவிட்டு அதிக நாள் தாமதிக்காமல் திரும்பிவந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்’’ என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் முன்பு போன்றே பதிலுரைத்தார்கள். நான்காவது முறை அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எதிலிருந்து உம்மைத் தூய்மைப்படுத்த வேண்டும்?’’ என்று கேட்டார்கள். அவர், “விபசாரக் குற்றத்திலிருந்து’ என்று விடையளித்தார். அப்போது அவர்கள், “இவருக்குப் பைத்தியம் பிடித்துள்ளதா?’’ என்று கேட்டார்கள். அவர் பைத்தியக்காரர் அல்லர் எனத் தெரிவிக்கப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள், “இவர் மது அருந்தியுள்ளாரா?’’ என்று கேட்டார்கள். உடனே ஒரு மனிதர் எழுந்து, அவரது வாயை (ஊதச் சொல்லி) முகர்ந்து பார்த்தார். மதுவின் வாடை வரவில்லை.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீர் விபசாரம் செய்தீரா?’’ என்று கேட்டார்கள். அவர் ‘ஆம்’ என்று (வாக்குமூலம்) கூறினார். அவரைக் கொண்டுசென்று கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அவர் தொடர்பாக மக்க(ளிடையே கருத்து வேறுபாடு தோன்றி அவர்க)ள் இரு பிரிவினராக ஆயினர். சிலர், “அவர் அழிந்தார். அவரை அவருடைய குற்றம் சுற்றிவளைத்துக் கொண்டுவிட்டது’’ என்று கூறினர். வேறு சிலர்,  “மாஇஸின் பாவமன்னிப்பை விஞ்சிய பாவ மன்னிப்பு இல்லை. அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தமது கையை நபியின் கையில் வைத்து, ‘என்னைக் கல்லால் அடித்துக் கொல்லுங்கள்’ என்று கூறினார்’’ என்றனர். இவ்வாறே இரண்டு அல்லது மூன்று நாட்கள் நகர்ந்தன.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தபோது மக்கள் வந்து, சலாம் சொல்லிவிட்டு அமர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (மக்களிடம்) “மாஇஸ் பின் மாலிக்குக்காக நீங்கள் பாவமன்னிப்புக் கோருங்கள்’’ என்று கூறினார்கள். ‘‘அல்லாஹ், மாஇஸ் பின் மாலிக்கின் பிழையைப் பொறுப்பானாக!’’ என்று மக்கள் வேண்டினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரினார். அது ஒரு சமுதாயத்துக்கே பங்கிடப்பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் அது போதுமானதாகும்’’ என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம்-3499

இந்தச் செய்தியை நன்றாகக் கூர்ந்து படித்துப் பாருங்கள்! பாவம் செய்து விட்டு. திரும்பத் திரும்ப வந்து ‘என்னைத் தூய்மைப்படுத்துங்கள்! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்!’ என்று முறையிடுகிறார். தான் செய்த பாவத்தை எண்ணி, திருந்தி, இறைவனுக்கு பயந்ததன் காரணத்தினால் தான் திரும்பத் திரும்ப வந்து தண்டனையைக் கேட்கின்றார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தத் தோழர் மீது அளவு கடந்த நம்பிக்கையை வைத்ததன் காரணத்தினால், இவருக்கு பைத்தியம் பிடித்து விட்டதா? இவர் போதையில் இருக்கின்றாரா? என்று கேட்ட பிறகும் கூட இவரது உள்ளம் தண்டனையைத் தேடுகிறது. தன் மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். எனவே நாம் செய்த தவறை மூடி மறைத்து விடலாம் என்று இவர் கடுகளவு கூட நினைக்கவில்லை. இவர் நினைத்திருந்தால் தான் செய்த தவறை யாருக்குமே தெரியாமல் மூடி மறைத்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் அல்லாஹ்வுக்குப் பயந்து தவறை ஒத்துக் கொண்டு தண்டனையையும் பெறுகிறார்.

கூடுதலாகச் சொல்வதென்றால், இவர் மரணித்த பிறகு இவரைப் பற்றி மக்களில் சிலர் தவறான கருத்தைப் பதிய வைக்கின்றார்கள். அப்படிப்பட்ட வார்த்தைகளை எல்லாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உடைத்து விட்டு, இவரது பாவமன்னிப்பை ஒரு சமுதாயத்துக்குப் பங்கு போட்டுக் கொடுத்தாலும் அது அவர்களுக்குப் போதுமானது என்று கூறி, பாவமன்னிப்புக் கேட்டு வருந்தி திருந்தியோரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மகத்தான முறையில் கண்ணியப்படுத்தியிருக்கிறார்கள்.

இது போன்ற மற்றொரு சம்பவத்தைப் பார்ப்போம்.

‘ஃகாமிதிய்யா’ குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் விபசாரம் செய்துவிட்டேன். (உரிய தண்டனையை நிறைவேற்றி) என்னைத் தூய்மைப்படுத்துங்கள்’’ என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணை திருப்பியனுப்பி விட்டார்கள். அப்பெண் மறு நாள் (வந்து), “அல்லாஹ்வின் தூதரே! ஏன் என்னைத் திருப்பியனுப்புகிறீர்கள்? மாஇஸ் அவர்களைத் திருப்பி அனுப்பியதைப் போன்று என்னையும் தாங்கள் திருப்பியனுப்புகிறீர்கள் போலும். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (தகாத உறவில் ஈடுபட்டு) கர்ப்பமுற்றுள்ளேன்’’ என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை, நீ சென்று குழந்தை பெற்றெடு (பிறகு திரும்பி வா)’’ என்று சொன்னார்கள். குழந்தை பெற்றெடுத்த பின் அந்தப் பெண் ஒரு துணியில் குழந்தையை எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “இது நான் பெற்றெடுத்த குழந்தை’’ என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ சென்று குழந்தைக்குப் பாலூட்டு! பால்குடி மறந்த பின் திரும்பி வா’’ என்றார்கள்.

பால்குடி மறக்கடித்த பின் அப்பெண் அச்சிறுவனுடன் வந்தார். அவனது கையில் ரொட்டித் துண்டு ஒன்று இருந்தது. அப்பெண், “அல்லாஹ்வின் தூதரே! இவனுக்குப் பால்குடி மறக்கடித்து விட்டேன். இப்போது உணவு உட்கொள்கிறான்’’ என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அச்சிறுவனை முஸ்லிம்களில் ஒருவரிடம் ஒப்படைத்தார்கள். பிறகு அந்தப் பெண்ணுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். ஆகவே, அவருக்காக நெஞ்சளவு குழி தோண்டப்பட்டது. (பின்னர் அக்குழிக்குள் அப்பெண்ணை நிறுத்திய பின்) மக்களுக்குக் கட்டளையிட, அவருக்குக் கல்லெறி தண்டனையை மக்கள் நிறைவேற்றினார்கள். காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் கல் ஒன்றை எடுத்துக் கொண்டுவந்து, அப்பெண்ணின் தலைமீது எறிந்தார்கள். இரத்தம் காலித் (ரலி) அவர்களின் முகத்தில் தெறித்தது.

அப்போது அவரை காலித் ஏசினார்கள். காலித் (ரலி) அவர்கள் ஏசியதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றபோது, “காலிதே! நிறுத்துங்கள். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! அவர் அழகிய முறையில் பாவமன்னிப்புத் தேடிக்கொண்டார். பொது நிதியை மோசடி செய்த ஒருவன் இப்படி பாவமன்னிப்புக் கோரினால் அவனுக்கும்கூட பாவமன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும்’’ என்று கூறினார்கள். பிறகு அப்பெண்ணுக்கு இறுதித் தொழுகை நடத்த ஏற்பாடு செய்யுமாறு பணித்து, அவருக்காகத் தொழுகை நடத்தினார்கள். பின்னர் அவர் அடக்கமும் செய்யப்பட்டார்.

நூல்: முஸ்லிம் 3499

இதே போன்று இன்னொரு செய்தியும் உள்ளது.

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

விபசாரத்தால் கர்ப்பமுற்றிருந்த ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! தண்டனைக்குரிய ஒரு குற்றத்தை நான் செய்துவிட்டேன். என் மீது தண்டனையை நிலைநாட்டுங்கள்’’ என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணின் காப்பாளரை அழைத்துவரச் செய்து, “இவளை நல்ல முறையில் கவனித்து வாருங்கள். குழந்தை பிறந்ததும் இவளை என்னிடம் அழைத்து வாருங்கள்’’ என்று கூறினார்கள். காப்பாளர் அவ்வாறே செய்தார்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட அவள்மீது அவளுடைய துணிகள் சுற்றப்பட்டன. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட அவளுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளுக்காக இறுதித் தொழுகை நடத்தினார்கள்.

அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இவளுக்காகத் தாங்கள் தொழவைக்கிறீர்களா? இவள் விபசாரம் புரிந்தவள் ஆயிற்றே?’’ என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவள் அழகிய முறையில் மன்னிப்புத் தேடிவிட்டாள். மதீனாவாசிகளில் எழுபது பேரிடையே அது பங்கிடப்பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் போதுமானதாக அமையும். உயர்ந்தோன் அல்லாஹ்வுக்காகத் தன் உயிரையே அர்ப்பணித்த இப்பெண்ணின் பாவமன்னிப்பைவிடச் சிறந்ததை நீர் கண்டுள்ளீரா?’’ என்று கேட்டார்கள்.

நூல்: முஸ்லிம்-3500, 3501

ஒரு பெண்மணி தான் செய்த பாவத்தை எண்ணி, அல்லாஹ்வுக்குப் பயந்து தண்டனையைப் பெறுகிறாள். எந்தப் பெண்ணாவது தன்னுடைய மூன்று வயது குழந்தையை விட்டு விட்டு சாவதற்குத் துணிவாளா? எனக்கு என்னுடைய குழந்தையை விட, இறைவனிடத்திலே வழங்கப்படுகிற வேதனை தான் பெரியது என்று எண்ணி பெற்றெடுத்த தன்னுடைய குழந்தையைத் தியாகம் செய்கிறாள்.

கல்லை எடுத்து ஒரு தோழர் அந்தப் பெண்மணி மீது எறிகிறார். அந்தப் பெண்மணியின் இரத்தம் கையில் விழுந்தவுடன் “சீ” என்று விமர்சிக்கிறார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு சொல்லக் கூடாது என்று கண்டித்து, அந்தப் பெண்ணைக் கண்ணியப்படுத்துகிறார்கள்.

அடுத்த செய்தியில் நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணுக்கு ஜனாஸா தொழுகை நடத்துவதற்கு முன்வரும் போது உமர் (ரலி) தடுக்கிறார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கொடுக்கின்ற அருமையான பதிலைப் பார்த்தால் பாவம் செய்து விட்டுத் திருந்துவோருக்கு இஸ்லாம் கொடுக்கின்ற கண்ணியத்தைப் பறைசாற்றுகிறது.

இந்தச் செய்திகள் நமக்கு நடத்துகின்ற பாடம் என்ன?

ஒரு மனிதன் தான் செய்த பாவத்திற்கு வருந்தி, திருந்தி படைத்த இறைவனிடத்தில் பாவமன்னிப்புக் கேட்டு விட்டால் அவர்களுக்கு இஸ்லாம் வழங்குகின்ற கண்ணியம், மகத்துவம், சிறப்பு அளப்பரியது என்பதை விளங்க முடிகின்றது.

மனிதன் தவறுகளுக்கு அப்பாற்பட்டவன் இல்லை. அதே நேரத்தில் பாவம் செய்து விட்டுத் திருந்தி பாவமன்னிப்புக் கேட்டு அல்லாஹ் அந்த அடியானின் பாவத்தை மன்னித்து விட்டாலோ அல்லது அந்தப் பாவத்திற்குத் தண்டனையை இந்த உலகத்திலேயே பெற்று விட்டாலோ அத்துடன் அவனது பாவத்தை அல்லாஹ் முடிவுக்குக் கொண்டு வருகின்றான். மேலும் இஸ்லாம் அந்த அடியானை விடச் சிறந்த ஓர் அடியான் இல்லை என்று சொல்கின்ற அளவுக்கு அவனை மேன்மைப்படுத்துகிறது.

எனவே, மனிதர்களாகிய நாம் பாவம் செய்வது இயல்பு. ஆனால் அந்தப் பாவத்தைத் தொடராக செய்து கொண்டே இருக்காமல், ஷைத்தானின் தாக்கத்திலிருந்து விடுபட்டு விலகி, அல்லாஹ்விடத்திலே மன்றாடி பாவமன்னிப்புக் கேட்டுத் திருந்தி விட்டால் அல்லாஹ் நம்மை நிச்சயம் மன்னிக்கின்றான்.

மனிதர்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. அவர்களில் திருந்துவோரே சிறந்தவர்கள். இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் திருந்துவதற்கு முயற்சிப்போம் இறைவனுக்காக!!!

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *