நோன்பு பெருநாள் உரை

அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே!

ஒருமாத காலம் நோன்பை இறைவனுடைய திருப்தியை நாடி நோற்று, அவனுடைய பரிசை எதிர்பார்த்து நாமெல்லாம் இங்கே அமர்ந்திருக்கிறோம். இந்த நேரத்தில் நாம் நினைவில் வைக்க வேண்டிய சில செய்திகளை இந்த பெருநாள் உரையிலே நாம் பார்க்க இருக்கிறோம். ஏனென்றால் பண்டிக்கை என்றாலே பலருக்கு புதிய ஆடையை அணியவேண்டும், சுவையான உணவு சாப்பிடவேண்டும், எங்கேயாவது ஊர் சுற்றவேண்டும், இன்னும் சிலர் நண்பர்களோடு சினிமா தியேட்டருக்கு போகவேண்டும், என்று இந்த பெருநாளை கழிப்பதை பார்க்கிறொம். இறையச்சத்தை பெறுவதற்கா, ஒருமாத காலம் பயிற்சி பெற்ற நாம் அதை பெற்றிருக்கிறோமா என்று சிந்திப்பார்க்க இந்த நாளை செலவிட தவறிவிடுகிறோம்.

ஏனெனில், முஸ்லிம்களாகிய நாம் மரணத்திற்கு பின் ஒரு நிரந்த வாழ்க்கை உண்டு என்று உறுதியாக நம்புகிறோம். அந்த வாழ்க்கையின் முதல் கட்டம் மறுமைநாளின் விசாரணை. அந்த விசாரனையில் ஒரு மனிதன் வெற்றி பெற வேண்டுமானல் இவ்வுலகில் வாழந்த வாழ்க்கையில் அவன் எழுதிய பரீட்சையில் வெற்றிபெறவேண்டும். அந்த பரீட்சையில் பாஸ் ஆவதற்கு, முஸ்லிம்களுக்கு இறைவன் ஏற்படுத்தித் தந்த ஒரு எளிய வழி தான் இந்த ரமளானுடைய நோன்பு. மறுமையை மறந்து வாழ்கிற மக்களுக்கு இறைவன் அளிக்கும் பயிற்சி தான் இந்த நோன்பு.

உலகில் நடத்தப்படும் பரீட்சையில் பாஸ் ஆவதற்கு எப்படி டியூசன் எடுப்பார்களோ, அதைப் போன்ற இறைவன் நடத்திய டியூசன் தான் இந்த நோன்பு. இந்த டியூசனில், பயிற்சியில் எந்த நபர்கள் முழுமையாக பயனடைந்தோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டிய நேரம் இந்த நேரம். ரமளானில் பெற்ற பயிற்சியை ஒவ்வொன்றாக சிந்திப்போம்.

தொழுகை:

இந்த ரமளானில் நம்முயை தொழுகை எப்படி இருந்தது? 5 வேளை தொழுகையையும் தொழுது, அதற்கு மேல் இரவுத்தொழுகையையும் ஒன்றுவிடாமல் கால்வலிக்க நின்று வணங்கினோம். இப்போது என்ன நிலைமை? அல்லாஹ் நம்மை மறுமையிலே நிறுத்தி விசாரிப்பதற்கு முன்னால், உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள். இன்றைய லுஹர், அஸர்…. தொழுகைகளை சரியாக நிறைவேற்றுவோமா? இல்லை. தொழுகைக்க இன்றோடு முழுக்கு போட்டுவிட்டு சென்றுவிடுவோமா? அப்படி சென்று விட்டால், இறைவன் நமக்கு அளித்த பயிற்சியை சரியாக பெறவில்லை. இந்த நோன்பு நம்மிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று தானே அர்த்தம்!

அகிலத்தின் அருட்கொடை, முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட, நபி (ஸல்) அவர்கள் தொழுகை எப்படி இருந்தது என்று ஹதீஸ்களில் பார்க்கிறோம். மரண வேளையில் கூட தொழுகையை அவர்கள் விட்டு விடவில்லை. அப்பாஸ் (ரலி) மற்றும் அலீ (ரலி) ஆகிய இருவரின் மீது சாய்ந்து கொண்டு தரையில் காலை ஊன்ற முடியாமல் அவர்களது பாதம் தரையில் கோடு போட்டுக் கொண்டே சென்றது. இவ்வளவு சிரமமான நிலையிலும் இறைவனுக்குச் செய்ய வேண்டிய தொழுகையை நிறைவேற்றினார்கள். தான் இல்லாவிட்டாலும் தன் தோழர்கள் தொழுது கொண்டிருப்பதைப் பார்த்து அளவில்லா மகிழ்ச்சி கொண்டார்கள்.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, ‘நபி (ஸல்) அவர்கள் நோயுற்ற போது நடந்த நிகழ்ச்சியை எனக்குச் சொல்வீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூறியதாவது. நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையான போது, ‘மக்கள் தொழுது விட்டார்களா?’ என்று கேட்டார்கள். ‘இல்லை, அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறார்கள்’ என்று கூறினோம். அப்போது ‘பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்’ என்றார்கள்.

அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம். அதில் அவர்கள் குளித்து விட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்து விட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்த போது, ‘மக்கள் தொழுது விட்டார்களா?’ என்று கேட்டார்கள். ‘இல்லை, அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று சொன்னோம். அப்போது, ‘பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்’ என்றார்கள். அவ்வாறே தண்ணீர் வைத்தோம். அவர்கள் உட்கார்ந்து குளித்து விட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்து விட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்த போது, ‘மக்கள் தொழுது விட்டார்களா?’ என்று கேட்டார்கள். ‘இல்லை, அவர்கள் உங்களை எதிர்பார்த்து இருக்கிறார்கள்’ என்று சொன்னோம். அப்போது ‘பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்’ என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம். 

அறிவிப்பவர்  : உபைதுல்லாஹ்,

நூல் : புகாரி 687

அவர்கள் தொழுகையைப் பாழாக்கினர். மனோ இச்சைகளைப் பின்பற்றினர். அவர்கள் நஷ்டத்தைச் சந்திப்பார்கள். திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 19:59,60)

இந்த வசனத்தில் தொழுகையை விட்டால், தவ்பா செய்தால் மட்டும் போதாது, அவர்கள் ஈமானும் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் கூறுவதிலிருந்து தொழுகையை விட்டவர் கிட்டத்தட்ட இஸ்லாத்தை விட்டே வெளியே போய் விட்டார் என்பதை அறியலாம். எனவே தொழுகையை சரிப்படுத்துவோம். மறுமையில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக்கூடிய விஷயம் அது. சோம்பேரித்தனத்தின் காரணமாகவோ, குடும்ப வேலைகளில் காரணமாகவோ, வேறு எந்த காரணத்தை சொல்லிக் கொண்டும் தொழுகையை விட்டால் மறுமையில் நம்மைவிட நஷ்டவாளி யாரு இருக்க முடியாது.

தான தர்மம்:

ரமாளனில் நம்முடைய தானதர்மங்கள் எப்படி இருந்தது, இனி எப்படி இருக்கும்? சிந்தித்துப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இனிய சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்). 

அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி),

நூல் : புகாரி (6023)

தர்மம் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்றால், ஒரே ஒரு பேரீட்சம்பழம் தான் இருக்கிறது என்றால் அதில் ஒரு துண்டையாவது கொடு நபி(ஸல்) கூறுகிறார்கள் என்றால், இன்றைக்கு நம்மிடத்திலே தர்மம் செய்வதற்கு ஒரு பேரீட்சம் பழம் தான் இருக்கிறதா? நெஞ்சில் கைவைத்து யோசித்துப்பாருங்கள். 10 நாளைக்கு தேவையான உணவு இன்றைக்கு ஒவ்வொருவரிடமும் வீட்டிலே இருப்பு இருக்கும். பலமாதங்களுக்கு உணவுக்கு தேவையான பொருளாதாரம் இருக்கும். தானம் செய்கிறோமா? தினம்தினம் ஒரே ஒரு ஏழைக்காவது உணவு வாங்கித்தருகிறோமா? அண்டைவீட்டிலே படிக்க வசதியற்றவன், புத்தகம் வாங்க வசதியற்றவன் இருப்பான். உதவுகிறோமா? உபரியான தர்மம் ஒருபக்கம் இருக்கட்டும், கட்டாய கடமையான ஜகாத்தையே கொடுக்காதவர்கள் இருக்கிறார்கள்.

ஜகாத் கொடுக்காதவரின் தண்டனை :

உலகில் ஒட்டகம் வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்றவில்லையாயின் அது கியாமத் நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து, தனது கால்களால் அவனை மிதிக்கும். மேலும் அது போலவே உலகில் ஆடு வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்றவில்லை என்றால் அது கியாமத் நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து தனது குளம்புகளால் அவனை மிதித்துத் தனது கொம்புகளால் அவனை முட்டும். மேலும் உங்களில் யாரும் கியாமத் நாளில் கத்திக் கொண்டிருக்கும் ஆட்டைத் தமது பிடரியில் சுமந்து கொண்டு வந்து, (அபயம் தேடிய வண்ணம்) முஹம்மதே என்று கூற, நான் ‘அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரம் இல்லை’ என்று கூறும் படியான நிலை ஏற்பட வேண்டாம். நிச்சயமாக நான் அறிவித்து விட்டேன்.

மேலும் யாரும் (கியாமத் நாளில்) குரலெழுப்பிக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைத் தமது பிடரியில் சுமந்து கொண்டு வந்து, முஹம்மதே என்று கூற, நான் ‘அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரம் இல்லை’ என்று கூறும் படியான நிலை ஏற்பட வேண்டாம். நிச்சயமாக நான் அறிவித்து விட்டேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அஹுரைரா (ரலி),

நூல் : புகாரி 1402

இந்த நோன்பு நம்மை மாற்ற வேண்டும். மாற்றினால் தான் அது நோன்பு. தான தர்மம் செய்பவர் அடுத்தவர் காசுக்கு ஆசைப்படுவாரா? எனவே இந்த பண்பை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பனூ இஸ்ராயீலில்) ஒரு மனிதர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருக்கிருந்த அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தனது நிலத்தில் தங்கம் நிரம்பிய ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம் ‘என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்) உன்னிடமிருந்து நிலத்தைத் தான் நான் வாங்கினேன். இந்தத் தங்கத்தை வாங்கவில்லை’ என்று கூறினார். நிலத்தின் (முந்தைய) உரிமையாளர் ‘நிலத்தை அதிலிருப்பவற்றுடன் சேர்த்துத் தான் நான் உனக்கு விற்றேன். (ஆகவே இந்தத் தங்கம் உனக்குத் தான் உரியது)’ என்று கூறினார். (இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்பு கேட்டுச் சென்றனர்.

அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டுச் சென்ற அந்த மனிதர், ‘உங்கள் இருவருக்கும் குழந்தை இருக்கிறதா?’ என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், ‘எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான்’ என்று சொன்னார். மற்றொருவர், ‘எனக்குப் பெண் பிள்ளை இருக்கிறது’ என்று சொன்னார். தீர்ப்புச் சொல்பவர், ‘அந்தப் பையனுக்கு அந்தச் சிறுமியை மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காகவும் அதிலிருந்து செலவழியுங்கள். தான தர்மம் செய்யுங்கள்’ எனத் தீர்ப்பளித்தார். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி (3472)

இது போன்ற தாரளமான மனப்பான்மையை, நல்ல பண்பை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

கடன், மோசடி

ஏனென்றால், சிலரிடத்தில் தொழுகை, நோன்பு, திக்ர் போன்றவை சரியாக இருந்தாலும், அடுத்தவன் காசு மேலே ஒரு அலாதி பிரியம். அடுத்தவன் காசு இவன் கைக்கு வந்துட்டா, அதை கொடுத்தவன் திரும்பி வாங்குவதற்குள் பாடாத பாடு பட்டுடுவான். நன்மையை எதிர்பார்த்து கடன் கொடுத்தவன் அலையாய் அலைவான். எச்சரிக்கை. சொர்க்கத்திற்குச் செல்வதற்கு அது தடைக்கல்லாகி விடும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘பெருமை, மோசடி மற்றும் கடன் ஆகிய மூன்று விஷயங்களை விட்டும் நீங்கிய நிலையில் உடம்பை விட்டும் உயிர் பிரியுமானால் அது சொர்க்கத்தில் நுழைந்துவிடும்’ என்று கூறினார்கள். 

அறிவிப்பவர்: சவ்பான் (ரலி),

நூல் : இப்னுமாஜா (2403)

எனவே, அடுத்தவர் பொருள் ஒரு ரூபாய் கூட நமக்கு வேண்டாம். இதில் கவனம் இல்லையென்றால், நாம் வைத்த தொழுகை, நோன்பு அனைத்தின் நன்மையையும் பிறருக்கு கொடுத்துவிட்டு, ஓட்டான்டியாக, முஃப்லிஸாக மறுமையிலே நிற்க வேண்டியது தான். எனவே, யாரிமுடம் கையேந்த மாட்டேன். யார் காசுக்கும் ஆசைப்பட மாட்டேன் என்று உறுதி எடுங்கள். அல்லாஹ் அதற்கு உதவிசெய்வான். ஹகீம் அவர்களின் சம்பவத்தை பாருங்கள்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்ளூ மீண்டும் (உதவி) கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன் வழங்கிவிட்டு, ‘ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு இதில் வளம் ஏற்படுத்தப்படும்ளூ யார் இதைப் பேராசையுடன் எடுத்துக்கொள்கின்றாரோ அவருக்கு அதில் வளம் ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது’ என்று கூறினார்கள். அப்போது நான், ‘அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீதாணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும்வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன்’ எனக் கூறினேன்.

ஆபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார்கள். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள் ‘முஸ்லிம் சமுதாயமே! தமது உரிமையைப் பெற்றுக்கொள்ளுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற்றுக் கொள்ள மறுக்கிறார். இதற்கு நீங்களே சாட்சி!’ எனக் கூறினார்கள். ஹகீம் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும்வரை எதையும் கேட்கவேயில்லை என சயீத் பின் அல் முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். 

அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி),

நூல் : புகாரி (1472)

எனவே, இதுபோன்ற உறுதி நம்மிடத்தில் வரவேண்டும். ஏனெனில் கடனாக வாங்கும் தொகை, ஒரு அமானிதம். கடன் வாங்கி நிறைவேற்றாமல் மரணித்தவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழ வைக்கவில்லை. அந்தக் கடனுக்கு யாராவது ஒருவர் பொறுப்பேற்ற பின்பு தான் தொழ வைத்தார்கள். இந்த அளவிற்கு பிறர் பொருளை, கடனை ஒப்படைக்காமல் இருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்துள்ளார்கள்.

தொழுகை நடத்துவதற்காக ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. ‘இவர் கடனாளியா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது, நபித்தோழர்கள், இல்லை என்றனர். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. ‘இவர் கடனாளியா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள், ஆம் என்றனர். நபி (ஸல்) அவர்கள் அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள் என்றார்கள். அப்போது அபூகதாதா (ரலி) அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! இவரது கடனுக்கு நான் பொறுப்பு!’ என்று கூறியதும் அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். 

அறிவிப்பவர்: ஸலமா (ரலி),

நூல் : புகாரி (2295)

கடனுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லையென்றால், நபி(ஸல்) அவர்கள் தொழவைக்க மாட்டார்களாம். இந்த இழிநிலை நமக்கு வேண்டாம். எனவே, மார்க்க கடமைகளை சரியாக நிறைவேற்றும் அதே வேளையில் மனிதஉரிமை தொடர்பான கடமைகளையும் சரியாக நிறைவேற்றி மறுமையில் வெற்றி பெறவேண்டும்.

எனவே, இந்த நாளிலிருந்து நம்முடைய அனைத்து காரியங்களும் மாற வேண்டும். மரணத்திற்கு பிறகு இறைவனிடத்தில் சென்று சொர்க்கத்தில் நுழைந்து, வானவர்களால் ஸலாம் கூறி வரவேற்கப்பட்டு, சுவனத்து உணவை ருசித்து, அந்த மாளிகையில் நுழைந்து அங்கே போடப்பட்டிருக்கும் கட்டில்களில் போய் சாயும் வரை, ஒவ்வெரு செயலையும், இது மறுமையில் நமக்கு பயன்தருமா? நம்மை சொர்க்கத்தில் செர்க்குமா? என்பதை சிந்தித்துப்பார்த்து, இறைவன் கடமையாக்கியிருக்கிற தொழுகையை சரியான முறையில் நிறைவேற்றி சுவனத்தில் நுழையும் மக்களாக நம் அனைவரையும் இறைவன் ஆக்கி அருள்புரிவானாக!

வாகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். அஸ்ஸலாமு அலைக்கம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed