நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும் போது….
நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உனது வலது கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள்.
அறிவிப்பவர் : பராஃ இப்னு ஆஸிப் (ரலி),
நூல் : புகாரி (247)
நபி (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்குச் செல்லும் போது தனது வலது கை பக்கமாகச் சாய்ந்து படுப்பவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர் : பராஃ இப்னு ஆஸிப் (ரலி),
நூல் : புகாரி (6315)
இந்த ஹதீஸின் அடிப்படையில் வலது புறமாக ஒருக்களித்துப் படுப்பது நபிவழி என்பதை அறியலாம். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானதாகும்.
இவ்வாறு ஒருக்களித்துப் படுப்பது மனிதனுக்கு பலவிதமான நன்மைகளையும் ஆரோக்கியத்தையும் தருவதாக நவீன ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
தூக்கமும் பல நோய்களைத் தன்னுள் கொண்டிருக்கிறது என்பது இன்னொரு முக்கியமான செய்தி. பல தூக்கம் சம்பந்தமான நோய்கள் மனிதனை இன்று அல்லலுறச் செய்து கொண்டிருக்கின்றன. குறட்டை விடுதல் அவற்றில் ஒரு குறைபாடு எனக் கொள்ளலாம். குறட்டை விடுவது நிம்மதியைப் பாதிக்கிறது, தூக்கத்தைப் பாதிக்கிறது என்று சொல்லி வாழ்க்கைத் துணை விவாகரத்து வாங்கிக் கொண்ட நிகழ்வுகள் பல மேலை நாடுகளில் நடந்திருக்கின்றன.
தொண்டையின் பின்னால் இருக்கும் மெல்லிய தசைகள் காற்று வரும் பாதையை அடைக்கும்போது, அல்லது குறுகலாக்கும் போது எழும் சத்தமே குறட்டை என்பது மருத்துவ மொழி.
அதிக உடல் எடையுடன் இருப்பதும், தூங்குவதற்கு முன்னால் மது அருந்துவதும், தூக்க மாத்திரைகள் போடுவதும் குறட்டை விடுதலை அதிகப்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள். நல்ல உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவுப் பழக்கமும் இருந்தால் நிச்சயம் குணப்படுத்திவிட முடியும் எனும் குறை பாடுதான் குறட்டை.
குறட்டை விடும் ஆசாமிகள் ஒருக்களித்துப் படுப்பது குறட்டையிலிருந்து தற்காலிகமாய் தப்பிக்க உதவும்.
‘சிலீப் அப்னோவா’ எனப்படும் தூக்கத்தில் மூச்சுத் திணறல் நோய் ஒன்று இருக்கிறது. இந்த நோய்க்கான காரணமும் குறட்டைக்கான காரணமும் ஏறக்குறைய ஒன்று தான் என்றாலும் இது சற்று பயமுறுத்தும் நோய்.
தூக்கத்தில் மூச்சுப் பாதையில் அடைப்பு ஏற்பட்டு சுமார் பத்து முதல் இருபத்து ஐந்து வினாடிகள் வரை மூச்சு தடைபடுவதே இந்த நோயின் அச்சுறுத்தும் அம்சம். மூச்சு மூளைக்கு வரவில்லை என்றதும் மூளை சமிக்ஜை அனுப்புகிறது. உடனே உடல் திடுக்கிட்டு விழித்துக் கொள்கிறது.
அதன் பின் மீண்டும் மூச்சு சீராகிறது. ஆனால் அதற்குள் உடல் வியர்த்து மிகவும் சோர்வடைந்து, படபடப்பாகிவிடுகிறது. மாரடைப்பு போன்ற நோய்கள் வருவதற்கு இத்தகைய நோய் ஒரு காரணம் எனலாம்.
சிலருக்கு ஒவ்வோர் இரவும் சுமார் முந்நூற்று ஐம்பது முறை கூட இத்தகைய மூச்சு தடை படுதல் நிகழ்கின்றதாம். உயர் இரத்த அழுத்தம், சோர்வு, தலைவலி போன்ற பல நோய்களுக்கும் இது காரணமாகி விடுகிறது.
இந்த நோய்க்கும் குறட்டைக்கான மருத்துவ தீர்வுகளே உதவுகின்றன. குறிப்பாக நல்ல உடற்பயிற்சி, மது அருந்துதலைத் தவிர்த்தல், ஒருக்களித்துப் படுத்தல் போன்றவை பயனளிக்கும்.