நாவைப் பேணுவோம்

மனிதன், சக மனிதனுக்குச் செய்யும் தீங்குகளுக்கு அந்த மனிதன் மன்னிக்காத வரை இறைவன் மன்னிக்கமாட்டான். எனவே சக மனிதனுக்கு நாம் செய்யும் தீங்குகளுக்காக அவனிடம் மன்னிப்புக் கேட்டு, தவறிலிருந்து மீண்டெழுந்து நம்மை நாமே சீர்படுத்திக் கொள்ள வேண்டும். இதையே நபிகளார் பின்வரும் ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர், தன் சகோதரனுக்கு அவனது மானத்திலோ, வேறு விஷயத்திலோ இழைத்த அநீதி இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு தீனாரோ, திர்ஹமோ பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (மறுமை நாள்) வருவதற்கு முன்னால் இன்றே மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். (மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனது அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரது தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டுவிடும்.

நூல் : புகாரி 2449

இந்த அவல நிலையை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு நபிகளார் கூறியிருக்க இன்றோ முஸ்லிம்களாலேயே பிற முஸ்லிம்கள் பாதிக்கப்படும் அவல நிலை உருவாகியுள்ளது. நாவு எனும் ஆயுதத்தால் பிற மனிதர்களின் மனதை கீறிக்கிழித்து விடுகின்றோம். காயங்களை ஏற்படுத்தாமலேயே காலமெல்லாம் ஆறாத வடுவை ஏற்படுத்துகின்றோம்.

ஒருவர் எந்தத் தவறும் செய்யாவிட்டாலும் கூட அவரது குடும்ப உறுப்பினர் யாரேனும் செய்த தவறுக்காக அவரைக் குற்றவாளியாகச் சித்தரிக்கிறோம்.

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரது நாவு மற்றும் கையி(ன் தொல்லைகளி)லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார். எவர் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக்கொண்டாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்

நூல் : புகாரி 10

பாதிக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு வலியும், வலுவும் அதிகம் என்பதை மனதில் கொண்டு பாதிப்பை ஏற்படுத்துவதை விட்டும் தவிர்ந்திருப்போம்.

ஒருவரின் நற்குணத்தைக் கேள்விக்குறியாக்கும் கனம் நிறைந்த வார்த்தைகள் மற்றவர்களின் வாழ்க்கையில் மட்டும் தான் பாதிப்பை ஏற்படுத்தும்; நமக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாது என்றெண்ணி சர்வ சாதாரணமாக வெறும் வாய்க்கு அவல் போட்டாற்போன்று மகிழ்ச்சியாக ரசித்து ரசித்து பேசுபவர்கள், தனக்கும் இது மிகப்பெரும் விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்வதில்லை.

ஒரு மனிதன் நன்மை, தீமை என எதைச் செய்தாலும் அதைத் தனக்காகவே செய்கிறான் என்று அல்லாஹ் கூறுகின்றான்

நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கே நன்மை செய்கிறீர்கள். நீங்கள் தீமை செய்தால் அதுவும் உங்களுக்கே.

அல்குர்ஆன் 17:7

விபரீதம் நிறைந்த வார்த்தைகள்

முன் பின் விளைவைப் பற்றி துளியளவும் சிந்திக்காமல் ஒரு மனிதன் பேசும் வார்த்தைகளின் உச்சகட்டம் அவனை நரகப்படுகுழியில் தள்ளிவிடுகின்றது

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஓரு வார்த்தையை சர்வ சாதாரணமாகப் பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்

நூல் : புகாரி 6478

மிகப்பெரும் அருட்கொடையான நாவின் மூலம் நம்மை அறியாமல் கூட தீமைகளை செய்து நரகப்படுகுழியில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காகவே “நல்லதைப் பேசு! இல்லையேல் வாய்மூடி இரு” என்று நம் மார்க்கம் நமக்குக் கட்டளையிடுகின்றது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்.

நூல் ; புகாரி  6475

மனிதனின் பார்வையில் மனிதர்கள்

ஒரு மனிதன் சமூகத்தின் பார்வையில் சிறந்தவனாகப் பார்க்கப்படுகின்றான் ஆனால் அல்லாஹ்விடத்திலோ அந்தஸ்தில் இழிவானவனாக இருக்கின்றான். ஒரு மனிதன் சமூகத்தின் கண்ணோட்டத்தில் இழிந்தவனாகக் கருதப்படுகின்றான். ஆனால் அல்லாஹ்விடத்தில் அவனது அந்தஸ்தோ உயர்ந்து நிற்கின்றது.

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்துவருவார். ஆனால், (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். இன்னொரு மனிதர் மக்களின் வெளிப்பார்வைக்கு நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்’’ என்று கூறினார்கள்

நூல் : புகாரி 4203

மனிதனுடைய பார்வையோ வெளித்தோற்றத்தை மட்டுமே பார்க்கின்றது. அவ்வளவு தான் பார்க்க இயலும். ஆனால் வல்ல நாயனோ அவனது உள்ளத்தையும் செயல்பாடுகளையும் மட்டுமே பார்க்கின்றான். அவன் அனைத்து பொருட்களையும் சூழ்ந்தறிபவன், ஞானமிக்கவன்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்.

நூல் : முஸ்லிம் 5012

எனவே நம் பார்வைக்கு நல்லவன் அல்லது கெட்டவன் என்று தோன்றுவதையெல்லாம் நாம் சரி என்று கருதி அவனைப் பற்றி தவறாகப் பேசக் கூடாது என்றே மார்க்கம் நமக்கு கட்டளையிடுகின்றது.

அபூபக்ரா நுஃபைஉ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரைப் பற்றிப் புகழ்ந்து பேசினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் உமக்கு நாசம்தான்! உன் சகோதரரின் கழுத்தைத் துண்டித்துவிட்டாயே! உன் சகோதரரின் கழுத்தைத் துண்டித்துவிட்டாயே’’ என்று பலமுறை கூறினார்கள். பிறகு, “உங்களில் ஒருவர் தம் நண்பரைப் புகழ்ந்தேயாக வேண்டும் என்றிருந்தால், “இன்ன மனிதரைப் பற்றி நான் (இவ்வாறு) எண்ணுகிறேன்என்று (மட்டும்) கூறட்டும். அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை (செய்து முடிவு) செய்பவன் ஆவான். நான் அல்லாஹ்வை முந்திக்கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று கூறமாட்டேன். அவரைப் பற்றி இன்னின்னவாறு கருதுகிறேன் என்றுகூட, அவர் அவ்வாறு இருக்கிறார் என அறிந்தால் மட்டுமே கூறட்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed