நாற்காலியில் அமர்ந்து தொழக்கூடாதா?

சபீர் அலி

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் ஃபத்வா ஒன்று பரவிவருகிறது.

“நாற்காலியில் அமர்ந்து தொழுவது அறவே கூடாது” என்ற தலைப்பில் வெளியான அக்கட்டுரையில் அதற்கான ஆதாரங்கள் சிலவற்றைக் குறிப்பிட்டு, நாற்காலியில் அமர்ந்து தொழக் கூடாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.

அவர்கள் அதில் குறிப்பிடும் ஆதாரங்கள் ஏற்புடையதா? நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாதா? என்பன போன்ற தகவல்களை இக்கட்டுரையில் காண்போம்.

மார்க்கத்தில், நாற்காலியில் அமர்ந்து தொழக் கூடாது என்பதற்கு ஆதாரங்கள் இருப்பின் அதை அமல்படுத்துவதில் தவ்ஹீத் ஜமாஅத் முன்னோடியாக இருக்கும். அல்லது நாற்காலியில் அமர்ந்து தொழுவது மார்க்க அடிப்படையில் தவறு என்று சுட்டிக்காட்டும் போது அதை எவ்வித சுய விருப்பு வெறுப்புமின்றி ஏற்றுக் கொள்வதிலும் தவ்ஹீத் ஜமாஅத் முதன்மை வகிக்கும்.

ஆனால், இந்த விஷயத்தில் தாங்கள் வழங்கும் தீர்ப்பிற்குச் சான்றாக அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் அனைத்தும்  அந்தத் தீர்ப்பை அறவே வழங்கவில்லை.

ஒரு ஆதாரத்தை எடுத்து வைக்கும்போது நாம் எடுத்து வைக்கும் ஆதாரத்தில் என்னென்ன கருத்துக்கள் கிடைக்கிறதோ அதை வைத்துத்தான் மார்க்கத் தீர்ப்புகள் வழங்க வேண்டும். ஒரு ஆதாரத்தைக் குறிப்பிட்டுவிட்டு, இதை இவர் அவ்வாறு விளங்கினார். அவர் இவ்வாறு விளங்கினார். அதனால் நாமும் இதை அவர் விளங்கியதைப் போன்றே விளங்கி ஆதாரமாக்க வேண்டும் என்று ஆதாரம் காண்பிக்கக் கூடாது.

ஒரு செய்தியிலிருந்து யாரோ ஒருவர் விளங்கிய தகவல் அந்தச் செய்தியில் இருக்கிறதா என்பதைத்தான் பார்க்க வேண்டுமே தவிர அதில் இல்லையென்றாலும் அந்த இமாம் விளங்கியுள்ளார் அல்லவா என்று அந்த விளக்கத்தை ஆதாரமாக ஆக்ககூடாது.

மனிதர்களின் விளக்கங்களை ஆதாரமாக எடுப்பது மிகப் பெரிய வழிகேடாகும் என்பதைப் புரிந்து கொண்டு கட்டுரைக்குள் செல்வோம்.

இயலாத போது அமர்ந்து தொழலாம்

இஸ்லாம் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக, தொழுகை எனும் வணக்கத்தைக் கடமையாக்கி அதன் முறைகளையும் நமக்குக் கற்றுத் தருகிறது.

தொழுகை என்பது நின்று, குனிந்து, தரையில் முகம் பதித்து, அமர்ந்து என்று பல முறைகளை உள்ளடக்கிய ஒரு வணக்கமாகும்.

இதில் முக்கியப் பங்காக நிற்றல் என்பது இருக்கிறது. அதனாலே நிற்றல் என்பதைக் குறிக்கும் கியாம் என்ற வார்த்தை தொழுகையைக் குறிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

நிற்றல் என்பது தொழுகையில் பெரும் பங்காற்றினாலும் நிற்க இயலாத சமயத்தில் அமர்ந்தோ, படுத்தோ தொழுவதற்கும் மார்க்கம் அனுமதியளிக்கிறது.

இம்ரான் பின் ஹுஸைன்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

எனக்கு மூல வியாதி இருந்தது. அகவே நான் தொழுவது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நின்று தொழுவீராக! இயலாவிட்டால் உட்கார்ந்து தொழுவீராக! அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழுவீராக!” என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 1117

ஒருவருக்கு அமர்ந்து தொழ இயலாத போது அமர்ந்தோ, படுத்தோ தொழலாம் என்று மார்க்கம் சலுகை வழங்குகிறது.

இயலவில்லையென்றாலும் தொழுகையை விட்டுவிடக்கூடாது என்பதற்காக, தொழுகையை இலகுவாக்கி மார்க்கம் சலுகையளிக்கிறது.

நின்று தொழ இயலாதவர் அமர்ந்து தொழட்டும் என்பதுதான் மார்க்கக் கட்டளையே தவிர தரையில் தான் அமர வேண்டும், நாற்காலியில் அமரக்கூடாது என்பது இல்லை.

அமர்ந்து தொழ வேண்டும் என்ற பொது கட்டளையிலிருந்து, நாற்காலியில் அமரக்கூடாது என்று ஒரு தடையைச் சொல்கிறார்கள் என்றால் அதற்கான ஆதாரத்தை அவர்கள் குர்ஆன் ஹதீஸிலிருந்து நிறுவ வேண்டும்.

அவ்வாறு, நாற்காலியில் அமர்ந்து தொழக் கூடாது என்பதற்கு அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் அனைத்தும் அவர்கள் சொல்லும் கருத்தைத் தருகின்றனவா என்று இக்கட்டுரையில் காண்போம்.

இவ்விஷயத்தில் முதன்மை ஆதாரமாக அவர்கள் வைப்பது, தொழுகையில் பணிவுடன் இருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரமாகும்.

ஆதாரம் 1 

இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் தமது தொழுகையில் பணிவுடன் இருப்பார்கள்.

அல்குர்ஆன் 23:1, 2

இந்த வசனத்தை ஆதாரமாகக் காட்டிவிட்டு பின்வரும் விளக்கத்தை அளிக்கிறார்கள்.

தொழுகை என்பது தன்னை முற்றிலும் மறந்து, இறைவனுக்கு முன்னால் தன் பணிவை வெளிப்படுத்தி அவனை வணங்குவதாகும். தொழுகையில் உள்ள ஒவ்வொரு செயல்களும் இதையே உணர்த்துகின்றன. இதுவே (குஷுவு) என்னும் உள்ளச்சமாகும்.

மேலும் உள்ளச்சம் என்பது தொழுகையாளி தன் பணிவை வெளிப்படுத்தி பார்வையை கீழ் தாழ்த்தியும் உடல் அங்கங்களை அமைதியாக வைத்து குரலை தாழ்த்துவதாகும். (ஷாமி2/407)

நாற்காலியில் அமர்ந்து தொழுவதினால் மேற்கூறப்பட்ட (குஷுவு) உள்ளச்சத்தின் வெளிப்பாடுகள் இல்லாமல் ஆகிவிடுவதால் நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது.

ஆதாரம்: 2

தொழுகைகளையும்நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்குப்  பணிந்தவர்களாக நில்லுங்கள்.

அல்குர்ஆன் 2:238

இந்த வசனத்தை எடுத்துக் கூறி மேற்படி முதலாவது ஆதாரத்தின் மூலம் சொல்லும் வாதத்தையே வேறு வார்த்தையில் கூறுகிறார்கள்.

சில உலமாக்கள் மேற்கண்ட ஆயத்திற்கு அல்லாஹ்வுக்கு முன் ஒழுங்காக நில்லுங்கள் என்று அர்த்தம் செய்துள்ளார்கள். (மஆரிஃபுல் குர்ஆன் 1/236)

قومو ا لله قانتين 

என்பதன் விளக்கவுரை: அல்லாஹ்விற்கு முன்னால் பணிவுடனும் ஒழுக்கமாகவும் நின்றுகொள்ளுங்கள்.

பூமியில் அமர்ந்து தொழும்போது பணிவும், ஒழுக்கமும் ஏற்பாடுகின்றன.

நாற்காலியில் இந்த நிலை ஏற்படாததால் அவற்றில் அமர்ந்து தொழுவது கூடாது.

தொழுகை என்பது வணக்கமாகும் (அப்த்) என்ற வார்த்தையின் பொருள் அடிமையாகும். அடிமையிடம் அடிமைத்தனம் வெளிப்படவேண்டும். நாற்காலியில் அமர்ந்து தொழும்போது அடிமைத்தனம் வெளிப்படுவதில்லை. எனவே நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது.

இதுவே அவர்களது முதல் மற்றும் இரண்டாம் வாதமாகும்.

தொழுகைக்குப் பணிவு என்பது அவசியம்தான் மாற்றுக் கருத்தில்லை. இதைத் திருக்குர்ஆனின் வசனங்கள் வலியுறுத்துகின்றன.

பணிவு என்றால் என்ன என்பதை அறியாமல் தான் நாற்காலியில் அமர்ந்து தொழுவது பணிவுக்கு எதிரானது என்று கருத்துருவாக்குகிறார்கள்.

அல்லாஹ் தன்னை வணங்குவதற்கு என்னென்ன முறைகளை கற்றுத் தந்துள்ளானோ அவற்றைக் கடைபிடித்து தனது உள்ளத்தால் தனது இறைவனுக்கு அஞ்சி வணங்குதுதான் பணிவாகும்.

நாற்காலியில் அமர்ந்து தொழுவது என்பது இறைவன் கற்றுத் தந்த முறையல்ல என்று நிறுவினால்தான், அது தொழுகையில் கடைப்பிடிக்கப்படும் பணிவுக்கு எதிரானது என்று கூற முகாந்திரம் இருக்கும்.

அதை நிறுவாமலே நாற்காலியில் அமர்ந்து தொழுவது பணிவுக்கு எதிரானது என்றால், அதற்கு என்ன ஆதாரம் என்ற கேள்வி விடையில்லாமல் நின்றுக் கொண்டே இருக்கும்.

நாற்காலியில் அமர்ந்து தொழுவது பணிவிற்கு எதிரானது என்று இவர்கள் சொல்வதைப் போன்று இருக்குமென்றால் நபிகள் நாயகம் நிச்சயம் இத்தகைய முறையில் தொழுதிருக்க மாட்டார்கள்.

ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது பயணத்தில் வாகனத்தின் மீதே அமர்ந்து தொழுதுள்ளார்கள் என்று ஹதீஸ்கள் கூறுகின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகன ஒட்டகத்தில் அமர்ந்து அது தாம் செல்ல வேண்டிய திசையில் தமது தலையால் சைகை செய்து உபரியானத் தொழுகைகளைத் தொழுவார்கள்” என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

நூல்: புகாரி 1105

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனா நோக்கி வாகனத்தில் செல்லும்போது தமது முகமிருந்த திசையில் தொழுதார்கள். இது தொடர்பாகவே நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கேயும் அல்லாஹ் இருக்கிறான்’’ எனும் (2:115ஆவது) வசனம் அருளப்பெற்றது என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 1131

ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது வாகன ஒட்டகத்தில் அமர்ந்து அது செல்லும் திசைநோக்கி (உபரியான தொழுகைகளை) தொழுவதை நான் பார்த்திருக் கிறேன் என்று ஆமிர் பின் ரபீஆ(ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 1093

நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் தமது வாகனத்தின் மீதமர்ந்தவாறு தம் வாகனம் செல்லும் திசையில் இரவுத் தொழுகையைத் தொழுவார்கள். ஆனால் கடமையான தொழுகைகளைத் தவிர! தமது வாகனத்தின் மீதமர்ந்தே வித்ருத் தொழுவார்கள் என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 1000

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தின் மீது (அமர்ந்து சைகை செய்தவாறு) அது செல்கின்ற திசையை நோக்கி (உபரித் தொழுகைகளை) தொழுபவர்களாக இருந்தார்கள். கடமையானத் தொழுகையினை அவர்கள் தொழநாடும் போது (வாகனத்திலிருந்து) இறங்கிகிப்லாவை முன்னோக்கித் தொழுவார்கள் என்று ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 400

மேற்படி செய்திகள் அனைத்திலும் நபி (ஸல்) அவர்கள் தனது வாகனத்தின் மீது அமர்ந்து தொழுதுள்ளார்கள் என்று தெரிகிறது.

அன்றைய காலத்தில் வாகனங்கள் என்பது குதிரை, ஒட்டகம், கோவேறுக் கழுதை ஆகியவைதான். அந்தக் கால்நடைகள் சென்று கொண்டிருக்கும் போது அதன் மேல் அமர்ந்திருப்பவர்கள் அப்படியே இருந்தவாறு தொழுது கொள்ளலாம்.

நாற்காலியில் அமர்ந்து தொழுவது பணிவற்ற முறையென்றால் வாகனத்தில் செல்லும் போதே தொழுவதும் அதை விடப் பணிவற்றது என்று சொல்ல வேண்டும்.

இவ்வாறு தொழுவது பணிவற்ற முறை என்றால் நிச்சயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருக்க மாட்டார்கள்.

எனவே, நாற்காலியில் அமர்ந்து தொழுவதோ, பயணிகள் வாகனத்தில்  பயணித்துக் கொண்டிருக்கும் போது தொழுவதோ தடை செய்யப்பட்டது அல்ல என்பதை நபி(ஸல்) அவர்களின் இந்தச் செயல் அழகாக எடுத்துச் சொல்கிறது.

நபி (ஸல்) அவர்கள் இதை உபரியான தொழுகையில்தானே கடைப்பிடித்தார்கள். கடமையான தொழுகையின் நேரம் வந்ததும் கீழே இறங்கித்தானே தொழுதார்கள் என்ற கேள்வியை மேற்படி செய்திகளிலிருந்து எழுப்பலாம்.

அந்தக் கேள்வியை எழுப்பினாலும் நாற்காலியில் அமர்ந்து தொழக்கூடாது என்ற இவர்களது வாதம் வலுப்பெற்றுவிடாது.

ஏனெனில், நாற்காலியில் அமர்ந்து தொழுவது தொழுகையில் பேணப்படும் பணிவிற்கு எதிரானது என்றால் நபி (ஸல்) அவர்கள் அதை உபரியான தொழுகையிலும் கடைப்பிடித்திருக்க மாட்டார்கள்.

உபரியான தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் பணிவின்றி வாகனத்தில் தொழுதார்கள் என்று இவர்கள் சொல்வார்களா?

நபி (ஸல்) அவர்கள் கடமை மற்றும் கடமையல்லாத அனைத்துத் தொழுகையிலும் பணிவுடனும் இறையச்சத்துடனும்தான் நிறைவேற்றினார்கள்.

மேற்படி வாதத்தை எடுத்து வைத்தால் நபி (ஸல்) அவர்கள் கடமையல்லாத தொழுகையில் பணிவுடன் நடக்கவில்லை என்று இவர்கள் சொல்வதற்குச் சமமாகும்.

கடமையல்லாத தொழுகையை பொறுத்த வரையில் அமர்ந்தும் தொழுது கொள்ளலாம். நின்றும் தொழுதும் கொள்ளலாம். அதே சமயம் கடமையான தொழுகையை, சக்தியிருப்பவர்கள் நின்றுதான் தொழ வேண்டும்.

அதனால்தான் நபி (ஸல்) அவர்கள் வாகனத்தை நிறுத்தி, கீழே இறங்கி நின்று தொழ சக்தியிருந்ததால் நின்று கடமையை நிறைவேற்றினார்கள். கடமையல்லாத தொழுகைகளை வாகனத்தில் அமர்ந்து நிறைவேற்றினார்கள். இவைதான் இந்தச் செய்திகளிலிருந்து நாம் தெரிந்து கொள்கின்ற சட்டங்களாகும்.

கடமையான தொழுகையை நின்று தொழ சக்தியில்லாவிட்டால் அமர்ந்தும், படுத்தும் தொழ வேண்டும் என்பதைதான் ஆரம்பத்தில் நாம் எடுத்துகாட்டிய இம்ரான் பின் ஹுஸைன்(ரலி) அவர்கள் செய்தி எடுத்துரைக்கிறது.

அமர்ந்து தொழுதல் பணிவிற்கும் அடிமைத்தனத்திற்கும் எதிரானது என்றால் இதை நபி(ஸல்) அவர்கள் ஒரு போதும் சொல்லியும், செய்தும் இருக்க மாட்டார்கள்.

மேலும், நாற்காலியில் அமர்ந்து தொழுவது பணிவிற்கு எதிரானது என்பது இவர்களது வாதம் என்றால் நபி(ஸல்) அவர்கள் படுத்தே தொழ அனுமதி வழங்கியுள்ளார்களே? அதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?

நாற்காலியில் அமர்ந்து தொழுவதே பணிவிற்கு எதிரானது என்றால் நபி (ஸல்) அவர்கள் படுத்து தொழ எப்படி அனுமதித்திருப்பார்கள்.

மேலும், இறைவனை நின்றும், அமர்ந்தும், படுத்தும் வழிபடலாம் என்று இறைவனே நமக்கு தெரிவிக்கின்றான்.

அவர்கள் நின்றும் அமர்ந்தும் படுக்கையிலும் அல்லாஹ்வை நினைக்கின்றனர். வானங்கள் மற்றும் பூமியின் படைப்பைப் பற்றி ஆய்வு செய்கின்றனர்.  எங்கள் இறைவா! இவற்றை நீ வீணாகப் படைக்கவில்லை. நீ தூயவன். எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! (என்று கூறுகின்றனர்.)

அல்குர்ஆன் 3:191

நீங்கள் தொழுகையை நிறைவேற்றிவிட்டால் நின்றும் அமர்ந்தும் படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினையுங்கள்! நீங்கள் அச்சமற்ற நிலையை அடைந்துவிட்டால்  தொழுகையை நிலைநாட்டுங்கள்! தொழுகைஇறை நம்பிக்கையாளர்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகும்.

அல்குர்ஆன் 4:103

இவ்வாறு இறைவனே தெரிவித்திருக்க, அமர்வதும் படுப்பதும் எப்படி பணிவிற்கு எதிரானதாக இருக்கும்? படுத்து நிறைவேற்றுவதே கூடும் எனும் போது நாற்காலியில் அமர்வதற்கென்ன?

நின்று நிறைவேற்ற வேண்டிய தொழுகை எனும் வணக்கத்தை இயலாதவர் தனது இயலாமையால் விட்டுவிடாமல் எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இந்தச் செய்தியின் கருத்தாகவுள்ளது.

நின்று தொழ இயலாதவர் அமர்ந்து தொழுவார். தரையில் அமரக்கூட இயலாதவர் தான் நாற்காலியில் அமர்ந்து தொழுவார். படுக்கையில் இருப்பவர் படுத்தே தொழுவார். மொத்தத்தில் அவர் எப்படியாவது தொழுகையை நிறைவேற்றிவிட வேண்டும்.

இதைத்தான் அந்த ஹதீசும் வலியுறுத்துகிறது.

இயலாமையில் அமர்ந்து தொழலாம் என்ற பொதுக்கட்டளையை தரையில் அமர்ந்தும் வாகனத்தில் அமர்ந்தும் நபியவர்கள் நமக்குச் செய்து காட்டியுள்ளார்கள்.  இதில் பிரத்யேகமாக நாற்காலியில் மட்டும் அமர்ந்து தொழக்கூடாது என்றால் அதற்கான தெளிவான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.

அவ்வாறு இவர்கள் எந்த ஆதாரத்தையும் தங்களது ஆக்கத்தில் நிறுவவில்லை.

நாற்காலியில் அமர்ந்து தொழக்கூடாது என்ற தங்களது வாதத்திற்காக அவர்கள் காட்டிய முதன்மை ஆதாரத்திலேயே அந்தக் கருத்துக்கள் இல்லை என்பதைச் சிந்திக்கவும்.

இது தொடர்பாக அவர்கள் எடுத்து வைக்கும் அடுத்தடுத்த ஆதாரங்களையும் அது பற்றிய தகவல்களையும் பார்ப்போம்.

ஆதாரம் 3, 4, 5

  1. ஹஜ்ரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோயுற்ற நிலையில் ஃபர்ளான தொழுகையை பூமியில் அமர்ந்தே நிறைவேற்றினார்கள். மேலும் நஃபில் தொழுகையை அமர்ந்தும் சைக்கினை செய்தும் நிறைவேற்றினார்கள்.

ஹிஜ்ரி 5ஆம் ஆண்டு துல்ஹிஜ்ஜா மாதம் நபியவர்களின் காலில் காயம் ஏற்பட்டபோது பல நேரத் தொழுகையை தங்கள் வீட்டில் அமர்ந்தே தொழுதார்கள். அச்சமயம் நாற்காலி அவர்களிடம் இருந்தது. (முஸ்லிம் 876)

நபியவர்களின் வீடு மஸ்ஜிதின் அருகில் இருந்தும் கூட நோயின் காரணமாக தொழுகைகளை வீட்டிலேயே நிறைவேற்றினார்கள்.

இவ்வாறே எவரேனும் பூமியில் அமர்ந்து தொழ முற்றிலும் சக்தியற்றவராக இருந்தால் அவர் வீட்டிலேயே அமர்ந்து தொழுது கொள்ளட்டும். (மஜ்ம உஜ்ஜவாயித் வமன்பவுல் ஃபவாயித்(2/149, அல் முஃஜமுல் அவ்ஸத் 3/28, முஸ்னத் அபியஃலா அல்மவ்ஸலி7/42)

  1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நோயாளியை நலம் விசாரிக்க சென்றார்கள். அவர் தலையணையின் மீது ஸஜ்தா செய்து தொழுது கொண்டிருப்பதை கண்ட நபியவர்கள் அதை தூக்கி எறிந்து விட்டார்கள். அவர் ஸஜ்தா செய்ய ஒரு குச்சியை எடுத்தார். அதையும் எறிந்து விட்டார்கள். பிறகு கூறினார்கள். உங்களால் முடிந்தால் பூமியில் ஸஜ்தா செய்து தொழுங்கள் இல்லையானால் சைகை செய்தால் போதுமானது. (ஸுனனுஸ் ஸகீர் லில் பைஹகீ 118/1, ஹுல்யதுல் அவ்லியா வதபகாது அஸ்ஃபியா92/7)
  2. ஹஜ்ரத் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு.

நானும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நோயாளியை சந்திக்கச் சென்றோம் அவர் தலையணை மீது ஸஜ்தா செய்து தொழுது கொண்டிருப்பதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைப் பார்த்துக் கூறினார்கள்:  உங்களால் முடிந்தால் பூமியின் மீது ஸஜ்தா செய்யுங்கள்! இல்லை எனில் சைகை செய்தால் போதுமானது.

உங்கள் ருகூவைக் காட்டிலும் ஸஜ்தாவிற்கு அதிகமாகக் குனிந்து தொழுங்கள்.

மேற்கண்ட மூன்று ஹதீஸ்களிலும் நபியவர்கள் பூமியின் மீது அமர்ந்து தொழுகையை நிறைவேற்றுமாறு கட்டளையிட்டார்கள். (முஸ்னத் அபியஃலா 3/345, அல் முதாலிபுல் ஆலியா 4/300,ம ஆரிஃபதுஸ்ஸுன் வல்ஆஸார்3/224)

எனவே நாற்காலியில் அமர்ந்து தொழுவது தொழுகையின் அடிப்படை நோக்கத்திற்கு மாற்றமானதாகும்.

மேற்படி செய்திகளில் எண். 3ல் குறிப்பிடப்பட்டுள்ள முஸ்லிமின் செய்தியைத் தவிர மற்ற செய்தியும், எண். 4 மற்றும் 5ல் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளும் பலவீனமானவையாகும்.

அந்த முஸ்லிமின் செய்தியின் முழுப்பகுதியும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது அல்ல. அந்தச் செய்தியிலிருந்து தாங்கள் விளங்கிய கருத்தையே இங்கு எழுதியுள்ளார்கள். இந்த வார்த்தையைக் கொண்ட செய்தி முஸ்லிமில் இல்லை.

முஸ்லிமில் இடம்பெறும் செய்தி:

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (குதிரையிலிருந்து விழுந்ததால்) உடல் நலிவுற்றர்கள். அப்போது அவர்களுடைய தோழர்களில் சிலர் அவர்களை உடல்நலம் விசாரிக்க வந்தனர். அப்போது (தொழுகை நேரம் வந்துவிடவே) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உட்கார்ந்தபடி தொழுவித்தார்கள். மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்றவாறு தொழுதனர். உடனே உட்கார்ந்து தொழுமாறு அவர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள். தொழுது முடித்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இமாம் பின்பற்றப் படுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவேஅவர் குனிந்(து ருகூஉசெய்)தால் நீங்களும்  குனியுங்கள். அவர் (ருகூஉவிலிருந்து தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் உட்கார்ந்தவாறு தொழுதால் நீங்களும் உட்கார்ந்தவாறே தொழுங்கள்’’ என்று கூறினார்கள்.

முஸ்லிம் 699

இதுதான் முஸ்லிமில் இடம்பெறும் செய்தியே தவிர அவர்கள் எடுத்துக்காட்டுவது அல்ல. அது அவர்கள் விளங்கிய கருத்துதான்.

இந்தச் செய்தியில் நபியவர்கள் தமக்கு இயலாத போது அமர்ந்து தொழுதார்கள் என்று தான் உள்ளதே தவிர, நாற்காலியில் அமர்ந்து தொழுவதற்குத் தடையேதும் வரவில்லை.

எனவே, இந்தச் செய்தியும் நாற்காலியில் அமர்ந்து தொழக் கூடாது என்பதற்கு ஆதாரமாகாது.

மற்ற செய்திகள் பலவீனங்கள். ஒரு பேச்சுக்கு ஸஹீஹ் என்று வைத்துக் கொண்டாலும் அதிலும் தடையேதும் வரவில்லை. தரையில் அமர்ந்து தொழுதுள்ளார்கள் என்றுதான் வருகிறது.

அந்த பலவீனமான செய்திகளில் ஒன்றில், தலையணை மீது ஸஜ்தா செய்வதைத் தடுத்தார்கள் என்றுள்ளது. அந்தச் செய்தியிலும் அவர் தரையில் அமர்ந்து ஸஜ்தா செய்ய இயலாத போது அவர் செய்கையின் மூலம் ஸஜ்தா செய்யாமல் தலையணையைத் தூக்கி, தனது நெற்றியில் படுமாறு வைத்து அதை ஸஜ்தாவாக ஆக்கியுள்ளார் என்ற கருத்துதான் உள்ளது.

குச்சியை எடுத்து ஸஜ்தா செய்ய முனைந்த போதும் நபியவர்கள் தடுத்தார்கள் என்ற அடுத்த தகவலிலிருந்து இந்தக் கருத்தை அறியலாம்.

இவ்வாறு ஒரு பொருளை எடுத்து, தூக்கி நெற்றியில் ஒற்றிக் கொண்டு அதை ஸஜ்தாவாக ஆக்குவதைத்தான் நபியர்கள் தடுத்து, முடிந்தால் தரையில் செய்யுங்கள்! இல்லையேல் சைகை செய்யுங்கள் என்கிறார்கள்.

இதைத்தான் இந்தச் செய்தி எடுத்துரைக்கிறது. இதை வைத்து நாற்காலியில் தொழுவதை நபியவர்கள் தடுத்தார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்?

எதுவாயினும் இந்தச் செய்தி பலவீனம். அதை வைத்து மார்க்கச் சட்டம் எடுக்க இயலாது.

மேற்படி ஐந்து ஆதாரங்கள் தான் குர்ஆன் ஹதீஸிலிருந்து எடுத்துவைக்கிறார்கள்.

அதில் எதுவும் நாற்காலியில் அமர்ந்து தொழக் கூடாது என்ற கருத்தை வலியுறத்தவில்லை என்று மேலே பார்த்தோம்.

ஜமாஅத்துல் உலமா சபையால் இந்த தலைப்பின் கீழ் வெளியிடப்பட்ட ஆக்கத்தின் ஆரம்பத்தில் நாற்காலியில் தொழுவது கூடாது, அது கீழ்க்காணும் விஷயங்களால் தவறானது என்று கூறியிருந்தார்கள். அந்தப் பட்டியலைத் தங்கள் பார்வைக்குத் தருகிறோம்.

  1. குர்ஆனுக்கு மாற்றமானது.
  2. ஹதீஸுக்கு மாற்றமானது.
  3. உலமாக்களின் ஃபத்வாக்களுக்கு மாற்றமானது.
  4. தொழுகையின் அசலான தன்மைக்கு மாற்றமானது.
  5. யூதர்கள், கிறிஸ்தவர்களின் சூழ்ச்சியாகும்.
  6. 25 வருடங்களுக்குப் பிறகு பள்ளிகளை கிறிஸ்தவ ஆலயங்களைப் போன்று மாற்றுவதற்கான சூழ்ச்சியாகும்.

இதில் குர்ஆனுக்கும் ஹதீசுக்கும் மாற்றமானது என்ற காரணங்களுக்கு அவர்கள் எடுத்துக்காட்டிய எந்த ஆதாரமும் நாற்காலியில் அமர்ந்து தொழுவதற்குத் தடை என்ற கருத்தைத் தரவில்லை என்று பார்த்தோம்.

இந்த இரு காரணங்களைத் தவிர வேறெதுவும் மார்க்க ஆதாரங்களாக ஆகாது.

மேற்படி ஆறு காரணங்களில் 3வது காரணமான உலமாக்களின் ஃபத்வாவுக்கு மாற்றமானது என்று கூறுகிறார்கள்.

அந்த உலமாக்களின் ஃபத்வாக்கள் என்று அவர்கள் குறிப்பிட்ட விஷயங்களும் மார்க்க ஆதாரம் எதுவுமின்றி இருப்பதுடன், இவர்கள் சொல்லும் வாதத்திற்கே மாற்றமாகவும் உள்ளது. அவற்றை இப்போது பார்ப்போம்.

  1. நிபந்தனைகளோடு கூடும் என்று அனுமதி அளித்தோம் என்றால் நாளடைவில் பொது மக்கள் நிபந்தனைகளை மறந்து விட்டு வெறும் கூடும் என்கிற விஷயத்தை மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். இது அனுபவப்பூர்வமான விஷயமாகும் என்று இமாததுல் முஃப்தியீன் என்ற புத்தகத்திலிருந்து ஒரு கருத்தை எடுத்து வைத்துள்ளார்கள்.

மார்க்கமே பல விஷயத்திற்கு நிபந்தனைகளிட்டு சலுகைகள் வழங்குகிறது. அதைத் தடுக்கும் விதமாக இந்தக் கருத்துள்ளது.

உதாரணமாக, உளூவுக்குப் பகரமாக சில நிபந்தனைகளுடன் தயம்மும் என்ற சலுகையை மார்க்கம் அனுமதிக்கிறது.

மேற்படி கருத்துப்படி தயம்முமை இவர்கள் மறுப்பார்களா?

மார்க்கம் இலகுவானதாகவுள்ளது. அந்த மார்க்கத்தை தேவையற்ற கருத்துக்களையும் பேணுதல் என்ற அடிப்படையில் கூறி கடினமாக்குகிறார்கள். இறைவனை மீறி இவ்வாறு செய்வது பேணுதலல்ல. அதிகபிரசங்கித்தனம் ஆகும்.

  1. நாற்காலியில் கால்களைத் தொங்க விட்டு தொழுவதற்காக அமருவதும் ஸஜ்தா செய்வதற்காக டேபிளின் மீது தலைகுனிவதும் கூடாது. ஆனால் பூமியில் அமர்வதற்கோ, ஸஜ்தா செய்வதற்கோ முற்றிலும் முடியாது என்கிற போது அனுமதி உண்டு. பூமியில் ஸஜ்தா செய்வதற்கு அறவே முடியாத நிலையில் பூமியில் அமர்ந்து ஒரு ஜானை விட உயரமில்லாத ஒரு பொருளின் மீது ஸஜ்தா செய்வது கூடும். (ஹஜ்ரத் மொவ்லானா முப்தி கிஃபாயதுல்லாஹ் சாஹிப்-ரஹ்.நூல். கிஃபாயதுல் முஃப்தி3/400) கேள்வி எண் 1393) என்ற இந்த ஃபத்வாவையும் குறிப்பிடுகிறார்கள்.

ஒரு ஜானளவு உயரம் மட்டும் கூடும் என்று எங்கிருந்து எடுத்தார்கள்? இதற்கு முந்தைய ஃபத்வா அடிப்படையில் இந்த நிபந்தனையை மக்கள் விட்டுவிட மாட்டார்களா?

  1. ஒரு நாற்காலியில் அமர்ந்து மற்றொரு நாற்காலியின் மீது ஸஜ்தா செய்தால் தொழுகை கூடிவிடும். எனினும் நிபந்தனை என்னவெனில் இரு முழங்கால்களையும் நாற்காலியின் மீது வைக்கவேண்டும். அவ்வாறு வைக்கவில்லை எனில் தொழுகை கூடாது. திரும்பத் தொழுவது அவசியமாகும். (அஹ்ஸனுல் ஃபத்வா 4/51)

நாற்காலியில் தொழுவது உயரமாகவுள்ளது. அது பணிவிற்கு எதிரானதாம்! நாற்காலியில் அமர்ந்து மற்றொரு நாற்காலியில் காலை வைப்பது பணிவிற்கு எதிரானது இல்லையாம்! என்ன ஒரு விந்தையான ஃபத்வா?

இறை ஆதாரமின்றி மனிதர்களை ஆதாரமாக்கினால் இப்படித்தான் ‘கூடும், ஆனால் கூடாது’ என்று குழப்பத்துடன் மார்க்கத் தீர்ப்புகள் வழங்க நேரிடும்.

இப்படி எவ்வித ஆதாரமுமின்றி தங்கள் மார்க்கத் தீர்ப்பை ஜமாஅத்துல் சபையின் 350 உலமாக்களும் சேர்ந்து வழங்கியுள்ளார்கள்!

இது தவறானது என்பதற்குக் கடைசியில் அவர்கள் மேலதிகமாகக் குறிப்பிடும் காரணங்களில் ஸஹாபாக்கள், இமாம்கள் என்று துவங்கி 1990 வரை தரையில்தான் அமர்ந்து தொழுதார்கள். அவர்களிடம் நாற்காலி இருந்தும் இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதனால் நாம் நாற்காலியில் அமர்ந்து தொழக்கூடாது என்று கூறுகிறார்கள்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வாகனத்தின் அமர்ந்ததே நாம் நாற்காலி, வாகனம் போன்ற விஷயங்களில் அமர்ந்து தொழுவது கூடும் என்பதற்குப் போதுமான ஆதாரமாக இருக்கும் போது உலமாக்கள் இதுபற்றி எதுவும் கூறவில்லை என்பதால் இது தடுக்கப்பட்டது என்றால் நபியை விட ஏனைய மனிதர்களை இவர்கள் உயர்த்திப் பிடித்துள்ளார்கள் என்பதையே இது காட்டுகிறது.

இவர்கள் சொல்வது போல ஸஹாபாக்கள், இமாம்கள் என்று துவங்கி 1990 வரையுள்ள அனைவரும் இதுகுறித்து பேசவில்லை என்பதால் இவர்கள் அதைத் தடுக்கிறார்கள் என்று சிந்திப்பதை விட அவர்கள் அனைவரும் இதை ஒரு பிரச்சனையாகவே கருதவில்லை அதனால்தான் பேசவில்லை என்று சிந்திப்பதுதானே அறிவிற்கு நெருக்கமாகவுள்ளது.

மாற்று மதக் கலாச்சாரத்திற்கு ஒப்பானதா?

யூத கிறித்தவர்களின் வழிபாட்டுக்கு ஒப்பாவதால் நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது என்கிறார்கள்.

மார்க்கத்தில் நமக்கு சொல்லித் தரப்பட்ட முறையை விட்டுவிட்டு அவர்களின் முறையைப் பின்பற்றினால்தான் அவர்களுக்கு ஒப்பாக நடந்ததாக ஆகும். இது மார்க்கத்தின் பொதுவான அடிப்படை.

அவ்வாறில்லாமல் நமக்குச் சொல்லித் தரப்பட்ட முறையைப் போல் அவர்களும் செய்கிறார்கள் எனில் அது அவர்களுக்கு ஒப்பாக நடந்ததாக ஆகாது.

ஒவ்வொரு விஷயத்தையும் இப்படி ஒத்துப்பார்த்து அவர்களுக்கு ஒப்பாகிறது, இவர்களுக்கு ஒப்பாகிறது என்றால் தவாஃப், ஸஜ்தா, குர்பானி என்று எந்த வழிபாட்டையும் நாம செய்ய இயலாது.

ஏனெனில், நாம் கஅபா ஆலயத்தைச் சுற்றி வருகிறோம். அவர்கள் தங்கள் கோயிலை சுற்றி வருகிறார்கள். அதனால் அது மாற்றுமதக் கலாச்சாரத்திற்கு ஒப்பானது என்று தங்கள் ஆதாரமற்ற சிந்தனையை மார்க்கத்தில் புகுத்தி பல வழிபாடுகளை அவர்கள் மறுக்க நேரிடும்.

இந்த நிலை மிகப்பெரிய வழிகேட்டிற்கே அழைத்துச் செல்லும்.

இயலாமல் அமர்ந்து தொழுபவர்கள் கவனிக்க வேண்டியவை:

நாற்காலியில் அமர்ந்து தொழக் கூடாது என்ற இந்த ஃபத்வாவில், அது கூடாது என்பதற்குச் சொல்லும் காரணங்களில் இரு காரணங்கள் கவனிக்கத்தக்கதாக உள்ளது.

ஆனால், அந்தக் காரணங்களை மட்டும் செய்ய வேண்டாம் என்று சொல்லலாமே தவிர ஆதாரமின்றி நாற்காலியில் அமர்ந்து தொழுவதே கூடாது என்று சொல்லக் கூடாது.

அந்த காரணங்கள்,

  1. ஸஃப்புகளில் இடையூறு ஏற்படுகிறது.
  2. பின்னால் தொழுபவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

இந்த இரு காரணங்களும் அமர்ந்து தொழுபவர்கள் கவனிக்க வேண்டியவையாக உள்ளது.

சிலர் நாற்காலியைப் போட்டுவிட்டு நிலைக்கு நின்றுவிடுகிறார்கள். ருகூவு ஸஜ்தாவிற்கு மட்டும் அமர்கிறார்கள்.

அந்த சமயத்தில் ஸஃப்பில் நேராக நாற்காலியை போட்டுவிட்டால் அமரும் போது ஸஃப்போடு இணைந்துவிடுகிறார்கள். நிற்கும் போது மற்றவர்களை விட முந்தி நிற்கிறார்கள்.

அல்லது தாங்கள் நிற்பதற்கு தகுந்தவாறு பின்னால் தள்ளி நாற்காலியை போடுகிறார்கள் எனில் அது பின்னால் தொழுபவருக்கு இடையூறாக அமையும்.

அதனால் இதுபோன்ற சூழலில் நிலையில் நின்றும், ருகூவு ஸஜ்தாவிற்கு மட்டும் நாற்காலியில் அமர்ந்தும்  தொழுபவர்கள், தாங்கள் நிலையில் இருக்கும் போது நாற்காலியைப் பின்னால் தள்ளிப் போட்டு ஸஃப்போடு இணைந்தும்  ருகூவு மற்றும் ஸஜ்தாவிற்கு அமரும் போது பின்னால் உள்ளவருக்கு இடையூறு அளிக்காதவாறு முன்னால் இழுத்துக் கொண்டும் அமரலாம்.

இவ்வாறு தனது தொழுகையின் வரிசையை சக்திக்குட்பட்டளவு சரியாக அமைத்துக் கொண்டால் தொழுகை வரிசையில் எந்த பிரச்சனையும் வராது. அல்லது முழுவதும் அமர்ந்து தொழுதுவிடலாம்.

இதைக் கவனித்து அமர்ந்து தொழுபவர்கள் தங்கள் தொழுகைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

மார்க்கத்தைக் கடினமாக்க வேண்டாம்

ஒரு விஷயத்தை மார்க்கம் வலியுறுத்துகிறது என்றால் அதைப் பின்பற்ற வேண்டும்.

மனிதர்களின் கருத்துக்களை ஆதாரமாக் கினால் அது தேவையற்ற சங்கடங்களாகவும், மார்க்கத்தைக் கடினமாக்குவதாகவும் மிகப் பெரும் வழிகேடாகவுமே அமையும் என்பதைப் பின்வரும் வசனங்கள் எச்சரிக்கின்றன.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதைப் பின்பற்றுங்கள்! அவனையன்றி பொறுப்பாளர்களைப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள். 

அல்குர்ஆன் 7:3

இம்மார்க்கத்தில் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் அவன் ஏற்படுத்தவில்லை.

அல்குர்ஆன் 22:78

அல்லாஹ் அல்லாதவர்களை இணை(கடவுள்)களாக ஏற்படுத்திக் கொண்டு அல்லாஹ்வை நேசிப்பது போல் அவர்களை நேசிப்பவர்களும் மக்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டவர்களோ அல்லாஹ்வை  மிக அதிகமாக நேசிப்பவர்கள். அநியாயக் காரர்கள் வேதனையைக்  காணும் போது (உள்ள நிலையை)   அறிவார்களானால் அனைத்து ஆற்றலும் அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும் அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதையும் (உணர்ந்து கொள்வார்கள்.)

வேதனையைக் காணும் போது,  பின்பற்றப்பட்டவர்கள்  பின்பற்றியவர்களை விட்டும் அந்நேரத்தில் விலகிக் கொள்வார்கள். அவர்களுக்கிடையே இருந்த தொடர்புகளும் முறிந்துவிடும்.

“(உலகிற்கு) திரும்பும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்குமானால் அவர்கள் எங்களை விட்டு விலகியதைப் போன்று நாங்களும் அவர்களை விட்டு விலகிக் கொள்வோமே!” என்று பின்பற்றியோர் கூறுவார்கள். இவ்வாறுதான் அவர்களது செயல்களை அவர்களுக்கு துக்கமளிப்பவையாக அல்லாஹ் காட்டுவான்.  அவர்கள் நரகத்திலிருந்து வெளியேறுவோர் அல்ல!

அல்குர்ஆன் 2: 165 -167

இதைக் கவனத்தில் கொண்டு ஆதாரத்துடன் மார்க்கத் தீர்ப்புகள் வழங்க வேண்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed