நாய் வளர்ப்பு பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?

வேட்டையாடுவதற்கும், பாதுகாப்புக்காகவும் மட்டும் நாய்களை வளர்க்க இஸ்லாத்தில் அனுமதியுள்ளது.

இது போன்ற தேவைகளின்றி செல்லப் பிராணியாக நாய்களை வளர்க்கக் கூடாது.

இதைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

எவர் நாய் வைத்திருக்கின்றாரோ அவரது நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (நன்மைகள்) குறைந்து போய் விடும்; விவசாயப் பண்ணையையோ, கால்நடைகளையோ (திருடு போய் விடாமல்) பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 2322

சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அஸ்த் ஷனூஆ குலத்தைச் சேர்ந்த சுஃப்யான் பின் அபீ ஸுஹைர் (ரலி) அவர்கள் என்னிடம், விவசாயப் பண்ணையையோ, கால்நடைகளையோ பாதுகாக்கும் தேவை எதுவும் இன்றி எவர் நாய் வைத்திருக்கின்றாரோ அவரது நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (ஊதியம்) குறைந்து விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்.

நூல் : புகாரி 2323

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நாயும், உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் வானவர்கள் நுழைய மாட்டார்கள்.

அறிவிப்பவர் : அபூ தல்ஹா (ரலி)
நூல் : புகாரி 3225

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு (குறிப்பிட்ட) நேரத்தில் வருவதாக வாக்களித்திருந்தார்கள். ஆனால், அந்த நேரம் வந்தும் ஜிப்ரீல் வரவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் குச்சியொன்று இருந்தது. அதை அவர்கள் தூக்கியெறிந்துவிட்டு, அல்லாஹ் தனது வாக்குறுதிக்கு மாறு செய்ய மாட்டான். அவனுடைய தூதர்களும் வாக்குறுதிக்கு மாறு செய்ய மாட்டார்கள் என்று கூறினார்கள்.

பின்னர் திரும்பிப் பார்த்தபோது, தமது கட்டிலுக்குக் கீழே ஒரு நாய்க்குட்டி இருப்பதைக் கண்டார்கள். உடனே ஆயிஷா! இந்த நாய் இங்கு எப்போது நுழைந்தது? என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தெரியவில்லை என்றேன். உடனே அதை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அது அப்புறப்படுத்தப்பட்ட பின் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள். நீங்கள் வருவதாகச் சொன்னீர்கள். உங்களுக்காக நான் (எதிர்பார்த்து) அமர்ந்திருந்தேன்.

ஆனால், நீங்கள் வரவில்லையே (ஏன்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், உங்கள் வீட்டினுள்ளிருந்த நாயே எனக்குத் தடையாக இருந்தது. (வானவர்களாகிய) நாங்கள், நாயும் உருவப் படமும் உள்ள வீட்டிற்குள் நுழைய மாட்டோம் என்று சொன்னார்கள்.

நூல் : முஸ்லிம் 3928

பாதுகாப்பிற்காக நாய்களை வளர்க்கலாம் என்று மேற்கண்ட ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு வளர்க்கும் போது அந்த நாய்களைத் தொட வேண்டிய நிலை அவசியம் ஏற்பட்டால் தொடுவது தவறல்ல.

நாயின் எச்சில் கடுமையான அசுத்தம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே அதனுடைய எச்சில் நம்மீது படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளிவாசலுக்குள் நாய்கள் வந்து கொண்டும், போய்க்கொண்டும் இருந்தன. இதற்காக மக்கள் எதையும் தெளிப்பவர்களாக இருக்கவில்லை.

நூல் : புகாரி 174

அப்துல்லாஹ் பின் அல்முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வேட்டை நாய்களுக்கும் கால்நடைகளின் பாதுகாப்பிற்காக வைத்திருக்கும் நாய்களுக்கு மட்டும் அனுமதியளித்தார்கள். மேலும் பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் ஏழு தடவை (தண்ணீரால்) கழுவிக் கொள்ளுங்கள். எட்டாவது தடவை மண்ணிட்டுக் கழுவுங்கள் என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 473

நாய்கள் மூலம் வேட்டையாடும் போது அது தன் வாயால் கவ்வி பிராணிகளைப் பிடித்து வந்தால் அந்தப் பிராணியை நாம் உண்ணலாம் என்று அல்லாஹ் அனுமதி அளித்துள்ளான்.

இதுவும் வேட்டைக்காக நாய் வளர்க்கலாம் என்பதை விளக்குகிறது.

தமக்கு அனுமதிக்கப்பட்டவை யாவை? என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்.தூய்மையானவைகளும், வேட்டையாடும் பிராணிகளில் எவற்றுக்கு நீங்கள் பயிற்சியளித்து அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்தவற்றைக் கற்றுக் கொடுக்கிறீர்களோ அவை (வேட்டையாடியவை)களும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன எனக் கூறுவீராக! அவை உங்களுக்காகப் பிடித்துக் கொண்டு வந்ததை உண்ணுங்கள்! (அதை அனுப்பும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் விரைந்து கணக்கெடுப்பவன்.

திருக்குர்ஆன் 5:4

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed