நான் சில துஆக்களை ஓதி வருகின்றேன். அந்த துஆக்களில் இறைவனுக்கு இணை கற்பிக்கும் சொல் எதுவும் இல்லை. இது போன்ற துஆக்களை ஓதி வரலாமா❓ விளக்கம் தரவும்.

நம்முடைய தேவைகளைக் கேட்கும் பிரார்த்தனைகளைப் பொறுத்த வரை குறிப்பிட்ட வார்த்தைகளைக் கொண்டு தான் கேட்க வேண்டும் என்பதில்லை.

நமக்குத் தெரிந்த மொழியில், தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு கேட்கலாம். இதற்கு மார்க்கத்தில் வரையறை எதுவும் இல்லை.

ஆயினும் சில குறிப்பிட்ட வார்த்தைகளைக் கொண்டு பிரார்த்திப்பதை நன்மை என்று கருதியோ, அல்லது இன்ன தேவை நிறைவேற இந்தப் பிரார்த்தனையைச் செய்ய வேண்டும் என்று எண்ணியோ பிரார்த்திப்பதாக இருந்தால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ கற்றுத் தந்திருக்க வேண்டும்.

இந்தப் பெரியார் கற்றுத் தந்தார்; அந்த ஷைகு கற்றுத் தந்தார்; இதைச் செய்தால் கடன் தொல்லை நீங்கும், நோய் நிவாரணம் கிடைக்கும் என்றெல்லாம் பல்வேறு பிரார்த்தனைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. இதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.

இந்தப் பிரார்த்தனைகளில் இணை வைக்கும் வார்த்தைகள் எதுவும் இல்லாவிட்டாலும் இவற்றை ஓதக் கூடாது.

ஏனெனில் மார்க்க விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும் அதிகாரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உரியது. அவர்கள் கற்றுத் தராத ஒன்றை மார்க்கம் என்று கருதிச் செய்வது தான் பித்அத் ஆகும்.

நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்து கொள்.

பின்னர் உனது வலது கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர், யா அல்லாஹ்! நான் எனது முகத்தை உன்னிடத்தில் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கின்றேன். உன்னை விட்டுத் தப்பிச் செல்லவும் உன்னை விட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உனது வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உனது நபியையும் நான் நம்பினேன் என்ற பிரார்த்தனையை நீ செய்து கொள்.

(இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீ தூய்மையானவனாய் ஆகி விடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உனது (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன். அப்போது நீ அனுப்பிய உனது நபியையும் நம்பினேன் என்று சொல்வதற்குப் பதிலாக உனது ரசூலையும் நம்பினேன் என்று கூறி விட்டேன்.

உடனே நபி (ஸல்) அவர்கள், “இல்லை. நீ அனுப்பிய உனது நபியை நம்பினேன் என்று கூறுவீராக” என எனக்குத் திருத்திக் கொடுத்தார்கள்.

அறிவிப்பவர்: பராஃ இப்னு ஆஸிப் (ரலி)
நூல்: புகாரி 247

இந்த ஹதீஸில், நபிய்யிக்க என்பதற்குப் பதிலாக ரசூலிக்க என்று நபித்தோழர் கூறி விட்டார். இரண்டும் ஒரே கருத்தைத் தரக் கூடிய சொல்லாக இருந்தாலும், நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்ததற்கு மாற்றமாகச் சொல்வதை அவர்கள் அங்கீகரிக்கவில்லை.

நமது தேவைகளைக் கேட்கும் பிரார்த்தனைகளைத் தவிர இதர பிரார்த்தனைகளை, குறிப்பிட்ட வார்த்தைகளைக் கொண்டு சுயமாக உருவாக்கவோ, அல்லது மற்றவர்கள் உருவாக்கியதை நன்மை நாடிச் செய்யவோ மார்க்கத்தில் அனுமதியில்லை என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
—————-
ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed