ஸகாத் நிதியை நாடோடிகளுக்கும் செலவிடலாம் என்று இவ்வசனத்தில் (9:60) கூறப்பட்டுள்ளது.
மேலும் பல வசனங்களிலும் (2:177, 2:215, 4:36, 8:41, 17:26, 30:38, 59:7) நாடோடிகளுக்கு தானதர்மங்கள் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
நாடோடிகள் என்று தமிழாக்கம் செய்த இடத்தில் ‘இப்னுஸ் ஸபீல்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல்லின் நேரடிப் பொருள் ‘பாதையின் மகன்’ என்பதாகும்.
ஒருவனிடம் ஒரு செயல் அதிக அளவில் காணப்படும்போது அச்செயலுடன் மகன் என்பதைச் சேர்த்துக் கூறுவது அரபுகளின் வழக்கம்.
எப்போது பார்த்தாலும் போரில் பங்கெடுப்பவன் ‘போரின் மகன்’ என்று குறிப்பிடப்படுவது வழக்கம். எப்போது பார்த்தாலும் ஊர் ஊராகச் சென்று கொண்டிருப்பவன் ‘பாதையின் மகன்’ என்று குறிப்பிடப்படுவான்.
சாதாரணமாகப் பயணம் செய்பவர்கள் இச்சொல்லால் குறிக்கப்பட மாட்டார்கள். பயணமே வாழ்க்கையாகக் கொண்டவர்கள் தான் இச்சொல்லால் குறிப்பிடப்படுவர். எனவே நாடோடிகள் என்பது இச்சொல்லுக்கு நெருக்கமான சொல் எனலாம்.
வீடு வாசல் ஏதுமில்லாமல் ஊர் ஊராகச் சுற்றுவோருக்கு ஸகாத் நிதியை வழங்கி அவர்களை நிலையாக இருக்கச் செய்வதற்கு ஸகாத் நிதியைச் செலவிடலாம் என்பது இதன் கருத்தாகும்.
இச்சொல்லுக்கு பிரயாணி, வழிப்போக்கன் என்று பலரும் பொருள் கொண்டுள்ளனர். பயணத்தில் சென்று அனைத்தையும் இழந்து விட்டு சொந்த ஊருக்குச் செல்ல முடியாதவன் என்று இதற்கு விளக்கம் தருகிறார்கள்.
இவர்கள் வாதப்படி பயணிகள் என்ற அர்த்தம் மட்டுமே இச்சொல்லுக்கு உண்டு. அனைத்தையும் இழந்து சொந்த ஊர் செல்ல இயலாதவன் என்பது இச்சொல்லில் இல்லாத – கற்பனை செய்யப்பட்ட விளக்கமாகும்.
மேலும் சாதாரணப் பயணியைக் குறிக்க வேறு சொல் உள்ளது. பாதையின் மகன் என்பது எப்போது பார்த்தாலும் பயணத்தில் இருக்கும் நாடோடியையே குறிக்கும். நாடோடி என்று பொருள் கொண்டால் நாடோடியாக இருப்பதே ஸகாத் பெறுவதற்கான தகுதியாகும் என்பது ஏற்கத்தக்கதாகவும் உள்ளது.
பயணத்தில் சென்று அனைத்தையும் இழந்தவன் என்பவன் ஃபகீர் – தேவையுள்ளவன் என்ற வகையில் அடங்கி விடுவான். இத்தகையோரை உள்ளடக்க ஏழை என்றும், தேவையுள்ளவன் என்றும் இரண்டு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் பாதையின் மைந்தன் என்பது பயணிகளைக் குறிக்காது.