நல்ல நேரம் கெட்ட நேரம் பார்ப்பது

காலங்களோடும், நேரங்களோடும் தான் மனிதனின் வாழ்க்கை பின்னிப் பிணைந்துள்ளது. உண்மை நிலை இவ்வாறு இருக்க காலத்தை நல்லது கெட்டது என தரம் பிரிப்பது வாழ்க்கைக்கு உகந்தது அல்ல. திருமணம், தொழில் துவங்குதல், புது வீட்டிற்குச் செல்லுதல் என மார்க்கம் அனுமதித்த காரியங்களிலும் மற்றும் பூப்பெய்தல், பெயர் சூட்டுதல், குழந்தைப்பேறுக்கு அனுப்புதல் போன்ற மார்க்கம் அனுமதிக்காத காரியங்களைத் துவங்கும் முன்பாக நல்ல நேரம், கெட்ட நேரம் பார்க்கும் வழக்கம் பெரும்பான்மையானோரிடம் இருக்கிறது.

உலகில் நிகழக்கூடிய காரியங்கள் அனைத்தும் ஆட்களைப் பொறுத்தே அமைகின்றன நாட்களைப் பொறுத்து அல்ல. காலம் என்பது மனிதன் நாட்களை கணக்கிட்டு கொள்வதற்கான ஒரு வழிகாட்டி தான். வெற்றி தோல்வியை, இன்ப துன்பத்தைத் தீர்மானிக்கும் இலக்கு அல்ல. இதை உணராமல் நம்மவர்கள் காலத்தைக் குறைகூறுகின்றனர். இதன் மூலம் இறைவனையே நோவினை செய்கின்றனர்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகின்றான். காலத்தின் கை சேதமே என்று அவன் கூறுகின்றான். ஆகவே உங்களில் ஒருவர் காலத்தின் கை சேதமே என்று கூற வேண்டாம். ஏனெனில் நானே காலம் (படைத்தவன்). அதில் இரவையும் பகலையும் நானே மாறி மாறி வரச்செய்கிறேன். நான் நாடினால் அவ்விரண்டையும் (மாறாமல்) பிடித்து (நிறுத்தி) விடுவேன்.

 நூல்: முஸ்லிம் 4521

ஒரு நாளில் குழந்தை பிறக்கிறது என்றால் அதே நாளில் அதன் தாய் மரணிக்கிறாள். இப்படி இறப்பும் பிறப்பும் ஒரே நேரத்தில் சங்கமிக்கும் அந்நாளை நாம் நல்ல நாள் என்று குறிப்பிடுவோமா? அல்லது கெட்ட நாள் என்று குறிப்பிடுவோமா? நாட்கள் நன்மை, தீமையைத் தீர்மானிக்காது என்பதற்கு இதுவே தகுந்த ஆதாரமாக இருக்கிறது.

இந்த நாளினால், இந்தப் பொருளினால் தான் நல்லது நடக்கும் என்று ஒருவர் நம்பினால் அவர் இறை நம்பிக்கையாளர் இல்லை என ஏந்தல் நபி எச்சரித்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்கு சுபுஹ் தொழுகை தொழுவித்தார்கள் அன்றிரவு மழை பெய்திருந்தது தொழுது முடித்ததும் மக்களை நோக்கி ‘உங்கள் இறைவன் என்ன கூறுகிறான் என்பதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். அல்லாஹ்வும் அவன் தூதருமே இதைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் என நாங்கள் கூறினோம். 

என்னை விசுவாசிக்கக் கூடியவர்கள், என்னை நிராகரிக்கக் கூடியவர்கள் என என் அடியார்கள் இரண்டு பிரிவுகளாக ஆனார்கள். ‘அல்லாஹ்வின் கருணையினாலும், அவனது அருட்கொடையினாலும் நமக்கு மழை பொழிந்தது’ எனக் கூறுபவர்கள் என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவர்கள் ஆவர். ‘இந்த நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது’ எனக் கூறுபவர்கள் என்னை நிராகரித்து நட்சத்திரத்தை விசுவாசிக்கக் கூடியவர்கள் ஆவர் (என்று இறைவன் கூறுவதாக நபியவர்கள் கூறினார்கள்.)

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித்

நூல்: புஹாரி 846

நல்ல நேரம் பார்த்து ஆரம்பிக்கப்பட்ட வியாபாரங்கள், திருமணங்களில் பலவும் தோல்வியிலும், மனக்கசப்பிலும் முடிவடைவதையும், மக்களால் ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் செய்யப்படும் காரியங்கள் அமோக வரவேற்பை பெறுவதையும் நாம் பார்க்கலாம். இதற்கு அன்னை ஆயிஷாவின் வாழ்க்கை ஓர் முன்மாதிரியாகவுள்ளது.

அறியாமைக் காலத்தில் ஷவ்வால் மாதம் பீடை மாதமாகவும், துர்க்குறியாகவும் கருதப்பட்டது. அம்மாதத்தில் மக்கள் எவ்வித நற்காரியமும் செய்ய மாட்டார்கள். மேலும் அம்மாதத்தில் திருமணம் செய்தால் நிலைக்காது என்றும் நம்பி இருந்தனர். இந்த அறியாமையை அழிப்பதற்க்காகவே நபி (ஸல்) அவர்கள் அம்மாதத்தில் ஆயிஷாவைத் திருமணம் செய்தார்கள் அனைவரும் மெச்சும் அளவிற்கு வாழ்ந்தார்கள். இதைப் பற்றி அன்னை ஆயிஷா அவர்களே கூறுகிறார்கள்.

ஆயிஷா (ரலி) கூறியதாவது: 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை ஷவ்வால் மாதத்தில் மணந்து கொண்டார்கள்: ஷவ்வால் மாத்திலேயே என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் அவர்களுடன் என்னை விட நெருக்கத்திற்குரியவர் யார்?   

நூல் : முஸ்லிம் 2782

மனிதனின் வாழ்வில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் இறை சித்தாந்தத்தின் அடிப்படையில் தான். இதில் காலத்திற்கும், சகுனங்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. இவ்வாறு நம்புவது தான் இறை நம்பிக்கையாகும். இதைப் போன்ற இன்னும் ஏராளமான மடமைகள் நமது பெண்களிடம் இன்றளவும் காணப்படுகிறது. ஆனால் நம் இஸ்லாம் மார்க்கமோ மூடநம்பிக்கைகள், சமூகத்தீமைகள், அனாச்சாரங்கள் என்று எதையும் விடாமல் அனைத்தையும் அழித்து ஒழிக்கின்ற சமூகநலன் காக்கும் சுமூக மார்க்கமாகவும் தலைசிறந்த கோட்பாடாகவும் திகழ்கிறது.

எந்தவொரு பிரச்சனைக்கும், சிக்கலுக்கும் நிறைவான, நிலையான தீர்வை இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே வழங்குகிறது. தனிமனிதனும் சமூகமும் சீரும் சிறப்பும் பெற்று எக்காலத்திலும் நலமுடன் வாழ இதன் வழிகாட்டுதல் தான் உகந்தவை எல்லா வகையிலும் மேன்மை மிக்கவை. இத்தகைய சிறப்புமிக்க மார்க்கத்தில் வாழக்கூடிய நாம் அறியாமைக்குத் தாழிட்டுவிட்டு அறிவிற்கு வேலை கொடுப்போம், இஸ்லாமியர்களாகவே வாழ்ந்து இஸ்லாமியர்களாகவே மரணிப்போம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed