நல்லோர்களின் மண்ணறை வாழ்க்கை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும். மரணம் எப்போதும் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அவ்வாறு வருவதற்கு முன் நாம் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். மரணத்தருவாயில் இருந்து நடக்கும் நிகழ்வுகளை நபி (ஸல்) அவர்கள் மிக அழகிய முறையில் விளக்கியுள்ளார்கள். பின் வருமாறு . . .

//சந்தோஷமான செய்தி கூறப்படும்//

நல்லவர்கள் மரணிக்கும் போது வானவர்கள் சந்தோஷமான வார்த்தைகளை அவர்களிடம் கூறுவார்கள். மரியாதையுடன் நடத்தப்படுவார்கள். சொர்க்கம் பரிசாக கிடைக்கப் போகிறது என்ற சுபச் செய்தியை மரணிக்கும் தறுவாயில் வானவர்கள் கூறுவார்கள். எனவே தனது நிலை என்னவாகுமோ என்ற கவலை நல்லவர்களுக்கு இருக்காது. அவர்கள் நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் மண்ணறை வாழ்க்கைக்குள் பிரவேசிப்பார்கள்.

அமைதியுற்ற உயிரே! திருப்தியோடும் (இறைவனால்) திருப்தி கொள்ளப்பட்டும் உனது இறைவனிடம் செல்வாயாக! எனது அடியார்களில் சேர்ந்து கொள்வாயாக! எனது சொர்க்கத்தில் நுழைவாயாக! (எனக் கூறப்படும்)
அல்குர்ஆன் (89 : 27)

//நற்செய்தியை பெறுதல்//

”எங்கள் இறைவன் அல்லாஹ்வே” என்று கூறி பின்னர் உறுதியாகவும் இருந்தோரிடம் வானவர்கள் இறங்கி ”அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் பற்றிய நற்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்!” எனக் கூறுவார்கள்.
இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நாங்கள் உங்கள் உதவியாளர்கள். நிகரற்ற அன்புடைய மன்னிப்பவனின் விருந்தாக நீங்கள் ஆசைப்படுபவை உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் கேட்பதும் உங்களுக்கு உண்டு என்றும் கூறுவர்.
அல்குர்ஆன் (41 : 30)

//நல்லவர் முந்துதல்! தீயவர் பிந்துதல்!!//

இன்பமான வாழ்வு உறுதி செய்யப்பட்டுவிட்டதால் விரைவாக தன்னை அடக்கம் செய்யுமாறு நல்லவர் விரும்புவார். ஆனால் தீயவரோ தனக்குக் கிடைத்த கொடூரமான வாழ்வை நினைத்து தன்னை மண்ணறைக்குள் அடக்கிவிட வேண்டாம் என்று அலறிக் கொண்டிருப்பார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பிரேதம் (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும் போது, அந்தப் பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருப்பின், ”என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்” என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருப்பின், ”கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?” என்று கூறும். இவ்வாறு கூறப்படும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதை செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ(ரலி), நூல் : புகாரி (1316)

//அல்லாஹ்வை சந்திக்க விரும்புபவரும், வெறுப்பவரும்//

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான்.

யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்” என்று சொன்னார்கள். அப்போது நான், ”அல்லாஹ்வின் தூதரே! மரணத்தை வெறுப்பதையா (நீங்கள் சொல்கிறீர்கள்)? அவ்வாறாயின், (மனிதர்களாகிய) நாங்கள் அனைவருமே மரணத்தை வெறுக்கத்தானே செய்வோம்?” என்று கேட்டேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”(அல்லாஹ்வைச் சந்திப்பது என்பதற்குப் பொருள்) அதுவல்ல. மாறாக, இறை நம்பிக்கையாளருக்கு, (மரண வேளையில்) இறைவன் கருணை புரியவிருப்பதாகவும் அவரைப் பற்றி அல்லாஹ் திருப்தி அடைந்திருப்பதாகவும் அவருக்குச் சொர்க்கத்தை வழங்கவிருப்பதாகவும் நற்செய்தி கூறப்படும்.

அப்போது அவர் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புவார், அல்லாஹ்வும் அவரைச் சந்திக்க விரும்புவான். இறை மறுப்பாளருக்கு, (மரணவேளை நெருங்கும் போது) அல்லாஹ் வழங்கவிருக்கும் வேதனை குறித்தும் அவர் மீது அல்லாஹ் கோபம் கொண்டிருப்பது குறித்தும் அறிவிக்கப்படும். அப்போது அவர் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுப்பார். அல்லாஹ்வும் அவரைச் சந்திப்பதை வெறுப்பான்” என்று (விளக்கம்) சொன்னார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லீம் (5208

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed