நல்லறங்களில் நீடிப்போம்

நம்பிக்கையின் அம்சமாக ஏராளமான நற்காரியங்கள், நற்பண்புகள் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளன. அவை அனைத்தும் மனித குலத்தின் நன்மைக்காக வழங்கப்பட்டவை. அவற்றுள் நமக்கு இயன்ற காரியங்களை இறைத்திருப்தியை இலக்காகக் கொண்டு இடைவிடாது செய்தல் வேண்டும்.

விடைபெறும் ஹஜ்ஜின் போது (நான் மக்காவிலிருந்த சமயம் எனக்கு ஏற்பட்ட ஒரு நோய்க்காக என்னை உடல்நலம் விசாரிக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அந்த நோயின் காரணத்தால் நான் மரணத்தை எதிர் நோக்கியிருந்தேன். அல்லாஹ்வின் தூதரே! (என் தோழர்கள் அனைவரும் மதீனாவுக்குச் சென்றுவிடுவார்கள்) நான் மட்டும் இங்கு (மக்காவில்) என் தோழர்களை விட்டுப் பின்தங்கியவனாக ஆகிவிடுவேனா?’’ என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் இங்கு இருந்த போதிலும் அல்லாஹ்வின் உவப்பை நாடி நல்லறங்கள் செய்து கொண்டே இருந்தால் உங்கள் தகுதியும் மேன்மையும் அதிகரித்துக் கொண்டேயிருக்கும்’’ எனக் கூறிவிட்டு, “உங்களை வைத்துச் சில கூட்டத்தார் நன்மை அடைவதற்காகவும் வேறுசிலர் துன்பம் அடைவதற்காகவும் நீங்கள் இங்கேயே தங்க வைக்கப்படலாம்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் (3349)

முஹாஜிர்களும்அன்சாரிகளும் மதீனாவைச் சுற்றிலும் அகழ்தோண்ட ஆரம்பித்தனர். அப்போது தம் முதுகுகளின் மீது மண் எடுத்துச்சென்ற வண்ணம் நாங்கள் வாழும் காலமெல்லாம் இஸ்லாத்தில் நீடித்திருப்போம் என முஹம்மத் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி வழங்கியுள்ளோம்’’ என்று (பாடியபடி) கூறிக்கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பதிலளிக்கும் விதத்தில் நபி (ஸல்) அவர்கள், “இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மை எதுவுமில்லை. எனவே, (மறுமையின் நன்மையைப் பெற்றுக்கொள்வதற்காக உழைக்கும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ அருள்வளம் புரிவாயாக!’’ என்று (பாடலிலேயே) கூறினார்கள். 

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புஹாரி (4100)

மற்றொரு அறிவிப்பில் (புஹாரி 2834), ‘‘நாங்கள் வாழும் காலமெல்லாம் இறைவழியில் அறப்போர் புரிந்து கொண்டிருப்போம்’ என்று முஹம்மத் (ஸல்) அவர்களிடம் உறுதி மொழி தந்துள்ளோம்’’  என்று (பாடியபடி) கூறியதாக உள்ளது.

மறுமையில் மகத்தான வெற்றியை விரும்பும் மக்கள் தங்களது கடமைகளைத் தவறாது கடைப்பிடிப்பதற்கும் மேலாக, தங்களால் முடிந்த சுன்னத்தான உபரியான காரியங்களையும் செய்துவர வேண்டும். அவை கூடுதல் குறைவாக இருப்பினும் அவ்வப்போது சுணக்கம் வந்தாலும் ஒரேயடியாக விட்டுவிடாமல் பக்குவமாகப் பின்பற்றி வருவது மிகவும் நல்லது; படைத்தவனுக்கு விருப்பமானது. இவ்வாறு தூய முறையில் செயல்புரிய வல்ல இறைவன் நமக்கு நல்லுதவி புரிவானாக!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *