நல்லதை மட்டும் பேசுவோம்!

தொழுகை, நோன்பு போன்ற இபாதத்களை செய்ய வேண்டிய முஸ்லிம்களிடம் இருக்க வேண்டிய ஒரு மிக முக்கிய பண்பு நல்ல பேச்சை பேசுவதாகும். எவ்வளவு வணக்க வழிபாடுகள் இருந்தாலும் ஒருவரிடம் தீய பேச்சுக்கள் இருந்தால், அவர் முஸ்லிமே அல்ல என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.

யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருக்கிறாரோ அவர் நல்லதைப் பேசட்டும், இல்லையானால் மெளனமாக இருக்கட்டும்.

நூல் : புகாரி 6018

மேலும் மற்றுமொரு ஹதீஸில், முஸ்லிம்களில் சிறந்தவர் யார் என நபிகள் நாயகத்திடம் வினவப்பட்ட போது, அவர்கள் யாருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் முஸ்லிம்கள் ஈடேற்றம் பெறுகிறார்களோ, அவர்தான் சிறந்தவர் என பதில் கூறினார்கள்

நூல் : புகாரி 11

அல்லாஹ் கூறுகிறான்

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்!

(அல்குர்ஆன் 33:70)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் தமது மூட்டுக்கள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தர்மம் செய்வது அவர்களின் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும். ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதுவுவதும் தர்மமாகும். அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தர்மமாகும். நல்ல (இனிய) சொல்லும் தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி (2989)

சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் காரியம்

நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! உங்களை நான் கண்டால் எனது உள்ளம் மகிழ்சியடைகிறது. எனது கண் குளிர்ச்சியடைகிறது. எனக்கு அனைத்து பொருட்களைப் பற்றியும் சொல்லுங்கள்” என்றேன். அதற்கு அவர்கள் “அனைத்தும் நீரிலிருந்து படைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள்.

எந்த காரியத்தை நான் செய்தால் சொர்க்கத்திற்குச் செல்வேனோ அப்படிப்பட்ட ஒரு காரியத்தை எனக்கு கற்றுக் கொடுங்கள்” என்று கூறினேன். “சலாத்தைப் பரப்பு. நல்ல பேச்சைப் பேசு. உறவுகளை இணைத்து வாழ். மக்கள் உறங்கும் போது இரவில் நின்று வணங்கு. சாந்தியுடன் சொர்க்கத்தில் நுழைவாய்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல் : அஹ்மத் (9996)

யாசிப்பவரிடமும் நல்லதை பேசு

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இனிய சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்).

அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி),

நூல் : புகாரி (6023)

சிரித்து போசலாம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் என்றொருவர் இருந்தார். அவர் ஹிமார் (கழுதை) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டு வந்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை சிரிக்க வைப்பார்.

அறிவிப்பவர்: உமர் (ரலி),

நூல்: புகாரி (6780)

நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருந்தீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்! அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹுத் தொழுத இடத்தி¬ருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்:  சிமாக் பின் ஹர்ப்,

நூல் : முஸ்லிம் (118)

அதிகமான பேச்சு கூடாது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெட்கமும், குறைவான பேச்சும் ஈமானுடைய அம்சமாகும். கெட்ட வார்த்தையும், அதிகமான பேச்சும் நயவஞ்சகத்தின் அம்சமாகும்.

அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி),

நூல் : திர்மிதி (1950)

மேற்கூறிய இறைவசனம் மற்றும் ஹதீஸ்களின் படி நல்லதை பேசி மரணிக்கிற நல்லடியார்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள்புரிவானாக!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed