நற்குணத்தில் உயர்ந்த  நபித்தோழியர்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த நபித்தோழியர்கள் மிக உயர்ந்த நற்குணங்களுக்கு சொந்தக்காரர்களாகத் திகழ்ந்துள்ளனர். அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களைச் சிந்திக்கும் எவரது கண்களிலும் கண்ணீர்த் துளிகள் பெருக்கெடுக்கும். அந்த அளவிற்கு இஸ்லாத்தினை உள்ளத்தில் கடுகளவும் சந்தேகம் இன்றி மிக உறுதியாகப் பின்பற்றியுள்ளனர். மறுமை நம்பிக்கை என்பதை வெறும் வாயளவில் மட்டும் இல்லாமல் செயலளவிலும் அந்த நம்பிக்கைக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியுள்ளனர்.

இறைச் செய்தியான குர்ஆன் மற்றும் சுன்னாவை மட்டும் பின்பற்றிய நபித்தோழியர்களை, அந்த அற்புத இஸ்லாம் எப்படிப்பட்ட உயர்ந்த நற்குணம் குடிகொண்டவர்களாக மாற்றியது என்பதற்குச் சில உண்மையான வரலாற்றுச் சான்றுகளைக் காண்போம்.

நீளமான கை கொண்ட அன்னை ஸைனப் (ரலி)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘உங்களது மரணத்திற்குப் பின் எங்களில் யார் முதலில் வந்து உங்களைச் சேர்வார்?’ எனக் கேட்டார். அதற்கு, ‘உங்களிள் கை நீளமானவரேஎன நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர்கள் ஒரு குச்சியை எடுத்துத் தங்களின் கைகளை அளந்து பார்த்த போது சவ்தா (ரலி) அவர்களின் கைகளே மிகவும் நீளமானவையாக இருந்தன. (ஸைனப் -ரலி- இறந்த) பிறகுதான் கை நீளமானவர் என்பது, அதிகம் தர்மம் செய்பவரைக் குறிக்கிறது என்பதை நாங்கள் அறிந்தோம். (ஸைனப்) அவ்வாறு அதிகம் தர்மம் செய்பவராக இருந்ததால் தான் நபி (ஸல்) அவர்களை முதலில் அடைந்தார். மேலும் அவர் தர்மம் செய்வதை (மிகவும்) விரும்பக் கூடியவராகவும் இருந்தார்

நூல்: புகாரி 1420

அண்ணலாரின் அருமை மனைவியார் அன்னை ஸைனப் (ரலி) அவர்களின் மிக உயர்ந்த நற்குணத்தை இச்சம்பவம் எடுத்துரைக்கிறது.

திருமறைக் குர்ஆனின் ஏராளமான வசனங்களும், நபிமொழிகளும் இறைவழியில் வாரி வழங்குவதன் சிறப்புகளை எடுத்துரைக்கின்றன. ஆனால் வெறுமனே படித்து விட்டும், கேட்டுவிட்டும் கடந்து செல்வோர் தான் ஏராளமாக உள்ளனர். திருமறை வசனங்களும், இறைத்தூதர்களின் போதனைகளும் அவர்களின் உள்ளங்களில் எத்தகைய மாற்றத்தையும் உருவாக்குவதில்லை.

ஆனால் அண்ணலெம் பெருமானாரின் அருமை மனைவியார் அன்னை ஸைனப் (ரலி) அவர்கள் இறைக் கட்டளைகளுக்கிணங்க வாரிவழங்கும் மிக உயர்ந்த நற்குணம் கொண்டவர்களாகத் திகழ்ந்துள்ளனர்.

மரணம் என்பது நிரந்தப் பிரிவல்ல. முஃமின்களுக்கு அது ஒரு தற்காலிகப் பிரிவுதான். இதனால் தான் நபியவர்கள் மரணித்த பிறகும் முஃமின்களுக்கு அழிவில்லை என்பதை ‘‘உங்களில் கை நீளமானவர் என்னை முதலில் சந்திப்பார்’’ என்று கூறி மரணத்திற்குப் பிறகும் முஃமின்களுக்கு சந்திப்பு உண்டு என்று எடுத்துரைக்கிறார்கள்.

உயிரினும் மேலான உத்தம நபியை முதலில் சந்திக்கும் வாய்ப்பை அன்னை ஸைனப் (ரலி) அவர்கள் தம்முடைய வாரி வழங்கும் உயர்ந்த உள்ளத்தால் உடனடியாகப் பெற்றுக் கொள்கிறார்கள்.

தனக்குத் தேவையிருந்தும் வாரி வழங்கிய அன்னை ஆயிஷா (ரலி)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண்மணி தனது இரு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டார். அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்று விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், இவ்வாறு பல பெண் குழந்தைகளால் யார் சோதிக்கப்படுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள் எனக் கூறினார்கள்.

நூல்: புகாரி 1418

முஃமின்களின் மிக உயரிய பண்பினை திருமறைக் குர்ஆன் பின்வருமாறு எடுத்துரைக்கிறது.

தமக்கு வறுமை இருந்தபோதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப் படுவோரே வெற்றி பெற்றோர்.

அல்குர்ஆன் 59:9

திருக்குர்ஆன் குறிப்பிடும் முஃமின்களின் மிக உயர்ந்த பண்பினைக் கொண்டவர்களாக அன்னை ஆயிஷா (ரலி) திகழ்ந்துள்ளார்கள் என்பதை மேற்கண்ட செய்தி எடுத்துரைக்கிறது.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் இருந்தது ஒரே ஒரு பேரீச்சம்பழம் தான். அந்த ஒரு பேரீச்சம் பழத்தைக் கூட தன்னிடம் யாசகம் கேட்டு வந்த அந்த ஏழைப் பெண்ணிற்கு வழங்குகிறார்கள்.

தன்னுடைய தேவை போகத்தான் தானம் என்பதே மனித இயல்பு. ஆனால் தனக்கில்லாத போதும் பிறர்க்கு வழங்குதல் மனித நேயர்களின் இயல்பு. அத்தகைய மனிதநேயமிக்க நற்குணம் கொண்டவர்களாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் திகழ்ந்துள்ளார்கள் என்பதை மேற்கண்ட செய்தியின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

இஸ்லாம் எடுத்துரைக்கும் தர்ம சிந்தனைகளை தன்னுடைய சிந்தையில் இருத்தி சீரிய செயலாற்றல் கொண்டவர்களாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் திகழ்ந்துள்ளார்கள் என்பதையும் எடுத்துரைக்கின்றது.

நரகத்திற்கு அஞ்சி வாரி வழங்கிய ஸைனப் (ரலி)

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலோ, அல்லது ஹஜ்ஜுப் பெருநாளிலோ முஸல்லா எனும் தொழும் திடலுக்குச் சென்று தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். மக்களே! தர்மம் செய்யுங்கள் என்று மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று, ‘பெண்களே! தர்மம் செய்யுங்கள்; ஏனெனில் நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை நான் பார்த்தேன்என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஏன் இந்நிலை?’ எனப் பெண்கள் கேட்டதும், ‘நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; கணவனுக்கு மாறு செய்கிறீர்கள்; கூரிய அறிவுடைய ஆண்மகனின் புத்தியை, அறிவிலும் மார்க்கத்தி(ன் கடமையி)லும் குறைவுடையவர்களாக உள்ள நீங்கள் போக்கிவிடுகிறீர்கள்என்று நபி (ஸல்) கூறிவிட்டு, (வீட்டிற்குச்) சென்றார்கள். இப்னு மஸ்வூதின் மனைவி ஸைனப் (ரலி) வந்து வீட்டினுள் வர அனுமதி கோரினர்.

அல்லாஹ்வின் தூதரே! ஸைனப் வந்திருக்கிறார் என்று கூறப்பட்டது. எந்த ஸைனப்? என நபி (ஸல்) அவாகள் வினவ, இப்னு மஸ்வூதின் மனைவி ஸைனப்! என்று கூறப்பட்டது. அவருக்கு அனுமதி வழங்குங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் அனுமதி வழங்கப்பட்டது. அவர் (வந்ததும்) அல்லாஹ்வின் தூதரே! தர்மம் செய்யுமாறு இன்று நீங்கள் கட்டளையிட்டீர்கள். என்னிடம் எனக்குச் சொந்தமான ஒரு நகை இருக்கிறது. அதைத் தர்மம் செய்ய நான் நாடினேன். (என் கணவர்) இப்னு மஸ்வூத், தாமும் தமது குழந்தைகளுமே அதைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள் எனக் கூறுகிறார். (என்ன செய்ய?)’ என்று கேட்டார். இப்னு மஸ்வூத் கூறுவது உண்மைதான்! உன் கணவரும், உன் குழந்தைகளுமே உனது தர்மத்தைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 1462

பெண்களே அதிகம் தர்மம் செய்யுங்கள். உங்களைத் தான் நான் நரகில் அதிகம் கண்டேன் என்ற இறைத்தூதரின் எச்சரிக்கை ஸைனப் அவர்களின் உள்ளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மேற்கண்ட சம்பவம் எடுத்துரைக்கிறது.

நரகத்தின் மீது அவர்கள் கொண்ட பயத்தினையும், இறைத்தூதரின் வார்த்தைகளின் மீது அவர்கள் கொண்ட நம்பிக்கையையும், அவர்களுக்கிருந்த வாரி வழங்கும் உயர்ந்த உள்ளத்தையும் இச்சம்பவம் நம் கண்களின் முன் கொண்டு வருகிறது.

கணவரே தனது தேவையை எடுத்துரைத்து தனக்கு தர்மம் செய்யுமாறு வேண்டிய பிறகும் இறைத்தூதரின் கருத்தறியாமல் வழங்க இயலாது என்பதை எடுத்துரைக்கிறார்கள். இறைத்தூதர் வழிகாட்டிய பிறகே அதனை நல்வழியாகக் கருதுகின்றார்கள்.

நபித்தோழியர்களின் வாழ்வில் நடந்த இச்சம்பவத்தில் நாம் பெற வேண்டிய பல படிப்பினைகள் இச்சம்பவத்தில் நிறைந்துள்ளன.

அன்னதானம் வழங்கிய அன்னை உம்முஷரீக் (ரலி)

உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தைச் சேர்ந்த பெண்மணி ஆவார்கள்.    

நூல்: முஸ்லிம் 4506

உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் அன்சாரிகளில் வசதி படைத்த பெண்மணியாகவும், அல்லாஹ்வின் பாதையில் பெருமளவில் செலவு செய்யக் கூடியவராகவும் இருந்தார். அவரது இல்லத்தில் விருந்தாளிகள் தங்குவார்கள். நபி (ஸல்) அவர்களே  உம்மு ஷரீக் ஏராளமான விருந்தாளிகளை உபசரிக்கும் ஒரு பெண்மணி ஆவார் என்று மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள். இதனை ஸஹீஹ் முஸ்லிம் (5638) ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

உம்மு ஷரீக் ஏராளமான விருந்தாளிகளை உபசரிக்கும் ஒரு பெண்மணி ஆவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 5638

பசித்தோருக்கு உணவளிப்பது மிகச் சிறந்த நல்லறமாகும்.

அல்லாஹ் தீயவர்களின் பண்பினை பற்றிக் குறிப்பிடும் போது ‘‘ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை” (அல்குர்ஆன் 107:3)  என்று குறிப்பிடுகின்றான்.

உண்மையான நல்லடியார்களின் பண்பு எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் இறைவனின் திருமுகத்தை மட்டும் நாடி பசித்தோருக்கு உணவளிப்பதாகும்.

அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். ‘‘அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை’’ (எனக் கூறுவார்கள்.)

அல்குர்ஆன் 76:8, 9

இறைவன் எடுத்துரைக்கும் நல்லடியார்களின் நற்பண்பினைக் கொண்டவர்களாக அன்னை உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் திகழ்ந்துள்ளார்கள். இறைவன் அவர்களுக்கு தாராளமாகச் செல்வ வசதியைக் கொடுத்த காரணத்தினால் தம்முடைய செல்வத்தின் மூலம் முஸ்லிம்களுக்கு விருந்தளித்துப் பசி போக்கியுள்ளார்கள்.

அதனால் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்னை உம்மு ஷரீக் (ரலி) அவர்களைப் பற்றி பாராட்டிக் கூறியுள்ளார்கள்.

செல்வ வசதி பெற்ற எத்தனையோ செல்வந்தர்கள் பிறர் நலத்தினைப் பற்றிக் கடுகளவும் அக்கறையின்றி செயல்படும் போது அன்னை உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் தம்முடைய செல்வத்திலிருந்து உணவளித்து, விருந்தளித்தது அவர்களின் உயரிய குணத்தை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது.

ஏழைகளுக்கு உணவளித்த உன்னதப் பெண்மணி

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதீனாவில்) எங்களிடையே (வயது முதிர்ந்த) பெண்மணி ஒருவர் இருந்தார். அவர் தமது தோட்டத்தின் வாயக்கால் வரப்பில் தண்டுக் கீரைச் செடியை பயிர் செய்வார். வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் அவர் அந்தக் கீரையின் தண்டுகளைப் பிடுங்கி வந்து ஒரு பாத்திரத்தில் போடுவார். அதில் ஒரு கையளவு வாற்கோதுமையை போட்டுக் கடைவார். அந்தக் கீரைத் தண்டுதான் (எங்கள்) உணவில் மாமிசம் போன்று அமையும்.

நாங்கள் ஜுமுஆத் தொழுகை தொழுதுவிட்டுத் திரும்பி வந்து அவருக்கு சலாம் சொல்வோம் அந்த உணவை அவர் எங்களுக்குப் பரிமாறுவார். அதை நாங்கள் ருசித்துச் சாப்பிடுவோம். அவருடைய அந்த உணவுக்காக நாங்கள் வெள்ளிக்கிழமையை (அது எப்போது வருமென) எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்.

நூல்: புகாரி 938

நபியவர்களின் காலத்தில் நபித்தோழர்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் எந்த அளவிற்குச் சிறந்து விளங்கினார்கள் என்பதை இச்சம்பவம் எடுத்துரைக்கிறது.

வெள்ளிக்கிழமை என்றாலே மிகச் சிறப்பாக உணவருந்த வேண்டும் என அனைவரும் விரும்புவர். ஆனால் வெள்ளிக்கிழமை கூட வயிற்றுக்கு உணவில்லாத ஏழை ஸஹாபாக்களும் நபியவர்கள் காலத்தில் இருந்துள்ளனர். அத்தகைய ஏழை நபித்தோழர்களுக்கு ஒரு அடைக்கலமாக தன்னுடைய வயோதிக காலத்திலும் ஒரு பெண்மணி திகழ்ந்துள்ளார் என்றால் எத்தகைய உயரிய நற்குணங்களுக்கு உரியவர்களாகத் திகழ்ந்துள்ளார்கள் என்பதைக் கண்டு நம் மெய்சிலிர்க்கின்றது.

வயோதிக காலத்திலும் தமது தோட்டத்தில் தானே பயிர் செய்து, அதனை அறுவடை செய்து, தானே சமையலும் செய்து, வெள்ளிக்கிழமை ஏழை நபித்தோழர்களுக்கு உணவளித்துள்ளார் என்றால் உண்மையில் மிகச் சிறந்த இறைநம்பிக்கையாளராகவும், இறை நம்பிக்கையாளருக்கு உதாரணமாகவும் இப்பெண்மணி திகழ்ந்துள்ளார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed