நபி (ஸல்) அவர்களின் ஜனாஸாவிற்கு இமாமாக ஜனாஸா தொழுகை நடத்தியது யார்?

நபிக்கு இமாமாக ஜனாஸா தொழுகை நடத்தியது யார்?

இமாமாக யாரும் இல்லை.

63 வருடம் வாழ்ந்த நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் வஃபாத் ஆனார்கள். அவர்கள் மரணித்த போது அவர்களுக்கு இமாமாக நின்று ஜனாஷா தொழுகை நடத்தியது யார்?

நான் மார்க்க அறிஞர்கள் பலரிடம் கேட்டேன். யாரும் எனக்கு திருப்தியான பதில் சொல்லவில்லை. மலக்குமார்கள் தொழவைத்தார்கள் என்றும் ஆண்கள் ஒரு முறை ஜமாஅத்தாக நின்று தொழுதார்கள் என்றும் பெண்கள் ஒரு முறை ஜமாஅத்தாக நின்று தொழுதார்கள் என்றும் சிறுவர்கள் ஒரு முறை ஜமாஅத்தாக நின்று தொழுதார்கள் என்றும் பல விதமாகக் கூறினார்கள்.

இதற்கான தெளிவான விளக்கம் வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் மரணித்த போது அவர்களுக்கு எப்படி ஜனாஷா தொழுகை நடத்துவது என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பிறகு ஒவ்வொரு குழுவினராக சென்று நபியவர்களுக்காக தனித்தனியாக ஜனாஷா தொழுதார்கள். நபியவர்களின் ஜனாஷாவிற்கு எந்த ஒரு ஸஹாபியும் இமாமாக நின்று தொழுகை நடத்தவில்லை. இதனை பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அபு அஸீம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் (ஜனாஷா) தொழுகையில் கலந்து கொண்டார்கள். நபியவர்களுக்கு எப்படி நாம் தொழுகை நடத்துவது என்று (ஸஹாபாக்கள் ஒருவருக்கொருவர்) கேட்டுக் கொண்டார்கள். பிறகு ஒவ்வொரு குழுவினராக உள்ளே நுழையுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் (நபியவர்களின் வீட்டின்) ஒரு வாசல் வழியாக உள்ளே நுழைந்து அவர்களுக்காக (ஜனாஷா) தொழுது விட்டு பிறகு மற்றொரு வாசல் வழியாக வெளியேறுபவர்களாக இருந்தார்கள்.


அறிவிப்பவர் : அபூ அஸீம் (ரலி)

நூல் : அஹ்மத் (19837)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

நபியவர்கள் தம்முடைய வீட்டிலுள்ள கட்டிலின் மேல் வைக்கப்பட்டார்கள் . பிறகு மக்கள் தனித்தனி குழுவினராக நபியவர்களிடத்தில் நுழைந்து அவர்களுக்காக தொழுதார்கள். அவர்கள் தொழுது முடித்த பிறகு பெண்களை (தொழுவதற்காக நபியவர்களின் வீட்டிற்குள்) அனுமதித்தார்கள். அவர்கள் தொழுது முடித்தபிறகு சிறுவர்களை அனுமதித்தார்கள். நபியவர்களின் (ஜனாஷாவிற்கு) எந்த ஒருவரும் மக்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடத்தவில்லை.


நூல் : இப்னு மாஜா (1617)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

You missed