நபியின் பெற்றோர் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெற்றோர் எந்த நபியின் உம்மத்தாகவும் இருக்கவில்லை. எனவே அவர்கள் தமது முன்னோர்களைப் பின்பற்றி நடந்து கொண்டது குற்றமாகுமா? அவர்கள் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெற்றோருக்கும், அவர்களின் பாட்டனாருக்கும் எந்த நபியும் அனுப்பப்படவில்லை. எந்த நபியின் போதனையும் அவர்களைச் சென்றடையவில்லை.

இதை திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது

ஞானமிக்க குர்ஆன் மீது ஆணையாக! . )முஹம்மதே!) நீர் தூதர்களில் ஒருவர். (நீர்) நேரான பாதையில் இருக்கிறீர். கவனமற்றும், முன்னோர் எச்சரிக்கப்படாமலும் இருக்கின்ற சமுதாயத்தை நீர் எச்சரிக்கை செய்வதற்காக மிகைத்தவனாகிய நிகரற்ற அன்புடையோனால் இது அருளப்பட்டது.

திருக்குர்ஆன் 36:2-6

நபிகள் நாயகத்தின் பெற்றோருக்கு எந்த நபியும் அனுப்பப்படவில்லை என்று இவ்வசனம் கூறுகிறது.

நபி அனுப்பப்படாத சமுதாயத்தினர் அல்லாஹ்வுக்கு இணைவைக்காமல் ஸாபியீன்களாக இருந்திருக்க வேண்டும். நபி அனுப்பப்படாத சமுதாயமாக இருந்தாலும் அவர்கள் இணைகற்பிக்க அனுமதி இல்லை. இதுதான் அவர்கள் மீதுள்ள கடமையாகும். ஆனால் நபியின் பெற்றோர் ஸாபியீன்களாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் கொள்கையில் இருந்தனர்.

இதுபற்றி விபரமாகப் பார்ப்போம்

நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், கிறித்தவர்கள், மற்றும் ஸாபியீன்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 2:62

நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், ஸாபியீன்கள், மற்றும் கிறித்தவர்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி நல்லறங்களைச் செய்தோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 5:69

நம்பிக்கை கொண்டோரும், யூதர்களும், ஸாபியீன்களும், கிறித்தவர்களும், நெருப்பை வணங்குவோரும், இணை கற்பித்தோரும் ஆகிய அவர்களிடையே அல்லாஹ் கியாமத் நாளில் தீர்ப்பு வழங்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருப்பவன்.

திருக்குர்ஆன் 22:17

இவ்வசனங்களில் ஸாபியீன்கள் என்ற பிரிவினர் பற்றி கூறப்பட்டுள்ளது.

இவர்கள் ஸபூர் வேதப்படி நடப்பவர்கள் என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இவர்கள் நெருப்பை வணங்கும் சமுதாயம் என்று மற்றும் சிலர் கூறுகின்றனர். நெருப்பை வணங்கும் சமுதாயத்தின் நல்லறங்கள் ஏற்கப்படாது என்ற அடிப்படைக்கு மாற்றமாக இந்தக் கருத்து அமைந்துள்ளது.

ஸாபியீன்களின் நன்மைகளுக்குக் கூலி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளதற்கு மாற்றமாக இவர்களின் விளக்கம் அமைந்துள்ளது.

ஹதீஸ்களை ஆராயும் போது ஸாபியீன்கள் என்போர் இறைத்தூதர்கள் அனுப்பப்படாத காலத்தில் வாழ்ந்து தங்களின் சிந்தனையைப் பயன்படுத்தி ஒரே கடவுள் கொள்கையை விளங்கிக் கொண்டவர்கள் என்பது தெரிய வருகிறது. ஏகஇறைவனை விளங்கி அவனுக்கு இணைகற்பிக்காத சமுதாயமே ஸாபியீன்கள் என்று கருதுவதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரிறைக் கொள்கையைச் சொன்ன போது அவர்களை இறைத் தூதர் என்று நம்பாத நபிகள் நாயகத்தின் எதிரிகள் நபிகள நாயகத்துக்கு வைத்த பெயர் ஸாபியீன்களில் ஒருவர் என்பதாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் தண்ணீர் கிடைக்காத போது தமது தோழர்களை அனுப்பி வைத்தனர். அவர்கள் தண்ணீர்க் குடத்துடன் ஒரு பெண் செல்வதைக் கண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அவளை அழைத்தனர். அதற்கு அந்தப் பெண் ஸாபியீ என்று சொல்லப்படும் அந்த மனிதரிடமா என்று கேட்டாள். அதற்கு நபித்தோழர்கள் ஆம் அவரிடம் தான் என்று கூறினார்கள்.

இது நீண்ட ஹதீஸின் ஒரு பகுதியாகும்.

பார்க்க : புகாரி 344

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றைய மக்களால் ஸாபியீ என்று தான் அறியப்பட்டிருந்தார்கள் என்பதையும், அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் மறுக்கவில்லை என்பதையும் இதில் இருந்து நாம் அறியலாம்.

இது தீய கொள்கை உடையவர்களைக் குறிப்பதாக இருந்தால் நபித்தோழர்கள் அந்தப் பெண்ணிடம் ஆட்சேபணை செய்திருப்பார்கள். அவ்வாறு செய்யாமல் அதை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை இந்த ஹதீஸில் இருந்து அறியலாம்.

 

அபூதர் (ரலி) அவர்கள் இஸ்லாம் குறித்தும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்தும் கேள்விப்பட்டு மக்கா வருகிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இரகசியமாகச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார். பின்னர் மக்காவில் இருந்த சிலை வணங்கிகளிடம் சென்று வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் நம்புகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்தார். உடனே மக்காவின் சிலை வணங்கிகள் இந்த ஸாபியீயை அடியுங்கள் எனக் கூறித் தாக்கினார்கள்.

இந்த செய்தியை புகாரி 3522 வது ஹதீஸில் காணலாம்.

இஸ்லாத்தை ஒருவர் ஏற்றால் அவருக்கு இஸ்லாத்தின் எதிரிகள் வைத்த பெயர் ஸாபியீ என்பது தான் என இதில் இருந்து அறியலாம்.

அதுபோல் ஒரு கூட்டத்தினருடன் நடந்த போரில் எதிரிகள் சரணடைந்து இஸ்லாத்தை ஏற்க முன்வந்தனர். அப்போது நாங்கள் இஸ்லாத்தில் சேர்கிறோம் எனக் கூறாமல் நாங்கள் ஸாபியீ ஆகி விட்டோம் எனக் கூறினார்கள். ஆனால் இதை ஏற்காமல் தளபதி காலித் பின் வலீத் அவர்களுடன் போரைத் தொடர்ந்தார், இது பற்றி அறிந்த நபிகள் நாயகம் ஸல் அவர்கள் காலித் பின் வலீதைக் கண்டித்தனர்.

பார்க்க : புகாரி 4339, 7189

ஸாபியீ என்று சொல்லப்படுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெறுக்கவில்லை என்பதில் இருந்து ஓரிறைக் கொள்கையில் உறுதியாக இருந்த மக்கள் தான் ஸாபியீ என்று அழைக்கப்பட்டனர் என்பதை அறியாலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) இறைத்தூதராக அனுப்பப்படுவதற்கு முன் கற்சிலைகளை வணங்க மறுத்து ஏக இறைவனை மட்டும் நம்பிய சமுதாயத்தினர் இருந்தனர். வணக்க வழிபாட்டு முறைகளை இவர்களால் அறிந்து கொள்ள முடியாது. அதை இறைத் தூதர்கள் வழியாகத்தான் அறிய இயலும். இதைத் தவிர மற்ற விஷயங்களில் ஒழுங்காக நடந்த சமுதாயமே ஸாபியீன்கள் ஆவர்.

இறைத்தூதர்களின் போதனைகள் சென்றடையாத சமுதாயம் இன்றைக்கும் இருக்கலாம். அவர்கள் ஸாபியீன்களாக வாழ்வதற்கு இறைவன் வழங்கிய அறிவே போதுமானதாகும்.

இறைத்தூதர் வரவில்லை என்பதால் எப்படி தொழுவது என்று தெரியவில்லை? எப்படி நோன்பு நோற்பது என்று தெரியவில்லை? என்று கூறினால் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்.

ஏனெனில் அதை அல்லாஹ் தனது தூதர்கள் மூலம் அறிவித்துக் கொடுத்தால் தான் அறிய முடியும்.

ஆனால் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று நான் அறியவில்லை. அதனால் கல்லையும், மண்ணையும் வணங்கினேன் எனக் கூறினால் அதை அல்லாஹ் ஏற்க மாட்டான். கல்லோ, மண்ணோ கடவுளாகாது என்பதை அறிய அல்லாஹ் அருளிய பகுத்தறிவு போதுமானது.

ஆதம் (அலை) அவர்களைப் படைத்து அவரில் இருந்து நபியின் பெற்றோர் உள்ளிட்ட அனைவரையும் வெளிப்படுத்தி நான் உங்கள் இறைவன் அல்லவா? என்று அல்லாஹ் கேட்டான். அனைவரும் ஆம் என்று சொன்னோம்.

இது பற்றி குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்!

“ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களின் சந்ததிகளை உமது இறைவன் வெளியாக்கி, அவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான். நான் உங்கள் இறைவன் அல்லவா?” (என்று கேட்டான்.) “ஆம்! (இதற்கு) சாட்சி கூறுகிறோம்” என்று அவர்கள் கூறினர். “இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்து விட்டோம்” என்றோ, “இதற்கு முன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்; நாங்கள் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா?” என்றோ கியாமத் நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதிமொழி எடுத்தோம்.)

திருக்குர்ஆன் 7:172, 173

படைத்த ஒரு இறைவன் இருக்கிறான் என்பதும் அவனைத் தவிர யாரையும், எதனையும் கடவுளாகக் கருதக் கூடாது என்பதையும், சிந்தித்து அறியும் ஆற்றல் மனிதர்களுக்கு இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் இதிலிருந்து அறியலாம்.

எங்கள் முன்னோர்கள் இணை கற்பித்ததால் நாங்களும் இணைகற்பித்தோம் என்று மக்கள் பதில் சொல்லும் போது அதற்கு மறுப்பாகவே அல்லாஹ் இதைக் கூறுகிறான்.

எனவே நபியின் பெற்றோர் ஒரு இறைவனை மட்டும் நம்பி அவனைத் தவிர எதனையும் கடவுளாக்காமல் இருந்திருக்க வேண்டும். ஸாபியீன்களாக வாழ்ந்திருக்க வேண்டும்.இதை அறிய இறைத்தூதர்கள் வரவேண்டிய அவசியம் இல்லை.

அப்படியானால் நபியின் பெற்றோர் ஸாபியீன்களாக வாழ்ந்திருக்கலாமே என்ற சந்தேகம் வரலாம். ஸாபியீன்களாக அவர்கள் வாழவில்லை; அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தவர்களாகவே வாழ்ந்தனர்.

‘என் தாயாரின் பாவங்களை மன்னிக்கும் படி பிரார்த்திக்க இறைவனிடம் நான் அனுமதி கேட்டேன். அவன் மறுத்து விட்டான்’ என்று அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 1621, 1622

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ‘என் தந்தை எங்கே இருக்கிறார்’ என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நரகத்தில்’ என்றார்கள். அவர் கவலையுடன் திரும்பிச் சென்றார். அவரை மீண்டும் அழைத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘என் தந்தையும், உன் தந்தையும் நரகத்தில் தான் இருப்பார்கள்’ என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 302

தமது தாயாருக்காக பாவமன்னிப்பு கேட்க நபியவர்கள் அனுமதி கேட்ட போது அல்லாஹ் அதை மறுத்துள்ளதால் அவர்களின் தாயார் இணை கற்பித்து இருந்தார்கள் என்பதை அறியலாம்.

அது போல் என் தந்தையும் உன் தந்தையும் நரகத்தில் உள்ளனர் என்று நபிகள் சொன்னதில் இருந்தும் அவர்கள் ஸாபியீன்களாக வாழவில்லை என்று அறியலாம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed