நபியின் தண்ணீர் பங்கீடு தீர்ப்பை ஏற்க மறுத்த போது…

அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார்.
மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த ‘ஹர்ரா’ (என்னுமிடத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் (என் தந்தை) ஸுபைர்(ரலி) அவர்களுடன் சச்சரவு செய்தார். அந்த அன்சாரித் தோழர், ‘தண்ணீரைத் திறந்து ஓட விடு’ என்று கூறினார். ஸுபைர்(ரலி) (தண்ணீரைத் திறந்து விட) மறுத்துவிட்டார்கள். (இந்தத் தகராறையையொட்டி) நபி(ஸல்) அவர்களிடம் தீர்ப்புக்காக இருவரும் சென்றபொழுது,

நபி(ஸல்) அவர்கள், ‘ஸுபைரே! உங்கள் தோப்புக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு, பிறகு உங்கள் பக்கத்துத் தோப்புக்காரருக்கு தண்ணீரை அனுப்பி விடுங்கள்’ என்று கூறினார்கள். இதனைக் கேட்ட அந்த அன்சாரித் தோழர் கோபம் கொண்டு, ‘உங்கள் அத்தை மகன் என்பதாலா (அவருக்கு முதலில் நீர் பாய்ச்சிக் கொண்டு பிறகு எனக்குத் திறந்து விடும்படி அவருக்குச் சாதகமாக தீர்ப்புக் கூறுகிறீர்கள்)?’ என்று கேட்டார்.

இதைச் செவியுற்ற நபி(ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறி (கோபத்தால் சிவந்து)விட்டது. அவர்கள் ஸுபைர்(ரலி) அவர்களை நோக்கி, ‘உங்கள் மரங்களுக்கு நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு, வரப்புகளைச் சென்றடையும் வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள். (பிறகு மற்றவர்களுக்கு அந்த நீரை விட்டு விடுங்கள்) ‘ என்று கூறினார்கள்.

(என்னிடம்) இந்நிகழ்ச்சியைக் கூறிவிட்டு ஸுபைர்(ரலி), ‘இறைவன் மீதாணையாக! ‘(முஹம்மதே!) உங்களுடைய இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளில் உங்களை நீதிபதியாக ஏற்ற பின்னர், நீங்கள் அளிக்கிற தீர்ப்புக் குறித்து தம் உள்ளங்களில் எத்தனைய அதிருப்தியும் கொள்ளாமல், முற்றிலும் அதற்கு அடிபணியாதவரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்’ என்னும் (திருக்குர்ஆன் 04: 65) திருக்குர்ஆன் வசனம் இந்த விவகாரத்தில்தான் இறங்கியது என்று எண்ணுகிறேன்’ என்று கூறினார்கள்.

(புகாரி-2359. & 2360)

 

2362. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்.
மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த ‘ஹர்ரா’ (என்னுமிடத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் ஸுபைர்(ரலி) அவர்களுடன் சச்சரவு செய்தார். இறைத்தூதர் (தம்மிடம் இந்த வழக்கு வந்தபொழுது), ‘ஸுபைரே! நீங்கள் (உங்கள் பேரீச்ச மரங்களுக்குப்) பொது வழக்கப்படி (அளவோடு) தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு உங்கள் பக்கத்திலுள்ளவரு(டைய தோப்பு)க்கு அதை அனுப்பி விடுங்கள்’ என்று கூறினார்கள். அதற்கு அந்த அன்சாரி, ‘இவர் உங்கள் அத்தை மகன் என்பதாலா (இவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தீர்கள்)?’ என்று கேட்டார்.

உடனே, நபி(ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால் சிவந்து) நிறம் மாறியது. பிறகு, ‘ஸுபைரே! உங்கள் பேரீச்ச மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். தண்ணீர், வரப்பை நன்கு சென்றடையும் வரை தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்.

(பிறகு மற்றவர்களுக்கு அந்த நீரை விட்டு விடுங்கள்)’ என்று கூறி, ஸுபைர்(ரலி) அவர்களின் உரிமையை நிறைவாக வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியைக் கூறிவிட்டு, ஸுபைர்(ரலி), ‘குர்ஆனின் இந்த (திருக்குர்ஆன் 04:65) வசனம் இந்த விவகாரம் குறித்தே இறங்கியது’ என்றார்கள்.
அறிவிப்பாளர் இப்னு ஜுரைஜ்(ரஹ்) கூறினார்.

(இந்த நபிமொழியை உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்) அவர்களிடமிருந்து கேட்டு அறிவித்த) இப்னு ஷிஹாப்(ரஹ்) என்னிடம், ‘(உங்கள் மரங்களுக்கு) நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு வரப்புகளைச் சென்றடையும் வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்’ என்னும் (இந்த) நபிமொழியை அடிப்படையாகக் கொண்டே, ‘தண்ணீர் கணுக்கால்கள் வரை உயர்ந்து நிரம்பிவிட்டால் போதுமான அளவுக்கு நீர் பாய்ச்சிவிட்டதாகப் பொருள் என்று அன்சாரிகளும் பிற மக்களும் மதிப்பிட்டார்கள்’ என்றார்கள்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *