நபித்துவ முத்திரை என்பது உண்மையா

கேள்வி: நபிகள் நாயகம் (ஸல்) அவாகளின் இரு புஜங்களுக்கிடையே நபித்துவத்தின் முத்திரையை நான் பார்த்தேன். அது புறாமுட்டை போன்று இருந்தது என்று ஸாயிப் பின் யஸீது (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் 190 வது ஹதீஸாக இடம் பெற்றுள்ளது. இது ஆதாரப்பூவமான ஹதீஸா? ஆம் எனில் அந்த முத்திரை நபிகள் நாயகம் (ஸல்) பிறக்கும் போதே இருந்ததா?

மு.யூசுப் ரஹ்மத்துல்லாஹ் சேட், மத்திய சிறை, திருச்சி

நபிகள் நாயகம் (ஸல்) அவாகளின் தோள்புஜத்தில் புறா முட்டை போன்ற சதை இருந்தது என்பதற்கு ஏராளமான நபிமொழிகள் சான்றுகளாக உள்ளன.

باب حدثنا عبد الرحمن بن يونس قال حدثنا حاتم بن إسماعيل عن الجعد قال سمعت السائب بن يزيد يقول ذهبت بي خالتي إلى النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله إن ابن أختي وجع فمسح رأسي ودعا لي بالبركة ثم توضأ فشربت من وضوئه ثم قمت خلف ظهره فنظرت إلى خاتم النبوة بين كتفيه مثل زر الحجلة

190 சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் சிறிய தாயார் என்னை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரி மகன் (இரு பாதங்களில்) நோய் கண்டுள்ளான் என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பரிவுடன்) எனது தலையை வருடிக்கொடுத்து எனது சுபிட்சத்திற்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் உளூ செய்தார்கள். அவர்கள் உளூ செய்துவிட்டு மீதி வைத்த தண்ணீரில் சிறிதை நான் அருந்தினேன். பிறகு நபி (ஸல்) அவர்களுடைய இரு புஜங்களுக்கிடையே இருந்த நபித்துவ முத்திரையை நான் பார்த்தேன். அது ஒரு புறா முட்டை போன்றிருந்தது.

நூல்: புஹாரி 190

ஸல்மான் பார்ஸி அவர்கள் அந்த அடையாளத்தைப் பார்த்துவிட்டு நபி (ஸல்) அவர்களை நபியென அறிந்து கொண்டதாக அஹ்மதில் சில ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. முஹம்மத் (ஸல்) அவர்களின் தனிப்பட்ட அடையாளமாக முந்தைய வேதங்களில் இது குறிப்பிட்டிருக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் ஊகம் செய்யலாம்.

இந்த அடையாளத்தை நபித்துவ முத்திரை என்று நபி (ஸல்) கூறியதாக எந்த ஒரு ஹதீஸிலும் கூறப்படவில்லை. வருவோர் போவோரிடமெல்லாம் அந்த அடையாளத்தைக் காட்டி இந்த அடையாளம் இருப்பதால் நான் நபி என நபி ஸல் வாதிட்டதாகவும் எந்த ஹதீஸும் இல்லை.

தம் வாழ்நாளில் முதுகுப் பகுதியைப் பெரும்பாலும் அவர்கள் மறைத்தே இருந்தனர். அது விலகக் கூடிய ஓரிரு சந்தர்ப்பங்களில் ஓரிரு நபித்தோழர்கள் அதைப் பார்த்துள்ளனர். நபி என்பதற்கே அது தான் அடையாளம் என்றால் அதைக் காட்டி நபி (ஸல்) அவர்கள் நபித்துவத்தை வாதிட்டிருப்பார்கள்.

ஒரு நபரைப் பற்றி அடையாளம் கூறும் போது அவரது கண், வாய், உயரம், நிறம், மச்சம் மற்றும் பல அடையாளங்களைக் கூறுவோம். அது போன்ற அடையாளமே அது . வேறு யாரிடமும் இல்லாமல் நபி (ஸல்) அவர்களிடம் மட்டும் அது காணப்பட்டதால் நபித்தோழர்களில் சிலர் அதை நபித்துவ முத்திரை என்று குறிப்பிட்டனர். இப்படித் தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நபி என்பதற்கான ஆதாரமாக இறைவன் இட்ட முத்திரை என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது. அவ்வாறு இருந்திருந்தால் அதை அனைத்து மக்களிடமும் நபி (ஸல்) காட்டி தமது நுபுவ்வத்தை நிரூபித்திருப்பார்கள்.

அந்த சதைப் பகுதியில் முஹம்மது ரஸுலுல்லாஹ் என்று பதியப்பட்டிருக்கும் என்றெல்லாம் சிலர் கூறுவர் . இது ஆதாரமற்ற பொய்யாகும். எந்த ஹதீஸ் நூலிலும் இவ்வாறு கூறப்படவில்லை.

ஆயினும் அன்றைய நாளில் வேறு எவரிடமும் காணப்படாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மாத்திரம் அது இருந்தது என்பதும் இறுதி நபிக்குரிய பல அடையாளங்களில் ஒன்றாக அதுவும் கூறப்பட்டிருந்தது என்பதும் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed