நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஸைனப் (ரலி) அவர்கள் மரணம் பற்றிய முன்னறிவிப்பு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரில் ஸைனப் (ரலி) அவர்கள் முக்கியமானவர்கள். நபிகள் நாயகத்தின் மாமி மகளான ஸைனபை ஸைது எனும் அடிமைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணமுடித்து வைத்தார்கள். ஸைது அவர்களுக்கும் ஸைனப் அவர்களுக்கும் மனக் கசப்பு ஏற்பட்டதால் ஸைத் அவர்கள் ஸைனபை விவாகரத்துச் செய்தார்கள்.
இதன் பின்னர் அல்லாஹ்வே ஸைனபை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தான்.
பார்க்க திருக்குர்ஆன் : 33:37
தமது மனைவியரில் யார் முதலில் மரணிப்பார்கள் என்பது பற்றிய பேச்சு வந்த போது ‘உங்களில் நீளமான கைகளை உடையவரே முதலில் மரணிப்பார்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டனர்.
இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியர் ஒரு குச்சியின் மூலம் ஒவ்வொருவரின் கைகளையும் அளந்து பார்த்தனர். மற்றவர்களின் கைகளை விட ஸவ்தா (ரலி) அவர்களின் கைகளே நீளமாக இருந்தன.
ஆனால் நபிகள் நாயகத்தின் மனைவியரில் ஸைனப் (ரலி) தான் முதலில் மரணித்தனர். ‘தாரளமாக வாரி வழங்குபவர்’ என்ற கருத்திலேயே ‘கைகள் நீளமானவர்’ என்ற சொல்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியதை அவர்களின் மனைவியர் புரிந்து கொண்டார்கள்.
இந்த விபரம் புகாரி 1420 வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு அவர்களின் மனைவியரில் ஸைனப் அவர்கள் முதலில் மரணித்தார்கள்.