நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 09

ஜுவைரியா (ரலி) அவர்கள்

பனுல் முஸ்தலக் என்ற கூட்டத்தினர் இஸ்லாத்தின் பரம எதிரிகளாகத் திகழ்ந்தவர்கள். முஸ்லிம்களுக்குப் பல வகையிலும் தொல்லை தந்து கொண்டிருந்தனர். இதன் காரணமாக பனுல் முஸ்தலக் என்ற கூட்டத்தினருடன் ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டில் அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஐம்பத்தி ஒன்பதாவது வயதில் நபியவர்கள் போரிட்டனர்.

இந்தப் போரில் முஸ்லிம்கள் மகத்தான வெற்றி பெற்றனர். அந்தக் கூட்டத்திலேயே கடுமையான எதிரியாக இருந்த முஸாபிஃ பின் ஸஃப்வான் என்பவர் கொல்லப்பட்டார். போர்க்களத்தில் உயிருடன் பிடிபட்டவர்கள் கைது செய்யப்பட்ட போது முஸாபிஃ பின் ஸஃப்வான் என்பவரின் மனைவியும் அந்தக் கூட்டத்தின் தலைவன் ஹாரிஸ் என்பவரின் மகளுமான ஜுவைரியாவும் அவர்களில் ஒருவராவார். அன்றைய போர் தர்மத்தின்படி பிடிக்கப்பட்ட கைதிகள் போர் வீர்ர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப் பட்டனர். ஜுவைரிய்யா அவர்கள் ஸாபித் பின் கைஸ் (ரலி) என்ற நபித் தோழருக்குக் கொடுக்கப்பட்டார்.

இதன் பின்னர் ஜுவைரியா அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நான் பனூ முஸ்தலக் கூட்டத் தலைவன் ஹாரிஸ் என்பவரின் புதல்வியாவேன். ஸாபித் பின் கைஸ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட என்னை அவர் ஏழு ஊக்கிய்யா வெள்ளி நாணயம் தந்து விட்டு விடுதலையாகலாம் என்று கூறுகிறார். எனவே என் விடுதலைக்கு தாங்கள் உதவுங்கள் என்று கேட்டார்.

நான் அந்தத் தொகையைத் தந்து விடுதலை செய்து உன்னை மணந்து கொள்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் தெரிவித்ததும், அவர் அதற்குச் சம்மதித்தார் இதன் பின் அவரை நபியவர்கள் மணந்து கொண்டார்கள்.

இந்தத் திருமணத்தின் போது நபியவர்களின் வயது ஐம்பத்தி ஒன்பதாகும். கைதிகளாகப் பிடிபட்டவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னிலையில் கொண்டு வரப்பட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பெண்ணின் அழகில் மயங்கி காம உணர்வின் காரணமாக அவரை அனுபவிக்க விரும்பியிருந்தால் தம் பங்குக்கு ஜுவைரியாவை எடுத்துக் கொண்டிருக்கலாம். நபித் தோழர்களில் எவரும் அதை ஆட்சேபித்திருக்க மாட்டார்கள். ஆனால் அப்பெண்னை ஸாபித் பின் கைஸ் (ரலி) என்பவருக்கு ஒதுக்கி விடுகிறார்கள். இதன் மூலம் காம உணர்வோ,உணர்ச்சியோ,கவர்ச்சியோ இத்திருமணத்திற்குக் காரணம் அல்ல என்பதை அறியலாம்.

தான் இந்தக் கூட்டத்தின் தலைவி என்று கூறிய பிறகு – தன்னை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிறகு – தான் அவரைத் திருமணம் செய்கிறார்கள். இதனால் ஏற்பட்ட விளைவு என்னவெண்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பெண்ணை மணந்து கொண்டதை அறிந்த நபித்தோழர்கள் அணைவரும் தங்களுக்குக் கிடைத்த அடிமைகள் அனைவரையும் விடுதலை செய்து விட்டார்கள். நபியவர்கள் சம்பந்தம் செய்து கொண்ட ஒரு கூட்டத்தினரை எப்படி அடிமைகளாக வைத்துக் கொள்வது என்ற எண்ணத்திலேயே அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள். இத்திருமணத்தின் போது ஜுவைரிய்யா (ரலி) அவர்களின் வயது என்னவென்று திட்டவட்டமாகத் தெரியாவிட்டாலும் அவர்களும் முதுமையான வயதுடையவர்களாகத் தான் இருந்திருக்கக் கூடும் என்று அனுமானம் செய்ய இடமுண்டு.

ஸாபித் பின் கைஸ் (ரலி) என்பவருக்கு அப்பெண் கிடைத்ததும் இளமங்கையாகவோ,அல்லது சுண்டி இழுக்கும் பேரழகு கொண்டவராகவோ இருந்திருந்தால் இளைஞரான ஸாபித் இப்னு கைஸ் அவர்கள் ஏழு ஊக்கியா தந்துவிட்டு விடுதலையாகலாம் எனக் கூறியிருக்க மாட்டார். அவர் தாமே அனுபவிக்க எண்ணியிருப்பார். அடிமைகளை அனுபவித்துக் கொள்வதற்கு அன்றைய சமூக அமைப்பில் எந்தத் தடையும் இருக்கவில்லை. அல்லது அவரே கூட அப்பெண்னைத் திருமணம் செய்திருக்கலாம்.

தமக்குக் கிடைத்த பெண்ணை ஏழு ஊக்கியா தந்து விட்டு விடுதலையாகலாம் என்று அவர் கூறியதிலிருந்து ஜுவைரிய்யா அவர்கள் இளமங்கை ஆகவோ பேரழகு படைத்தவராகவோ இருந்திருக்க முடியாது என்பது தெளிவு.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் 59 வயதுடைய முதியவராகி விட்டார்கள். அந்தப் பெண்னும் அதே நிலையில் இருக்கின்றார். இவ்விருவருக்கும் நடந்த இத்திருமணத்திற்குக் காம உணர்வைக் காரணமாகக் கூற முடியுமா?

இத்திருமணத்தின் மூலம் அந்தக் கூட்டத்தின் தலைவியை மணமுடித்ததன் மூலம் அக்கூட்டத்தினர் முழுமையாக விடுதலை பெற வேண்டும் என்பதே இத்திருமணத்திற்குரிய தனிப்பட்ட காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.

(ஏன் பல திருமணங்கள் செய்தார்கள் என்று இறுதியில் நாம் கூறக் கூடிய பொதுவான காரணங்களும் இத்திருமணத்திற்குப் பொருந்தும்) எனவே இத்திருமணத்திற்கும் காம உணர்வைக் காரணமாக கூற இடமில்லை.

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *