நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை

ருகூவின் சிறப்புகள்

தொழுகை என்ற வணக்கம் அதனை முறையாகப் பேணி நிறைவேற்றுபவர்களுக்கு எவ்வளவு பெரிய பாக்கியங்களை வாரி வழங்குகிறது என்பதை நாம் தொடராகப் பார்த்து வருகின்றோம். அதன் வரிசையில் நாம் தற்போது தொழுகையின் மிக முக்கியமான ஒரு நிலையான “ருகூவு” என்ற நிலையைப் பற்றியும் அதனால் கிடைக்கும் பாக்கியங்களைப் பற்றியும் பார்க்கவிருக்கின்றோம்.

திருமறைக் குர்ஆனில் பல்வேறு இடங்களில் அல்லாஹ் ருகூவு செய்வதைப் பற்றியும், ருகூவு செய்யக் கூடியவர்களைப் பற்றியும் மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளான்.

தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! ருகூவு செய்வோருடன் ருகூவு செய்யுங்கள்!

(அல்குர்ஆன்:2:43.)

நம்பிக்கை கொண்டோரே! ருகூவு செய்யுங்கள்! ஸஜ்தாச் செய்யுங்கள்! உங்கள் இறைவனை வணங்குங்கள்! நன்மையைச் செய்யுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்

(அல்குர்ஆன்:22:7.)

அல்லாஹ்வும், அவனது தூதரும், தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்து, ருகூவு செய்கிற நம்பிக்கை கொண்டோருமே உங்கள் உதவியாளர்கள்.

(அல்குர்ஆன்:5:55.)

அவர்கள்) மன்னிப்புத் தேடுபவர்கள்; வணங்குபவர்கள்; (இறைவனைப்) புகழ்பவர்கள்; நோன்பு நோற்பவர்கள்; ருகூவு செய்பவர்கள்; ஸஜ்தாச் செய்பவர்கள்; நன்மையை ஏவுபவர்கள்; தீமையைத் தடுப்பவர்கள்; அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிக் கொள்பவர்கள். (இத்தகைய) நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!

(அல்குர்ஆன்:9:112.)

முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏக இறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர். ருகூவு, ஸஜ்தா செய்தோராக அவர்களைக் காண்பீர்! அல்லாஹ்விடமிலிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடுவார்கள். அவர்களின் அடையாளம் ஸஜ்தாவின் தழும்பாக அவர்களின் முகத்தில் இருக்கும். இதுவே தவ்ராத்தில் அவர்களது உதாரணம்

(அல்குர்ஆன்:48:29.)

மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் “ருகூவு” செய்வது ஒருவன் இறை நம்பிக்கையாளன் என்பதற்கு அடையாளமாகும் என்பதை நமக்குத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

நாம் தொழுகையை நிறைவேற்றும் போது ருகூவையும் நிறைவேற்றுகிறோம். எனவே மேற்கண்ட வசனங்களில் ருகூவு செய்வோருக்கு என்னென்ன சிறப்புகளையும் பாக்கியங்களையும் அல்லாஹ் வாக்களிக்கின்றானோ அவை அனைத்தையும் பெறக்கூடிய நன்மக்களாக தொழுகை என்ற வணக்கம் அமைந்துள்ளது.

தொழுகை என்ற வணக்கம் எவ்வளவு நன்மைகளை நமக்கு வாரி வழங்குகிறது என்பதை இதன் மூலமும் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

முதல் ஆலயமான கஅபாவை அல்லாஹ் நிர்மாணம் செய்யக் கட்டளையிட்டதன் முக்கியமான நோக்கங்களில் ஒன்று “ருகூவு” செய்தல் ஆகும்.

”தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!” என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம்.

(அல்குர்ஆன்:2:125.)

“தவாஃப் செய்வோருக்காகவும், நின்று வணங்குவோருக்காகவும், ருகூவு செய்து ஸஜ்தா செய்வோருக்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத் துவீராக!” என்று (கூறி) அந்த ஆலயத்தின் இடத்தை இப்ராஹீமுக்கு நாம் நிர்ணயித்ததை நினைவூட்டுவீராக!

(அல்குர்ஆன்:22:26.)

தொழுகையின் ஒரு அம்சமான ருகூவு எவ்வளவு சிறப்பிற்குரிய செயல் என்பதை மேற்குறிப்பிடப்பட்ட வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ள முடியும்.

ருகூவு செய்யாதவர்களுக்கு நரகம் என்பதை அல்லாஹ் எச்சரிக்கின்றான்.

பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான். ருகூவு செய்யுங்கள்! என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் அவர்கள் ருகூவு செய்ய மாட்டார்கள்

(அல்குர்ஆன்:77:47, 48.)

நாம் தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் கொடிய நரகத்திலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.

ருகூவு செய்தல் சிறுபாவங்களை அழிக்கும்

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருந்த ஒரு இளைஞரைப் பார்த்தார்கள். அவர்  தனது  தொழுகை(யின் நிலை)யை நீட்டி அதிலேயே நீண்ட நேரம் நின்றார். இப்னு உமர் (ரலி) அவர்கள் “இவரை யாருக்குத் தெரியும்?” என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர்  “நான் (அறிவேன்)” என்று கூறினார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் “அவர் எனக்குத் தெரிந்தவராக இருந்திருந்தால் அவர் ருகூவையும், ஸுஜூதையும் நீட்டி(த் தொழுமாறு) ஏவியிருப்பேன்.

ஏனென்றால் “ஒரு அடியான் தொழுகின்றவனாக நிற்கும் போது அவனுடைய பாவங்கள் கொண்டு வரப்பட்டு அவனது தலையின் மீது அல்லது தோள்புஜத்தின் மீது வைக்கப்படுகிறது. அவர் ஒவ்வொரு தடவை ருகூவு செய்யும் போதும், ஸுஜூது செய்யும் போதும் அவனிடமிருந்து அந்தப் பாவங்கள் உதிர்ந்து விழுந்துவிடும்” என்ற நபியவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் எனக் கூறினார்கள்.

நூல்: இப்னு ஹிப்பான் (1734),  பாகம்: 5 பக்கம்: 26

ருகூவு செய்தல் நம்முடைய பாவங்களை அழிப்பதற்கு உதவுகின்றது. இந்தப் பாக்கியத்தை தொழுகையாளிகள் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.

இறைவனே மகத்துவப் படுத்துவதே ருகூவு

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அறிந்துகொள்ளுங்கள்: ருகூஉ  அல்லது சஜ்தாச் செய்து கொண்டிருக்கையில் குர்ஆன் (வசனங்களை) ஓத வேண்டாமென்று நான் தடை விதிக்கப்பெற்றுள்ளேன். ருகூஉவில் வலிவும் மாண்பும் உடைய இறைவனை மகிமைப் படுத்துங்கள். சஜ்தாவில் முனைந்து பிரார்த்தியுங்கள். உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியானதாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் (824)

நாம் இறைவனை மகத்துவப்படுத்தும் போது அது அல்லாஹ்வின் அன்பையும், நேசத்தையும் நமக்குப் பெற்றுத் தருகிறது. நபியவர்கள் ருகூவில் பல விதங்களில் இறைவனை மகத்துவப்படுத்தியுள்ளார்கள். அந்த வாசகங்களைக் கூறி நாம் மகத்துவப் படுத்தும் போது அவற்றில் அடங்கியுள்ள ஏராளமான பாக்கியங்களுக்கு நாம் சொந்தக்காரர்களாகி விடுகின்றோம்.

ருகூவில் ஓதும் துஆ – 1

சுப்ஹான ரப்பியல் அழீம்‘

பொருள்: மகத்துவமிக்க என் இறைவன் தூயவன்

அறிவிப்பவர்: ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி)

நூல்: முஸ்லிம் (1421)

ருகூவில் ஓதும் துஆ – 2

சுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக்க, அல்லாஹும்ம ஃக்ஃபிர்லீ

பொருள்: இறைவா! எம் அதிபதியே! நீ தூயவன்; உன்னைப் போற்றுகின்றோம்; இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி (794)

ருகூவில் ஓதும் துஆ – 3

“சுப்பூஹுன் குத்தூசுன், ரப்புல் மலாயிகத்தி வர்ரூஹ்‘

பொருள்: இறைவா! நீ தூயவன். மிகப் பரிசுத்தமானவன். வானவர்கள் மற்றும் ரூஹின் அதிபதி.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் (840)

ருகூவில் ஓதும் துஆ – 4

“அல்லாஹும்ம, லக ரகஃத்து, வ பிக ஆமன்து, வ லக அஸ்லம்து. ஹஷஅ லக சம்ஈ வ பஸரீ வ முஹ்ஹீ வ அழ்மீ வ அஸபீ”

பொருள்: இறைவா, உனக்காகக் குனிந்தேன். உன் மீதே நம்பிக்கை கொண்டேன். உனக்கே கட்டுப் பட்டேன். உனக்கே என் செவியும் பார்வையும் மூளையும் எலும்பும் நரம்பும் பணிந்தன

அறிவிப்பவர்: அலீ பின் அபீதாலிப் (ரலி)

நூல்: முஸ்லிம் (1419)

ருகூவில் ஓதும் துஆ – 5

சுப்ஹான தில்ஜபரூத்தி, வல்மலகூத்தி, வல்கிப்ரியாயி வல் அள்ம(த்)தி

பொருள்: அடக்கி ஆள்தலும், அதிகாரமும், பெருமையும், மகத்துவமும் மிக்க அல்லாஹ் பரிசுத்தமானவன்

அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)

நூற்கள்: நஸாயீ (1049), அபூதாவூத் (873), அஹ்மத் (24026)

ருகூவில் ஓதும் துஆ – 6

“சுப்ஹானக்க வபி ஹம்திக்க லாயிலாஹ இல்லா அன்த்த‘

பொருள்: இறைவா! உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன். உன்னைத் தவிர வேறு இறைவனில்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் (838)

ருகூவிலிருந்து எழும் நிலையில் உள்ள நன்மைகள்

ருகூவிலிருந்து எழுந்த பின் ஓத வேண்டிய பல துஆக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள். அவற்றை நாம் முறையாக ஓதி வரும் போது அந்த அற்புத துஆக்களில் கூறப்பட்டுள்ள பாக்கியங்களையும், நன்மைகளையும், இறைவனின் பொருத்தத்தையும் அடைவதற்கு, தொழுகை காரணமாக அமைகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இமாம் (தொழுகையில்) சமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்‘ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்) எனக் கூறினால் நீங்கள் “அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து‘ (இறைவா! எம் அதிபதியே! உனக்கே புகழ் அனைத்தும் உரியது) என்று கூறுங்கள். ஏனெனில் (இறைவனைத் துதிக்கும்) வானவர்களின் (துதிச்) சொல்லுடன் எவரது (துதிச்)சொல் (ஒரே நேரத்தில்) ஒத்து அமைகின்றதோ அவர், அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (796)

ருகூவிலிருந்து எழுந்திருக்கும் போது ஓதும் துஆ – 1

ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறிய பிறகு பின்வரும் துஆக்களில் ஏதாவது ஒன்றைக் கூறலாம்.

ரப்பனா ல(க்)கல் ஹம்து

நூல்: புகாரீ 789

ரப்பனா வல(க்)கல் ஹம்து

நூல்: புகாரீ 732

அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து

நூல்: புகாரீ 796

அல்லாஹும்ம ரப்பனா வல(க்)கல் ஹம்து

(பொருள்: எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்!)

நூல்: புகாரீ – 7346

ருகூவிலிருந்து எழுந்திருக்கும் போது ஓதும் துஆ – 2

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉவிலிருந்து தமது முதுகை நிமிர்த்தி விட்டால்,

“சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ். அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல்அர்ளி வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது”

என்று கூறுவார்கள்.

(பொருள்: அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கின்றான். இறைவா! எங்கள் அதிபதியே! வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப, அவற்றுக்குப் பின் நீ நாடிய இன்ன பிற பொருள்கள் நிரம்பப் புகழ் அனைத்தும் உனக்கே உரியது.)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி)

நூல்: முஸ்லிம் (819)

ருகூவிலிருந்து எழுந்திருக்கும் போது ஓதும் துஆ – 3

நபி (ஸல்) அவர்கள் (ருகூஉவிலிருந்து  நிமிர்ந்ததும்),

“அல்லாஹும்ம ல(க்)கல் ஹம்து, மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல் அர்ளி, வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது. அல்லாஹும்ம, தஹ்ஹிர்னீ பிஸ்ஸல்ஜி வல்பரதி வல்மாயில் பாரித். அல்லாஹும்ம, தஹ்ஹிர்னீ மினத் துனூபி வல்ஹத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினல் வஸஹி”

என்று பிரார்த்திப்பார்கள்.

(பொருள்: இறைவா! வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப, அவற்றுக்குப் பின் நீ நாடிய இன்ன பிற பொருள்கள் நிரம்பப் புகழ் அனைத்தும் உனக்கே உரியது. இறைவா, பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் குளிர்ந்த நீராலும் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! இறைவா, அழுக்கிலிருந்து வெண்மையான ஆடை தூய்மைப்படுத்தப்படுவதைப் போன்று பாவங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக!)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி)

நூல்: முஸ்லிம் (821)

ருகூவிலிருந்து எழுந்திருக்கும் போது ஓதும் துஆ – 4

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉவிலிருந்து தமது தலையை உயர்த்தியதும்,

“ரப்பனா! ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வல்அர்ளி, வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது. அஹ்லஸ் ஸனாயி வல்மஜ்த். அஹக்கு மா காலல் அப்து, வ குல்லுனா ல(க்)க அப்துன். அல்லாஹும்ம, லா மானிஅ லிமா அஃதைத்த, வலா முஃத்திய லிமா மனஃத்த, வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்க்கல் ஜத்”

என்று கூறுவார்கள்.

(பொருள்: எங்கள் அதிபதியே! வானங்களும் பூமியும் நிரம்பும் அளவுக்கு, நீ நாடும் இன்ன பிற பொருள்கள் யாவும் நிரம்பும் அளவுக்குப் புகழனைத்தும் உனக்கே உரியது. புகழுக்கும் மாண்புக்கும் உரியவனே! நாங்கள் அனைவரும் உன் அடிமைகள் தாம். அடியார்கள் கூறும் சொற்களிலேயே மிகவும் தகுதி வாய்ந்தது, “இறைவா! நீ கொடுத்ததைத் தடுப்பவர் யாருமிலர். நீ தடுத்ததைக் கொடுப்பவர் யாருமிலர். எந்தச் செல்வரின் செல்வமும் அவருக்கு உ(ந்தன் வேதனை த)ன்னிலிருந்து பயன் அளிக்காது‘ என்பதேயாகும்.)

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் (822)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *