இவ்வசனத்தில் (4:56) நரகவாசிகளின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை மாற்றிக் கொண்டே இருப்போம் என்று கூறப்படுகிறது.
வேதனைகளை உணரும் நரம்புகள் மனிதனின் தோலில் தான் உள்ளன. தோல் கரிந்து விட்டால் தீக்காயத்தை மூளை உணராது என தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறு தீக்காயம் ஏற்படும்போது மனிதன் துடிக்கிறான். ஆனால் பெருமளவு தோல் கருகிப் போனவன் துடிதுடிக்காமல் படுத்துக் கிடக்கிறான். அவன் சாதாரண தீக்காயம் பட்டவனை விட பன்மடங்கு துடிக்க வேண்டும். ஆனால் அவன் எந்த வேதனையும் இல்லாதவனைப் போல் படுத்துக் கிடப்பதை நாம் பார்க்கிறோம்.
காரணம் தீக்காயத்தின் வேதனையை மனிதன் உணர்வதற்கான தோல் கரிந்து விட்டதால் அவனுக்கு எந்த வேதனையும் தெரியாது என்று விஞ்ஞானிகள் இதற்கான காரணத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இது எப்படித் தெரியும்?
திருக்குர்ஆன் “அவர்களின் தோல் கருகும்போது அதை மாற்றுவோம்” என்று கூறாமல் “வேதனையை அவர்கள் உணர்வதற்காகவே மாற்றுவோம்” என்று 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் கூறுகிறதென்றால் மனிதனைப் படைத்த இறைவன் தான் இதைக் கூறியிருக்க முடியும்.
திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்கு இதுவும் வலுவான சான்றாக அமைந்துள்ளது.