தொழுகை – கடமையை மறந்தது ஏன்?

இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றாகவும், தலையாய வணக்கமாகவும் இருப்பது தொழுகையாகும்.  இத்தொழுகையில் முஸ்லிம்கள் மிகுந்த அலட்சியம் காட்டுகின்றனர்.  இதற்குக் காரணம் இறைவனையும்,  இறைகட்டளையையும், அவன் அருட்கொடைகளையும் நாம் மறந்தது தான்.

கற்சிலைகளையும் கண்ணில் கண்டவைகளையும் கடவுள் என எண்ணி வணங்கி வரும் மக்கள் கூட  (கற்பனை தெய்வங்களுக்கு) வணக்கத்தில் குறை ஏதும் வைப்பதில்லை. அலகு குத்துதல், ஆணிச்செருப்பு, பூ (தீ) மிதித்தல், மண்சோறு சாப்பிடுதல் என பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட, உடலை வருத்திக்கொள்ளக் கூடிய காரியங்களை வணக்கமாகச் செய்து வருகின்றனர். இது அவர்களுக்குப் பாரமாகவோ, சலிப்பாகவோ இருப்பதில்லை.

ஆனால் மிக எளிமையான மனித சக்திக்கு உட்பட்ட வணக்கங்களையே நம்முடைய மார்க்கம் நமக்கு ஏவுகிறது. ஐவேளைத் தொழுகை என்பது அனைத்து மனிதர்களும் நிறைவேற்றுவதற்கு சாத்தியமான மிக எளிமையான ஒரு வணக்கமே. இதை நாம் சரிவர நிறைவேற்றுகிறோமா என்றால் பதில் வெற்றிடமாகவே இருக்கிறது. அந்தளவிற்கு அதைச் செய்வதில் அலட்சியமாகவும், ஆர்வமில்லாதவர்களாகவுமே பெரும்பான்மையானோர் வாழ்கின்றனர்.  அசத்தியவாதிகளுக்குத் தமது  வணக்கத்தின் மீதுள்ள ஆர்வம் கூட சத்திய மார்க்கத்திலுள்ளவர்களிடம் காணமுடிவதில்லை என்பது வருத்தத்திற்குரியதே! இதோ நமது மார்க்கம் தொழுகையின் முக்கியத்துவத்தை பற்றிப் போதிப்பதைக் கேளுங்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக மனிதனுக்கும்  இணைவைப்பு மற்றும் இறைமறுப்புக்கும் மத்தியில் பாலமாக இருப்பது தொழுகையைக் கைவிடுவது தான்.

நூல்:முஸ்லிம் 134

புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நமக்கும், அவர்களுக்கும் (இறைமறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும். அதை விட்டவர் காஃபிராகி விட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: இப்னுமாஜா 194

இந்தத் தொழுகையாகிறது ஈமானுக்கும் இறை மறுப்பிற்கும் ஒரு திரையாகவும்,  ஒருவர் முஸ்லிம் என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் மிகப்பெரும் ஆயுதமாகவும் இருக்கிறது.  இதே போல் தொழுகையின் முக்கியத்துவத்தை உணர்த்தக்கூடிய ஏராளமான வசனங்களும், ஹதீஸ்களும் இருக்கின்றன.

இறைவன்  இத்தொழுகையை வலியுறுத்தியது போல் வேறு எந்த வணக்கத்தையும் வலியுறுத்தியதாகக் காணமுடியவில்லை. எந்தளவிற்கு என்றால், ஒரு தாய், தன் மகளுக்கு திரும்பத் திரும்ப அறிவுரை கூறுவதைப் போன்று அல்லாஹ்வும் குர்ஆனின் வழிநெடுகிலும் தொழுகையை நிலைநாட்டுமாறு முஃமின்களுக்கு அறிவுரை கூறுகிறான்.

நானே அல்லாஹ். என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. எனவே என்னையே வணங்குவீராக. என்னை நினைப்பதற்காக தொழுகையை நிலைநாட்டுவீராக!.

திருக்குர்ஆன்  20:14

இறைவனை நினைப்பதற்கான ஒரு சிறந்த வழியாக தொழுகையைக் குறிப்பிட்டு அதை நிலைநாட்டக் கட்டளையிடுகிறான்.

அற்ப உலகில் அழியும் அமல்கள்

ஒவ்வொன்றுக்கும் தகுந்த நேரம் குறிக்கப் பட்டிருப்பதைப் போன்று ஏக இறைவன் தன்னை வணங்குவதற்கும் குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயித்துள்ளான்.

நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கட்டாயக் கடமையாக உள்ளது.

திருக்குர்ஆன் 4:103

ஐவேளைத் தொழுகைகளை, குறிப்பிட்ட நேரங்களில் தொழுது முடித்துவிட வேண்டும். அதைப் பிற்படுத்தக் கூடாது என அல்லாஹ் முஃமின்களுக்குக் கட்டாயமாக ஆக்கியுள்ளான் என்பதை மேலுள்ள வசனம் தெளிவுபடுத்துகிறது.

அன்றாட வாழ்வில் காலை முதல் மாலை வரை நமது தேவைகளைச் செம்மையாகச் செய்து முடிப்பதற்கு ஒரு கால அட்டவணையை நிர்ணயித்து, அதன் அடிப்படையில் பம்பரமாய்ச் சுழன்று வருகிறோம். ஆனால்   கடமையான தொழுகைக்கான நேரத்தை நபி (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்தியிருந்தும் தற்போதுள்ள காலத்தில் தொழுகை நேரம் வந்தவுடன் அறிவிப்பு செய்யப்பட்டாலும் கூட குறிப்பிட்ட நேரத்தில் இறைவனை வணங்குவதில்லை.

நம் மார்க்கம் தொழுகைக்குப் பிறகு தான் ஏனைய விஷயங்கள் என்று கூறுகிறது. நாமோ நமது அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு நேரம் கிடைத்தால் தொழுகை என்றே வாழ்கிறோம். நிர்வாக மன்னர்களான ஆண்கள், உழைப்பு தான் பிரதானம்; மனிதன் உயிர் வாழப் பணமே இன்றியமையாமை; இறைவனுக்காகச் சிறிது நேரம் ஒதுக்கினால்  இலாபம் குறைந்து விடும் எனக்கருதி இறைவனை நினைக்க மறந்து விடுகின்றனர்.

வீட்டை ஆளும் இல்லத்தரசிகளோ, வீட்டா ருக்குப் பணிவிடை செய்வது, பிள்ளைகளைப்  பராமரிப்பது, வீட்டு வேலைகள் என தமது பொறுப்பைக் காரணம் காட்டி நழுவிச்செல்கின்றனர்.  ஆனால் தொழுகைக்குப் பிறகு தான் ஏனைய விஷயங்கள் என்றும் இறை நினைவிற்கு வேறு எதுவும் தடையாக இருக்கக் கூடாது எனவும் மார்க்கம் கூறுகிறது.

நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட் செல்வமும், மக்கட்செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசைதிருப்பி விட வேண்டாம்.  இதைச் செய்வோரே நட்டமடைந்தவர்கள்.

திருக்குர்ஆன்  63:9

இவ்வாறு பொருளாதாரத்தையும் பொறுப்பை யும் முன்னிறுத்தி இறைவனை வணங்கவே நேரம் இல்லை எனப் பேசுபவர்களுக்கு, திருமணம் போன்ற இதர விஷேசங்களில் கலந்து கொள்வதற்கும் ஊர் சுற்றுவதற்கும் நண்பர்களுடன் லூட்டி அடிப்பதற்கும் தொலைக்காட்சியிலேயே லயித்துப்போய் விடுவதற்கும் மட்டும் நேரம் நீண்டு கொண்டே செல்கிறது.

இவ்வுலக இன்பத்தில் மதிமயங்கும் போது பொருளாதாரமோ பொறுப்புச் சுமையோ கண்முன் வருவதில்லை. மாறாக மார்க்கம் என்று வரும்போது மட்டும்  இந்தச் சுமைகள் கண்ணை மறைக்கின்றன. அற்பமான இவ்வுலகத்தின் மீது நமக்கிருக்கும் ஆசையும் ஆர்வமும் இறைவணக்கத்தில் காண முடிவதில்லை.  ஆனால் இவ்வுலகமும் அதன் மீது மனிதன் கொண்ட காதலும் அழியக்கூடியவையே. இவ்வுலகம் கவர்ச்சியும் சோதனைக்கூடமும் தான். இதோ படைப்பாளன் கூறுகிறான்:

மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! தந்தை மகனைக் காக்க முடியாத, மகன் தந்தையைச் சிறிதும் காப்பாற்ற இயலாத நாளை அஞ்சுங்கள்! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது.  இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம்! ஏமாற்றுபவனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை ஏமாற்றி விட வேண்டாம்.

திருக்குர்ஆன்  31:35

செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியாகும்.  நிலையான நல்லறங்களே சிறந்ததுமாகும்.

திருக்குர்ஆன்  18:4

அழியக்கூடிய உலகிற்காக நன்மைகளை அழித்து வருகிறோம் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்.

தொழுகைகளை களாச் செய்யலாமா?

சிலர் தொழுகையைக் குறிப்பிட்ட நேரத்தில் தொழாமல் அந்த தொழுகையின் நேரம் முடிந்த பின் தொழலாம் என்று கருதுகின்றனர். இதனை களாத் தொழுகை எனவும் கூறுகின்றனர். ஆனால் மார்க்கத்தில் இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.  அல்லாஹ்வும், அவன் தூதரும் காட்டித்தராத எந்த ஒரு வணக்கமும் நிராகரிக்கப்படும். அது நன்மையாக அங்கீகரிக்கப்படாது. இதோ ஏந்தல் நபியின் எச்சரிக்கையைச் செவிமடுங்கள்:

அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள் கூறியதாவது:

நம்முடைய இந்த  (மார்க்க)  விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: புகாரி 2697

நமது மறதியின் காரணமாகவோ, உறக்கத்தின் காரணமாகவோ தொழுகையைத் தவறவிட்டால் நினைவு வந்தவுடன் அல்லது விழித்தவுடன் தொழுது கொள்ள அனுமதி உள்ளது.

அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள் கைபர் போரிலிருந்து திரும்பிய போது இரவு முழுவதும் பயனம் செய்தார்கள். இறுதியில் அவர்களுக்கு உறக்கம் வந்துவிடவே  (ஓரிடத்தில் இறங்கி)  ஓய்வெடுத்தார்கள் அப்போது பிலால் (ரலி) அவர்களிடம் இன்றிரவு எமக்காக நீர் காவல் புரிவீராக என்றார்கள். பிலால் (ரலி) அவர்கள்  (கண் விழித்து) அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அளவு தொழுதார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அவர்களுடைய தோழர்களும்  (படுத்து) உறங்கினார்கள். வைகறை நேரம்  (பஜ்ர்) நெருங்கிய வேளையில் பிலால் (ரலி) அவர்கள் வைகறை  (கிழக்கு) த்திசையை முன்னோக்கியபடி தமது வாகன (ஒட்டக)த்தில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்கள். அப்போது தம்மையும் அறியாமல் சாய்ந்தபடியே கண்ணயர்ந்து உறங்கிவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ, பிலால் (ரலி) அவர்களோ, நபித்தோழர்களில் எவருமோ சூரிய ஒளி தம்மீது படும்வரை விழிக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தாம் முதலில் கண் விழித்தார்கள். பதறியபடியே அவர்கள், பிலால்! என்றழைத்தார்கள். பிலால் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தங்களைத் தழுவிக் கொண்ட அதே உறக்கம் தான் என்னையும் தழுவிக்கெண்டது’’ என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்) உங்கள் வாகனங்களைச் செலுத்துங்கள் என்று கூற உடனே மக்கள் தம் வாகனங்களைச் செலுத்தி சிறிது தூரம் சென்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறங்கி) உளு செய்தார்கள். பிலால் (ரலி) அவர்களிடம் (பாங்கு மற்றும்) இகாமத் சொல்லச் சொன்னார்கள்.

பிலால் (ரலி) அவர்கள் இகாமத் சொன்னதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு சுப்ஹூத் தொழுகை தொழுவித்தார்கள். தொழுது முடிந்ததும், ‘‘தொழுகையை மறந்துவிட்டவர் நினைவு வந்ததும் அதைத் தொழுதுகொள்ளட்டும். ஏனெனில் அல்லாஹ் என்னை நினைவுகூரும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக (20:14) என்று கூறுகின்றான்’’ என்றார்கள். 

நூல்: முஸ்லிம் 1211

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்தில் ஏறிப் பயணத்தைத் தொடர்ந்தார்கள். நாங்களும் வாகனத்தில் ஏறி அவர்களுடன் சென்றோம், அப்போது எங்களில் சிலர் சிலரிடம் ‘‘நமது தொழுகை விஷயத்தில் நாம் செய்துவிட்ட குறைபாட்டிற்குப் பரிகாரம் என்ன?’’ என்று இரகசியமாகப் பேசிக்கொண்டோம்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அறிந்து கொள்ளுங்கள். என்னிடம் உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறதல்லவா? என்று கேட்டு விட்டு, ‘‘அறிந்து கொள்ளுங்கள். உறக்கத்தால் குறைபாடு ஏற்பட்டு விடுவதில்லை. குறைபாடெல்லாம் ஒரு தொழுகையை மறு தொழுகை நேரம் வரும்வரை தொழாமல் இருப்பதுதான்.  இவ்வாறு செய்துவிட்டவர் அது பற்றிய உணர்வு வந்தவுடன் தொழுது கொள்ளட்டும்.

மறுநாளாகி விட்டால் அந்த நாளின் தொழுகையை உரிய நேரத்தில் தொழுது கொள்ளட்டும் என்றார்கள்.

நூல்: முஸ்லிம் 1213

மேற்கூறிய காரணத்திற்காகவே தவிர வேறு எதற்காகவும் தொழுகையைத் தவற விடக் கூடாது.

மேலும் இந்த ஹதீஸில் கவனிக்க வேண்டியவை என்னவென்றால், தூக்கத்தினால் தொழுகையின் நேரம் தவறியதால் விழிப்பு வந்ததும் அதை நிறைவேற்றி விடுகின்றனர். எனினும் நேரம் தவறியது பாவமாகி விடுமோ என்று நபித்தோழர்களின் உள்ளம் பயத்தில் படபடக்கிறது.

இதை உணர்ந்த நபிகளார், வேண்டுமென்றே தொழுகையைத் தாமதப்படுத்துவது தான் குற்றம் எனத் தெளிவுபடுத்திய பின் தான் ஸஹாபாக்களின் உள்ளம் அமைதி பெறுகின்றது. ஆனால் இன்றோ அற்ப காரணங்களுக்காகவெல்லாம் வணக்கத்தைப் பாழ்படுத்துகிறோம்; தாமதப்படுத்துகிறோம். அதை நினைத்து நம் உள்ளம் சற்றும் களங்குவதுமில்லை; கவலைப்படுவதுமில்லை என்பது தான் வேதனைக்குரிய விஷயம்.

தொழுகையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை உரிய நேரத்தில் நிறைவேற்றுகின்ற நன்மக்களாக ஆவோம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed