தொடர்ந்து மூன்று வாரங்கள் ஜுமுஆ தொழாமல் விட்டால்

அவர் உள்ளம் பாழடைந்த உள்ளம் என்று சொல்கிறார்களே இது உண்மையா?

இஸ்லாமிய மார்க்கத்தில் ஐவேளை தொழுகை எவ்வாறு கடமையாக்கப்பட்டு இருக்கிறதோ அதே போல ஜுமுஆ தொழுகையும் கடமையாக ஆக்கப்பட்டுள்ளது. ஜுமுஆ தொழுகையின் அவசியத்தையும், அதன் சிறப்புகள் குறித்தும் பல்வேறு செய்திகளை நபி [ஸல்] அவர்கள் கூறி இருக்கின்றார்கள்.

தொடர்ந்து மூன்று வாரங்கள் ஜுமுஆ தொழாமல் விட்டால் அவர் உள்ளம் பாழடைந்த உள்ளம் என்று சொல்லப்படுகிறதே என்று கேட்கப்படுவதைப் போல, மூன்று ஜுமுஆ விட்டவர்கள் காஃபிர்கள் என்றும் சில மக்களால் சொல்லப்படுகின்றது. இது குறித்து வரும் ஹதீஸை பார்ப்போம்.

அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் சொற்பொழிவு மேடையின் படிகளில் நின்றபடி மக்கள் ஜுமுஆக்களைக் கைவிடுவதிலிருந்து விலகியிருக்கட்டும். அல்லது அவர்களின் இதயங்கள் மீது அல்லாஹ் முத்திரை பதித்துவிடுவான். பிறகு அவர்கள் அலட்சியவாதிகளில் சேர்ந்து விடுவர் என்று கூறியதை நாங்கள் கேட்டோம்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் [ரலி]

மற்றும் அபூஹுரைரா [ரலி]

நூல்: முஸ்லிம்(1570)

இதில் அல்லாஹ்வின் தூதர் சொல்வது என்னவெனில், ஜுமுஆவின் வணக்கத்தை கைவிட வேண்டாம் என்றும் அவ்வாறு அலட்சியப்படுத்தி விடுபவரின் உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையை குத்தி விடுகிறான் என்றும் சொல்கிறார்கள்.

“யக்திமன்ன” என்ற வார்த்தைக்கு முத்திரையை குத்தி விடுகிறான் என்ற பொருள். இதுபோல திருக்குர்ஆனில் பல இடங்களில் இந்த வார்த்தை பயன் படுத்தப்பட்டுள்ளது. இறைமறுப்பாளர்களை பற்றி அல்லாஹ் குர்ஆனில் சொல்லும் போது

அவர்களது உள்ளங்களிலும், செவியிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான் அவர்களின் பார்வைகளில் திரை உள்ளது. அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு.

(திருக்குர்ஆன்:2:7.)

கதம” என்ற சொல் இங்கே பயன் படுத்தப்பட்டுள்ளது இதற்கு முத்திரை இட்டு விட்டான் என்று பொருள்.

அல்லாஹ்வை பற்றிய செய்திகளை இறைமறுப்பாளர்களிடம் சொன்னால் அவர்களுடைய உள்ளம் முத்திரை இடப்பட்டு விட்டதால், என்ன சொல்லப்பட்டாலும் அவர்களுடைய உள்ளத்தில் அது சென்றடையாது. எனவே நேர்வழி குறித்து சிந்தித்து விளங்க மாட்டார்கள். என்று திருமறைக் குர்ஆன் சொல்கிறது.

அது போலவே ஜுமுஆ தொழுகையை விடுவரின் உள்ளத்தில் முத்திரை இடப்படுகிறது. அதாவது ஜுமுஆவில் கலந்து கொள்வதின் மூலம் பல நல்ல விஷயங்களை உபதேசம் கேட்கும் வாய்ப்பு ஒருவருக்கு கிடைக்கிறது, அதனால் அவருடைய நம்பிக்கை வளரும், நன்மையான காரியங்களை செய்ய அவருடைய உள்ளம் தூண்டும். நல்ல அமல்கள் செய்ய கூடியவராக அவர் மாறிவிடுவார். தீமையான காரியங்களிலிருந்து விலகுவதற்கும் அந்த உபதேசம் பயனளிக்கும்.

ஜுமுஆ தொழுகையை விட்டுவிடும்போது இமாம் உரையாற்றுவதில் சொல்லப்படும் நல்ல பல உபதேசங்கள் அவருடைய காதில் விழாமல் போகும் நிலை ஏற்படுகிறது. நல்ல அமல்கள் செய்வதில் அவருடைய உள்ளம் அவரை தூண்டாது. அதனால் அமல்கள் செய்யும் ஆர்வம் அவரிடம் நாளடைவில் குறைந்து, கடமையான தொழுகை போன்ற வணக்கங்களை கூட அலட்சியப்படுத்தக் கூடியவராக, நாளடைவில் தீமைகளை செய்யக்கூடியவர்களில் ஒருவராக அவரது உள்ளம் அவரை மாற்றி விடும் என்பதே நபி ஸல் அவர்கள் சொன்ன ஹதீஸின் விளக்கமாகும். நபிகளாரின் அடுத்த எச்சரிக்கையை பாருங்கள்

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுகையில் கலந்துகொள்ளாத சிலர் குறித்து, “நான் ஒரு மனிதரிடம் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறிவிட்டு, பின்னர் ஜுமுஆத் தொழுகையில் கலந்துகொள்ளாமல் (வீட்டில்) இருப்பவர்களை (நோக்கிச் சென்று அவர்களை) வீட்டோடு சேர்த்து எரித்துவிட வேண்டும் என எண்ணியதுண்டு” என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் (1156)

ஜுமுஆ தொழுகையில் கலந்துகொள்ளாமல், வீட்டில் இருப்போருக்கு நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையைப் பாருங்கள். வீட்டோடு சேர்த்து எரித்துவிட நினைத்துள்ளார்கள் எனில், ஜுமுஆ எவ்வளவு அவசியமான வணக்கம் என்பதை அறியலாம்.

நபி ஸல் அவர்கள் ஜுமுஆ உரைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஜுமுஆவிற்கு வரும் ஒருவர் உரையின் பாதியில் வந்து அமராமல் ஆரம்பத்திலேயே வர நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்துவதைப் பாருங்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ஜும்ஆ நாளில் கடமையான குளிப்புப் போல் குளித்துவிட்டுப் (பின்னர்) பள்ளிக்கு வந்தால் ஓர் ஒட்டகத்தை இறைவழியில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்குள் வந்துவிட்டால் வானவர்கள் ஆஜராகி போதனையைக் கேட்கிறார்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி (881)

இமாமின் உரையை மக்கள் முழுமையாக கேட்க வேண்டும் என்பதற்காக, முதலில் வருபவர் அதற்கடுத்து வருபவர் என்று வகைப்படுத்தி, ஒட்டகம், மாடு, ஆடு, கோழி, முட்டை போன்றதை குர்பானி கொடுத்த கூலியை பெறுகிறார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஜுமுஆ தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் உரைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வலியுறுத்தியுள்ளார்கள். ஜுமுஆவிற்கு வருபவர் யாரிடமும் பேசாமல் மவுனமாக அமர்ந்து இமாமின் உரையை கேட்குமாறு அறிவுரை அளிக்கிறார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிருப்பவரிடம் ‘வாய்மூடு!’ என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்.’

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (934)

அதே போல இமாம் மிம்பரில் ஏறும் வரை ஜுமுஆ விற்கு வரும் மக்களை மலக்குமார்கள் தங்களுடைய ஏடுகளில் குறிப்பிட்டுக் கொள்வார்கள். இமாம் ஜுமுஆ உரைக்காக மிம்பரில் ஏறி விட்டால் மலக்குகள் தங்களின் ஏடுகளை மூடிவிடுவதாகவும் நபி ஸல் அவர்கள் கூறி இருக்கிறார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜும்ஆ நாள் (வெள்ளிக்கிழமை) வந்துவிட்டால் வானவர்கள் (ஜும்ஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வசாலிலும் (இருந்த வண்ணம்) முதன் முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இமாம், உரை மேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்துவிட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்துவிட்டு (அவரின் உபதேச) உரையைச் செவிமடுத்த வண்ணம் (உள்ளே) வருவார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (3211)

இந்த போதனையிலும் ஜுமுஆவுடைய உரையை கேட்காமல் நம்முடைய இதயம் முத்திரை குத்தப்பட்டதாக ஆகிவிடக்கூடாது என்பதால் தான் நபி (ஸல்) அவர்கள் இந்த அளவுக்கு ஆர்வப்படுத்தியுள்ளார்கள். மேலும் ஜுமுஆவின் உரையை மக்கள் கேட்க வேண்டும்; அதற்காக விரைந்து வரவேண்டும் என்பதை நபி [ஸல்] அவர்கள் எந்த அளவுக்கு வலியுறுத்துகிறார்கள் என்பதை பாருங்கள்.

எடுத்து வைக்கும் அடியை தொடுத்து வரும் நன்மை

யார் (தலையை) கழுவி, குளித்து ஆரம்ப நேரத்திலேயே புறப்பட்டு முந்தியே (பள்ளிக்கு) வந்து, இமாமுக்கு நெருக்கமாக இருந்து உரையை செவியுற்று, ஜும்ஆவை வீணாக்காமல் இருக்கின்றரோ அவருக்கு அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு நோன்பு நோற்று, ஓர் ஆண்டு நின்று வணங்கிய கூலி உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி),
நூல் : நஸயீ (1381)

இதே கருத்தில் அமைந்த பல்வேறு ஹதீஸ்களில் “வாகனத்தில் வராமல்….” என்பதும் சேர்த்து அறிவிக்கப் பட்டுள்ளது

ஒருவர் தொடர்ந்து ஜுமுஆவை விடுவதால் அவர் இமாமின் உரையில் சொல்லப்படும் நல்ல செய்திகளை கேட்க முடியாதவறாகி விடுகிறார் அதனால் அவரின் இதயம் முத்திரை இடப்பட்டதாகி விடுகிறது. இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ உரைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதை மேற்கண்ட செய்திகளிலிருந்து அறியலாம்.

ஜுமுஆ குறித்து முத்திரை என்ற வாசகம் தான் இடம் பெற்று இருக்கிறதே தவிர, பாழடைந்த உள்ளம் என்ற கருத்தில் ஹதீஸ் இல்லை. அது போல, மூன்று ஜுமுஆக்களை விட்டவர் காஃபிர் ஆகிவிட்டார் என்று கூறுவதற்கும் ஆதாரம் இல்லை.
—————-
ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed