தேனீக்களும், தேனும்

தேன் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்ற உண்மை இவ்வசனத்தில் (16:68,69) கூறப்படுகிறது.

இதில் நான்கு அறிவியல் உண்மைகள் கூறப்பட்டுள்ளன.

தேனீக்கள் தேனைச் சேமிப்பதற்காக எவ்வளவு தொலைவுக்குச் சென்றாலும், எவ்விதத் தடுமாற்றமும் இல்லாமல் தமது கூட்டுக்குள் வந்து சேர்ந்து விடும் என்று உயிரியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

“நீ எளிதாகச் சென்று திரும்பு” என்று தேனீக்களுக்கு இறைவன் உள்ளுணர்வு ஏற்படுத்தியிருப்பதாக இவ்வசனத்தில் கூறப்படுகின்றது.

தேனீக்கள் எவ்வளவு தூரம் சென்றாலும் அவை எளிதாகத் திரும்பி விடும் என்பதையும், அதற்கேற்ப தேனீக்களுக்குள் உள்ளுணர்வை ஏற்படுத்தியிருப்பதையும் திருக்குர்ஆன் அன்றே கூறி விட்டது.

(இது குறித்து 474வது குறிப்பில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது)

இரண்டாவதாக, தேனீக்கள் மலர்களிலும், கனிகளிலும் உள்ள திரவத்தை உறிஞ்சி அதைக் கொண்டு வந்து கூட்டில் சேமிக்கிறது என்றும், அந்தக் கூட்டில்தான் தேன் தயாரிக்கப்படுகிறது என்றும் முற்காலத்தில் நம்பி வந்தனர்.

இது தவறு என்று இன்றைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தேனீக்கள் அந்தத் திரவத்தைத் தமக்கு உணவாகத்தான் உட்கொள்கின்றன. தேனீக்களின் உடலுக்குள்ளே தான் அத்திரவத்தைத் தேனாக மாற்றுகின்ற பணி நடக்கின்றது என்றும், தேனாக மாற்றுவதற்கு தேன்கூட்டில் எந்தத் தொழில்நுட்பமும் இல்லை என்றும் கண்டறிந்துள்ளனர்.

இந்த உண்மையையும் திருக்குர்ஆன் இவ்வசனத்தில் சொல்கிறது. “மலர்களிலிருந்தும், கனிகளிலிருந்தும் நீ சாப்பிடு” என்று கூறுவதன் மூலம் அவை அத்திரவத்தை உணவாகத்தான் உட்கொள்கின்றன என்ற உண்மையை திருக்குர்ஆன் தெளிவாகச் சொல்கின்றது.

மூன்றாவதாக, தேனீக்கள் மலர்களிலிருந்து உணவாக உட்கொண்ட இந்தத் திரவம் தேனீக்களின் வயிறுகளில் ரசாயன மாற்றம் அடைந்து தேனாக உற்பத்தியாகின்றது.

தேனீக்களின் கழிவு வெளியேறும் துவாரத்தைத் தவிர, தேன் வெளியேறுவதற்காக மற்றொரு துவாரமும் தேனீக்களிடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தத் துவாரம் வழியாக வெளியேறும் தேன் தான் தேன்கூடுகளில் சேமித்து வைக்கப்படுகிறது.

இதை இன்றைய விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கின்றார்கள்.

ஆனால் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் அருளப்பட்ட திருக்குர்ஆன், தேனீக்கள் சாப்பிட்ட பிறகு அதன் வாயிலிருந்து தேன் வெளிப்படுகிறது என்று சொல்லாமல், “அதன் வயிறுகளிலிருந்து தேன் வெளிப்படுகிறது” என்று கூறுகின்றது.

சமீப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகளை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த எந்த மனிதனாலும் கூறுவதற்குச் சாத்தியமில்லை.

நான்காவதாக, தேனில் இருக்கின்ற மருத்துவக் குணத்தை எல்லா விதமான மருத்துவத் துறையினரும் ஒப்புக் கொள்கின்றனர். அதுவும் இவ்வசனத்தில் கூறப்படுகிறது.

“திருக்குர்ஆன் மனிதனது வார்த்தை இல்லை” என்பதை மிகத் தெளிவாக உணர்த்துகின்ற வசனமாக இது அமைந்துள்ளது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *