தூதர்கள்
மனிதர்களை நல்வழிப்படுத்த மனிதர்களிலிருந்தே தகுதியானவர்களை இறைவன் தேர்வு செய்து ஒரு வாழ்க்கை நெறியைக் கொடுத்து அனுப்புவான். இவ்வாறு அனுப்பப்படுவோரை இறைத்தூதர்கள் என இஸ்லாம் குறிப்பிடுகிறது.
முதல் மனிதரிலிருந்து இறுதித் தூதராகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை ஏராளமான தூதர்கள் உலகின் பல பாகங்களுக்கும், பல்வேறு மொழிகள் பேசும் மக்களுக்கும் நல்வழி காட்ட அனுப்பப்பட்டனர்.
இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்களின் எண்ணிக்கை குறித்து திருக்குர்ஆனிலோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஏற்கத்தக்க பொன்மொழிகளிலோ குறிப்பிடப்படவில்லை.
ஒரு இலட்சத்து இருபத்தி நான்காயிரம் நபிமார்கள் அனுப்பப்பட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்னத் அஹ்மத் உள்ளிட்ட சில நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை அறிவிக்கும் மூன்றாவது அறிவிப்பாளரான அலீ பின் யஸீத் என்பவர் பொய் சொல்பவர் என்று சந்தேகிக்கப்பட்டவர். அவர் கூறியதாக அறிவிக்கும் நான்காவது அறிவிப்பாளர் முஆன் பின் ரிஃபாஆ என்பவர் பலவீனமானவர். எனவே இது ஏற்கத்தக்க செய்தி அல்ல.
தூதர்களாக அனுப்பப்படுவோர் எல்லா வகையிலும் மனிதர்களாகவே வாழ்ந்தனர். தூதர்களாக நியமிக்கப்பட்டதால் அவர்களுக்கு இறைத்தன்மை வழங்கப்படவில்லை. இறைவனிடமிருந்து செய்தி அவர்களுக்குக் கிடைக்கும் என்பதே அவர்களுக்குரிய முக்கிய சிறப்பாகும்.
நபிமார்கள் என்பதும் தூதர்கள் என்பதும் இருவேறு தகுதிகளை உடையது எனச் சிலர் கூறுகின்றனர். இதற்குச் சான்று ஏதுமில்லை.